Mar 22, 2012

கல்கியில்…


இந்த வார 25.03.2012 தேதியிட்ட கல்கியில் என்னுடைய மூன்றாவது சிறுகதை வெளியாகி உள்ளது. மிகுந்த சந்தோசத்தில் நான் இப்போது இந்த இடுகையை எழுதுகிறேன். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. ஆனால், சில நண்பர்களிடமிருந்து வரும் விமர்சனங்கள் என்னை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றது. இதுவரை 42 சிறுகதைகள் எழுதி இருந்தாலும் இன்னும் நான் ஆரம்ப நிலை எழுத்தாளன்தான். அதனால் என்னை மிகப் பெரிய எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு பாராட்டவும் வேண்டாம், திட்டவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். என்னை கொஞ்சம் வளரவிடுங்கள்!



அதே போல் சில நண்பர்களும், உறவினர்களும் நான் எழுதும் எல்லாக் கதைகளையும் என்னுடைய சொந்த கதைகளாகவே பார்க்கிறார்கள். எல்லாக் கதைகளும் எப்படி சொந்த கதையாக இருக்க முடியும்? ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், எப்படி உன் வாழ்வில் இத்தனை காதல்கள் வந்தது?என்கிறார். இவர்களுக்கு எல்லாம் நான் என்ன சொல்லி புரியவைப்பது? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக எனக்குப் புரிந்துவிட்டது. அனைவரும் என் கதைகளை படிக்கிறார்கள். அனைவரையும் என் கதைகள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதுதான் என் கதைகளுக்கு கிடைக்கும் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

இதோ இப்போது என் கல்லூரி தோழர் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு மெயில் வந்தது இந்தக் கதையைப் பற்றி:

பால் மணம் மாறா பாலகன் கோபிபெண்

பால் மனம் அறியாது பாதை மாற, அதை
லால்குடி நாதன் தகைசால் தமிழில்,. கடைக்
கால் அறை அடியில் வெளிக்கொணர்தானே!
 சொல்லவே இல்ல! யாரு அது.. எந்த காலேஜு?

இவண்
 ஹரிஹரன்

அனைவராலும்  இப்போது கவனிக்கப்படுவதால் என் பொறுப்பு அதிகமாக ஆகிவிட்டதை உணர்கிறேன். இனிமேல் இன்னும் தரமான கதைகளை எழுத வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

என் கதைகளை வெளியிடும் கல்கி நிறுவனத்திற்கும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நண்பர், எழுத்தாளர், உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


2 comments:

NAGARAJAN said...

முந்தைய இரு கதைகள் ஏற்படுத்திய தாக்கம் இக்கதையில் இல்லை.

என். உலகநாதன் said...

//NAGARAJAN said...
முந்தைய இரு கதைகள் ஏற்படுத்திய தாக்கம் இக்கதையில் இல்லை.//

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. நிச்சயம் அடுத்து வரும் கதைகளில் சரி செய்துவிடுவோம்.