Jun 29, 2011

மிக்ஸர் - 29.06.2011

                                           (என் செல்லங்களுடன் நான்)

சென்ற வாரம் முழுவதும் தாய்லாந்தில் இருந்தேன். சில வருடங்களாக போக நினைத்து இந்த வருடம்தான் போக முடிந்தது. குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றிருந்தேன். தாய்லாந்து போகும் முன் நண்பர்களிடம் என் பயணத்தைப் பற்றி கூறியபோது அனைவரும் கேட்ட ஒரே கேள்வி, "பேங்காக்குக்கு குடும்பத்துடன் போகிறீர்களா" என்றுதான். அவர்கள் கேட்ட கேள்வியின் அர்த்தம் அங்கே சென்றவுடன் தான் எனக்கு தெரிந்தது. பேங்காக்கில் தங்கியிருந்தாலும் பட்டையாவுக்கும் சென்று வந்தோம். தாய்லாந்து பயணத்தைப் பற்றி விரிவாக ஒரு பயணக்கட்டுரை எழுதலாமா? என யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் என்ன ஒரு பிரச்சனை என்றால், இரண்டுவிதமான பயணக்கட்டுரைகள் எழுத வேண்டி இருக்கும்:

01. தாய்லாந்து பயணக்கட்டுரை - பகல்
02. தாய்லாந்து பயணக்கட்டுரை - இரவு

இரவு பயணக்கட்டுரையைப் பற்றி எழுத ஆசை. ஏனென்றால் அந்த அசிங்கத்தைப்பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதில் எனக்கு ஒரு ஆபத்து இருக்கிறது, என்னவென்றால் கட்டுரையை வீட்டில் படிக்க நேர்ந்தால், 

"அப்போ நீங்க அன்னைக்கு வாக்கிங் போறேன் சொல்லிட்டு போனது அங்கதானா?" என்று கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் நான் எந்த தப்பும் பண்ணவில்லை, பார்க்க மட்டும்தான் செய்தேன் என்று சொன்னால் யாரும் நம்பப் போவது இல்லை? 

அதனால் கட்டுரை 2 வர வாய்ப்புகள் குறைவு.

*****************************************************

தாய்லாந்தில் இப்போது தேர்தல் நேரம். ஆனால் நம் ஊர் போல அப்படி ஒன்றும் ஆராவாரம் இல்லை. அங்கங்கே போஸ்டர்கள் பார்க்க நேர்ந்தது. ஒரே ஒரு விசயத்தில் அவர்களும் நம்மவர்கள் போலயே இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். எல்லா போஸ்டர்களிலும் கண்ணையோ அல்லது முகத்தையோ கிழித்து ஓட்டையாகி வைத்திருக்கிறார்கள். முன்னால் பிரதமர் தக்சினுக்கு இன்னமும் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை அங்கே உள்ளவர்களிடம் பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் அவர் நாட்டுக்குள் உள்ளே வர தடை உள்ளதால், அவரின் பெண் இந்த வருடம் பிரதம வேட்பாளராக நிற்கிறார்.

தாய்லாந்திலும் "No Vote"  campaign நடத்துகிறார்கள். நம்ம ஊர் 49 ஒ போல. கீழே உள்ள போஸ்டரை பாருங்கள். இந்த போஸ்டர் என்ன சொல்கிறது என்றால், "Don't Release the Animals into Parliament." யாருமே பார்லிமெண்ட் போக தகுதியானவர்கள் அல்ல. அதனால் ஓட்டு போட விரும்பாதவர்கள் உங்கள் வெறுப்பை இங்கே தெரிவிக்கலாம். அர்சாங்கம் இந்த மாதிரி போஸ்டர்களை அகற்றச் சொல்லியும் யாரும் கேட்டதாக தெரியவில்லை. 


*****************************************************

தாய்லாந்து மன்னருக்கு இப்போது வயது 84. நோய்வாய் பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளார். அவருக்கு பிறகுதான் அவர் மகன் மன்னராக முடியும். மன்னரின் மகனுக்கு இப்போது வயது 58 அல்லது 59 இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள், எததனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. ஏனோ இதை கேள்விப் பட்டவுடன் 'தளபதி' நினைவு வந்து போனதை என்னால் தடுக்க முடியவில்லை.

*****************************************************

தாய்லாந்து முழுக்க புத்தர் கோயில்கள்தான். நம் ஊரில் பிறந்த மகானை அவர்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். விதவிதமான புத்தர் சிலைகள் எல்லா கோவில்களிலும் இருக்கின்றது. ஒரு புத்தர் கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் எங்கள் அருகில் வந்தார். என் பையனை பார்த்தார். பிறகு என்னிடம்,

"உன் பையன் மிகவும் புத்திசாலி. பெரிய ஆளாக வருவான். ஆனாலும் பிளே பாய் போல் இருப்பான். இப்போதிலிருந்தே கவனமாக இருங்கள்" என்று கூறினார்.

"ஏன் இப்படி சொல்கின்றீர்கள்?" என்றேன்.

"எனக்கு எதிர்காலத்தைப் பற்றி கணிக்கத் தெரியும்"

"சரி, எதை வைத்து இப்படி கணித்தீர்கள்?"

"உங்கள் பையனுக்கு இரட்டைச் சுழி. அதான்"

"அப்படியானால், எனக்குக் கூட தான் இரட்டை சுழி" என்றேன்.

"இருங்கள், நான் பார்க்கிறேன்" என்றவர் அருகில் வந்து பார்த்தாள். எனக்கு உண்மையிலேயே இரட்டைச் சுழிதான். இப்போது முடி எல்லாம் கொட்டி போய்விட்டதால், தலையே ஒரே சுழியாகத்தான் தெரியும். இருந்தாலும் அவர் எனக்கு இரட்டைச் சுழி என்பதை கண்டு பிடித்துவிட்டார்.

"ஆமாம். நீங்களும் ஒரு ப்ளே பாயாகத்தான் இருக்க முடியும்" என்றா.

நான், "இல்லவே இல்லை. நான் உத்தமன்" என்றேன்.

"அதை உங்கள் மனைவி சொல்லட்டும்" என்றார்.

ஏனோ என் மனைவி ஒரு பதிலும் சொல்லவில்லை.

*****************************************************

தாய்லாந்தில் அதுவும் பேங்காக்கில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள் தான். அதுவும் சில இடங்களில் ஒரு மேம்பாலத்தின் மேல் இன்னொரு மேம்பாலம் என்று இருக்கிறது. பேங்காக் முழுவதுமே மேம்பாலங்களால் நிரம்பி உள்ளது. இத்தனை மேம்பாலங்கள் இருந்தும் டிராபிக் ஜாம் நம்ம சென்னை போல்தான் உள்ளது.

எல்லா ஹோட்டலிலும் என்ன இருக்கிறதோ இல்லையோ ரிசப்ஷனில் நிறைய ஆல்பம் வைத்திருக்கிறார்கள். அதில் விதவிதமாக பெண்கள் போட்டோக்கள்தான். எல்லா கார் டிரைவரும் கேட்கும் முதல் கேள்வி 'அது' வாகத்தான் இருக்கும். நல்ல வேளை நாங்கள் காரில் பயணிக்கவில்லை. கம்பனியே பெரிய டயோட்டா வேனும், கைடும் ஏற்பாடு செய்திருந்ததால் அந்த தொல்லை இல்லை. ஆனால், நம்ம ஊர் ஆட்டோ ரிக் ஷா போல் ஒரு வாகனம் உள்ளது. அதன் பெயர் டுக் டுக். அவர்களிடம் இருந்து தப்பிப்பதுதான் பெரிய விசயமாக உள்ளது.

எனக்கும் ஒரு 'டுக் டுக்' டிரைவருக்கும் நடந்த உரையாடல்:

"சார், ஏதாவது பார்க்கணுமா?"

"இல்லை ஒன்றும் வேண்டாம்"

"ஒண்ணும் வேணாம்னா இரவு 10 மணிக்கு இந்த பக்கம் எங்க போறீங்க?"

"சும்மா வாக்கிங் போறேன்"

"எதுக்கு?"

"சும்மா ஹெல்த் நல்லா இருக்கத்தான்"

"ஏற்கனவே பார்க்க ஹெல்தியா தானே இருக்கீங்க?"

"இருந்தாலும் சாப்பிட்டது செரிக்க வேணும்ல. அதுக்காகத்தான்"

"ஹோட்டல ஜிம் இருக்குல்ல அங்க போக வேண்டியதுதானே வாக்கிங்"

"என் இஷ்டம்"

"ஒண்ணும் பார்க்க புடிக்கலை. எங்கேயும் போக விருப்பம் இல்லை. டான்ஸ் பார்க்க வர பிடிக்கலை. ரூம் உள்ளேயே இருந்து தொலைய வேண்டியதுதானே? ஏன் வெளியே வந்து எங்க உயிர வாங்கறீங்க"

நான் எந்த விதத்தில் அவரின் உயிரை வாங்கினேன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை.

*****************************************************
                                                                                                                                                                                                                                                       

Jun 15, 2011

இப்படிக்கூட மனிதர்கள் இருக்கின்றார்களே!


ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கும் ஒருவன் கல்லூரி வரை எந்த கவலையும் இல்லாமல் படிக்கிறான். பிறகு வேலைக்கு கஷ்டப்படுகிறான். ஒரு வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்கிறான். அவன் திருமணம் காதல் திருமணமா இல்லை பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமா என்ற விவாதத்திற்கு இப்போது செல்ல வேண்டாம். 

அழகான குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். சந்தோசமாக இருக்கிறான். மனதில் ஒரு சின்ன சந்தேகம் அவனுக்கு வருகிறது. தனக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா? அந்த பயம் அவனுக்கு அதிக நாள் நீடிக்காமல் அவள் மனைவி கர்ப்பமாகிறாள். துள்ளிக்குதிக்கிறான். அவளை அப்படி தாங்குகிறான். அவள் கேட்டதெல்லாம் வாங்கித் தருகிறான். பத்து மாதத்தில் அழகான பெண் பிள்ளையை பெற்றுத் தருகிறாள் மனைவி. அவன் ஆண் குழந்தை வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தும், அதை மறந்து விட்டு தன்னை ஒரு ஆண் என்று இந்த உலகத்திற்கு நிரூபித்த தன் மகளை கொஞ்சுகிறான்.

அதன் பிறகு அவன் வாழ்க்கை முறையே மாறிப்போகிறது. மனைவிடமிருந்து சிறிது விலகுகிறான். அதிக நேரம் மகளுடன் செலவழிக்கிறான். அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறான். பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் ஆரம்பித்து மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி வரை அவ்வளவு செலவு செய்கிறான். ஊரையே கூட்டுகிறான். எல்லோருக்கும் செலவு செய்கிறான்.

பின் அவளுக்கு 3 வயது ஆகும் போது பாலர் பள்ளியில் சேர்க்கிறான். அவள் டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ ஏ எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று அப்போதே ஆசைப்படுகிறான். பின் அவளின் ஒவ்வொரு பேச்சையும் ரசிக்கிறான். அவள் பள்ளி விட்டு வந்ததும் அவள் பேசுவதை ஆசைத் தீர கேட்கிறான். பின் அவள் மேல் நிலைப் பள்ளியில் சேர்கிறாள். அவளின் ஒவ்வொரு வளர்ச்சியும் பார்த்து சந்தோசம் அடைகிறான். அவளுக்கு ஓரளவு விவரம் தெரிந்து அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திணருகிறான். மெல்ல கவலை அடைகிறான்.

சீக்கிரமே பருவம் அடைந்து விடுவாளோ? மனைவியிடம் கேட்கிறான். +2 படிக்கையில் அவள் பருவம் அடைகிறாள். சந்தோசம் அடைகிறான். அந்த நேரத்தில் மகள் அப்பாவிடம் இருந்து சிறிது விலகுகிறாள். அம்மாவிடம் ஒட்டுதல் அதிகமாகிறது. அப்பாவிடம் மரியாதை மட்டுமே இருக்கிறது. இவன் கவலைப்படுகிறான்.

கல்லூரி செல்கிறாள். 18 வயதில் அழகான பெண் ஆகிவிடுகிறாள். அந்த வயதில் ஏற்படும் ஒரு உணர்வில் ஒரு பையனுடன் பழக்கமாகிறது. கொஞ்ச காலத்துக்குபிறகு இவனுக்கு விசயம் தெரிகிறது. மகளுடன் பேசுகிறான். அவள் அவன் மேல் உயிரை வைத்திருக்கிறாள் என்று புரிந்து கொள்கிறான். முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுரை சொல்கிறான்.

ஆனால் படித்து முடிக்கும் தருவாயில், அவர்கள் காதல் எல்லை மீறுகிறது.

மேலே நான் குறிப்பிட்ட சம்பவம் எல்லோர் வாழ்விலும் வந்து போவதுதான். நான் குறிப்பிட்ட அந்த கதை போன்ற சம்பவத்தில் வரும் அப்பாவாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பெண் ஒரு பையன் மீது தீராத காதல் கொண்டால் என்ன செய்வீர்கள்? ஜாதி, மதம், அந்தஸ்து பார்ப்பீர்களா? அல்லது திருமணம் செய்து வைப்பீர்களா? அல்லது உண்மையான காதல் இல்லை என்று உணர வைத்து மகளை திருத்துவீர்களா? 

ஒரு வேளை உங்கள் பேச்சை மீறி அவள் ஓடி போய் திருமணம் செய்து கொண்டால், 'போய்த்தொலை' என்று விட்டுவிடுவீர்களா? அல்லது என்னதான் இருந்தாலும் நம் பெண்தானே என்று சேர்த்துக்கொள்வீர்களா?

அல்லது ஒரு வருடம் வரை முறுக்கிக்கொண்டு இருந்து விட்டு, பேரக்குழந்தை பிறந்தவுடன், 'எங்க அப்பாவே வந்து பிறந்து இருக்கார்' என்றோ 'என் அம்மாவே வந்து பிறந்து இருக்காள்' என்றோ ஏற்றுக்கொள்வீர்களா? 

நன்றாக யோசித்துப்பாருங்கள். இதில் ஏதாவது ஒன்றைத்தான் செய்வீர்கள். ஏனென்றால் அந்த மகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் சந்தோசப்பட்டு இருப்பீர்கள். என்ன கோபம் இருந்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். அதுதான் நியதி. காலம் காலமாய் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

பின் ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்கின்றீர்களா? விசயம் இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த எம் பி எஸ் படிக்கும் மாணவியான சரண்யா, ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பார்த்தசாரதியை காதலித்து, பெற்றோர்கள் மறுக்கவே, பதிவு திருமணம் செய்து கொண்டார். 

அவர் அப்பா என்ன செய்து இருக்க வேண்டும்? மேலே நான் குறிப்பிட்டது போல் தானே நடந்து இருக்க வேண்டும்? ஆனால் என்ன செய்திருக்கிறார் பாருங்கள். கூலிப்படையை வைத்து, 5 லட்ச ரூபாய் செலவு செய்து மருமகனை எரித்து கொலை செய்திருக்கிறார். படிக்கவே மனசு வேதனையாக இருக்கிறது.

ஒரு அப்பாவால் இப்படி நடந்து கொள்ள முடியுமா? அப்படியானால் சிறு வயதில் இருந்து அவள் மகள் மேல் நான் குறிப்பிட்டது போல் பாசமே வைக்கவில்லையா?

தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று ஏன் அவர் நினைக்கவில்லை. தப்பு எங்கே நேர்ந்து இருக்கும்? 

பணத்தை திருமணம் செய்து கொண்டு பணத்தை சாப்பிட்டு வாழ்வது வாழ்வா? இல்லை மனதை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்வது வாழ்வா?

ஏன் அப்படி அவர் செய்தார்? இப்போது அவருடைய வாழ்க்கையும் அல்லவா ஜெயிலில் போகப் போகிறது. இத்தனைக்கும் படித்து ஒரு வேலையில் இருப்பவர் அவர். 

இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையும் சீரழிந்து போய்விட்டது. 

ஏழையாய் பிறந்ததைத் தவிர வேறு என்ன பாவம் செய்தார் அந்த பார்த்தசாரதி?


Jun 13, 2011

மிக்ஸர் - 13.06.2011


பாபா ராம்தேவ் கடைசியில் காமடி பீஸாகிப்போனார். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நினைத்தவர் இருக்க வேண்டியதுதானே? ஏன் ரவிசங்கர் கேட்டுக்கொண்டதும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்? ஏன்? 1000 கோடி... இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர், தன்னுடைய 1000 கோடி சொத்து எப்படி வந்தது என்று சொல்வாரா? இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இவர் யோகா செய்ய அனுமதி வாங்குவாராம். பின்பு உண்ணாவிரதம் இருப்பாராம். கேட்டால், 'உண்ணாவிரதமும் யோகாவில் ஒரு பகுதியாம்'. ஒரு பெரிய நாடு எத்தனை நாட்கள் பொறுத்து இருக்கும். அவர்களும் எவ்வளவோ பேசிப்பார்த்தார்கள். கடைசியில் டெல்லியை விட்டே அடித்து விரட்டிவிட்டார்கள். இப்போது ஹரித்வாரில் தன் ஒன்பது நாள் உண்ணாவிரத நாடகத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். 

ஊழலுக்கு எதிராக முதலில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசரே மீது முதலில் ஒரு மதிப்பு இருந்தது. இப்போது போய்விட்டது. தொட்டதற்கு எல்லாம் உண்ணாவிர போராட்டம் ஆரம்பித்தால்? உண்ணாவிரதத்தின் மதிப்பே அல்லவா போய்விடுகிறது. இதில் பாஜாகா சப்போர்ட் செய்கிறது. முதலில் அவர்கள் கர்நாடகாவில் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தட்டும், பிறகு ஊழலுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடட்டும்.

இந்தியாவில் ஊழல் ஒழியே ஒரே வழிதான் உள்ளது. என்னவென்றால், இந்தியாவில் உள்ள அனைவரும் இறந்து மீண்டும் பிறந்து, முதலில் இருந்து வாழ்க்கையை ஊழல் இல்லாமல் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற இந்தியாவை கொண்டுவர முடியும்.

***********************************************************

ஒரு மகிழ்ச்சியான செய்தி. என்னுடைய சிறுகதை தொகுப்பான "வீணையடி நீ எனக்கு" புத்தகம் சிங்கப்பூர் நூலகத்தில் 24 பிரதிகள் வாங்கி இருக்கின்றார்களாம். சாதாரணமாக இத்தனை பிரதிகளுக்கு அவர்கள் ஆர்டர் தரமாட்டார்களாம். இந்த மகிழ்ச்சியான செய்தியினை "ழ" பதிப்பகத்தின் கே ஆர் பி செந்திலும், நண்பர் கேபிள் சங்கரும் என்னிடம் தெரிவித்தார்கள், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம், நான் பிறந்த என் ஊரில் நிறைய நண்பர்கள் என் புத்தகங்களை பாராட்டினாலும், புத்தக கடை வைத்திருக்கும் என் நெருங்கிய நண்பர் "உன் புத்தகம் சரோஜா தேவி புத்தகம் போல் உள்ளது" என்று சொல்லி ஒதுக்கிவிட்டார். ஆனால் அதே புத்தகம் இன்று சிங்கப்பூர் நூலகத்தில் இருக்கிறது என்கிறபோது சந்தோசம் வருவது இயல்புதானே?

இதைத்தான் உள்ளூர் மாடு விலை போகாது என்பார்களோ?

************************************************************

இரண்டு தொடர்கதை முடித்துவிட்டேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமான வாசகர்கள் பாராட்டி இருக்கின்றார்கள். சந்தோசமாக இருக்கிறது. உடனே யாரும் பின்னூட்டத்தில் பாராட்டுக்களை தேட வேண்டாம். நிறைய மெயில்கள், போன்கால்கள் வந்தன. நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஒரு துப்பறியும் கதை ஒன்று எழுதலாமா? என யோசித்துக்கொண்டிருக்கிறேன். நம்ம வலைப்பூ தானே? முயற்சி பண்ணிப் பார்த்தா என்ன தப்புன்னு தோணுது? நீங்க என்ன நினைக்கறீங்க?

இன்னொரு சந்தோசமான விசயம் போன வாரம் என் வாழ்வில் நடந்தது. ஆனால் அதை பொதுவில் சொல்ல கூச்சமாக உள்ளது. மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் மெயிலில் தெரிவித்தேன். நண்பர்களின் வாழ்த்திற்கு நன்றி.

***********************************************************

'ஆடுகளம்' படம் பார்த்ததிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம். யாராவது விளக்கினால் நல்லது. படத்தைப் பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், தனுஷ் குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிடுகிறார். அதை குருவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மெல்ல மெல்ல அவன் வாழ்க்கையில் ஊடுறுவி அவனுக்கு தீங்குகள் விளைவிக்கிறார். இதைத் தெரியாத தனுஷ் எப்போதும் போலவே அவரிடம் பழகுகிறார். முடிவில் உண்மை தெரியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார். 

தனுஷுக்கு விசயம் தெரிந்தை தெரிந்து கொண்ட அவரும் அதிர்ச்சி அடைக்கிறார், கடைசியில் தனுஷ்," உன்னை என் அப்பா மாதிரி நினைச்சேண்ண, நீங்க போய் இப்படி" என்று சொல்லும் போது பக்கத்தில் கிடந்த அருவாளை எடுத்து கழுத்தில் வெட்டி செத்துப்போகிறார்.

நான் என்ன நினைத்தேன் என்றால், தனுஷுக்கு உண்மை தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த நிலையில், 'அவன் தன்னை அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்திருக்கிறான், அவனுக்குப் போய் துரோகம் செய்து விட்டோமே என வருந்தி அவர் தன்னை மாய்த்துக்கொண்டார்' என்று.

ஆனால், சன் டிவியில் காலை நிகழ்ச்சி ஒன்றில் பாரதி பாஸ்கர் பேசும்போது, "இந்த சினிமாவே வன்மம் சம்பந்தப்பட்டது. தனுஷ் தன்னைவிட பெரியாளானதும், அவன் மேல் அவருக்கு வன்மம் வந்துவிட்டது. வன்மம் அதிகமாகி, சாகும்போது கூட, தன்னை கொன்றது  தனுஷ்தான் என்று எல்லோரும் நினைக்க வேண்டும் என்றுதான் அவர் அருவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டார். வன்மம் என்பது அப்படிப் பட்டது" என்றார்.

நான் புரிந்து கொண்டது சரியா? இல்லை பாரதி பாஸ்கர் சொன்னது சரியா?

தெரிந்தவர்கள் சொல்லலாம்.

***********************************************************

யாராவது என்னை வற்புறுத்தி ஏதாவது ஒரு விசயத்தை செய்ய சொன்னால் எனக்கு பிடிப்பதில்லை. எதுவுமே எனக்குத் தோன்றினால் மட்டுமே நான் செய்வது வழக்கம். வீட்டில் கோயிலுக்கு போ போ என்று கட்டாயப்படுத்தினால் போக மாட்டேன். இந்த விசயம் சரியா தவறா எனக்குத் தெரியாது. பல விசயங்களில் இது போல்தான் வாழ்ந்து வருகிறேன்.

இந்த மாதிரி குணாதிசயம் உள்ள என்னிடம், சில நண்பர்கள் அவர்கள் எழுதிய கட்டுரையின் லிங்கை தவறாமல் மெயிலில் அனுப்பி, 'தயவு செய்து படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்' என்கிறார்கள். இன்னும் சில பேர் பின்னூட்டங்களில் அவர்களின் லிங்கை கொடுக்கின்றார்கள். சிலர் ஆன்லைனில் வந்து லிங்கை கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்,

எனக்கு இவர்களைப் பார்க்கையில் அயர்ச்சியாக இருக்கிறது. நன்றாக இருக்கும் கட்டுரைகளை தேடிப்பார்த்து தினமும் படிக்கிறேன். எல்லோருமே அப்படித்தான். எழுத்துக்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் வாசகர்கள் தேடி வந்து படிப்பார்கள். அதைவிட்டு விட்டு இப்படி கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

அப்படியே படிக்க வைப்பது ஹிட்ஸுக்காக என்று நினைத்தார்களானால், அதனால் என்ன பயன்? 50 லட்சம் ஹிட்ஸோ அல்லது ஒரு கோடி ஹிட்ஸோ வாங்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் ஏதேனும் ஆதாயம் உள்ளதா? ஹிட்ஸுகளை பணமாக்க முடியுமா?

அதனால் என்ன செய்ய வேண்டும்? முதலில் நண்பர்கள் நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலையில் அமர வேண்டும். பொருளாதார வசதியை பெருக்கிக்கொள்ள வேண்டும். ஒரு வீடு, கார் வாங்க லட்சியம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு கல்யாணம், குழந்தைகள் என்று மேலே மேலே செல்ல முயற்சிக்க வேண்டும்.

அவ்வப்போது எழுதலாம். ஆனால், பிளாக்கை மட்டுமே நினைத்துக்கொண்டு வாழ்வை தொலைத்துவிடக்கூடாது. மன திருப்திக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம். தப்பில்லை அதை விட்டு விட்டு இளைஞர்கள் பிளாக் பக்கமே ஹிட்ஸுக்காக இருப்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. ஹிட்ஸ் எனபது ஒரு மாயை.

இங்கே நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்லி இருக்கிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். காலையில் என்னவோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதான்........

***********************************************************