May 27, 2011

மிக்ஸர் - 27.05.2011


ஒரு ஆட்சி போய் வேறு புதிய ஆட்சி அமையும்போது சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். அதற்காக முந்தைய ஆட்சி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மாற்றுவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள். அச்சிட்ட அனைத்து  புத்தகங்களும் இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. 200 கோடி காலி. யார் வீட்டுப்பணம்?

ஒரு காலத்தில் IAS படிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டதுண்டு. இப்போது அந்த வருத்தம் இல்லை. முன்னால் தலைமைச் செயலாளர் நிலமையைப் பார்த்தீர்களா?

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் எம்.ஜி ஆர் காப்பீட்டுத்திட்டம் ஆயாச்சு. மேலவை இனி இல்லை. இப்படியே ஒவ்வொன்றாக...

தமிழ் புத்தாண்டு இனி ஏப்ரல் 14தான் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.

பழைய அரசு போட்ட திட்டம் சரியில்லாது போனால் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. பழைய அரசின் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மாற்றுவது எப்படி சரியாகும்....?

*****************************************

பிரதமர் மன்மோகன் சிங் எத்தியோப்பியா உட்பட நிறைய ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நிறைய உதவிகள் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். மிக நல்ல விசயம். 

எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளுக்கு உதவுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உதவி செய்துவிட்டு அமெரிக்கா போல் நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி.

*****************************************

ஏன் தொடர்கதை மட்டும் எழுதறீங்க? மற்ற விசயங்கள் முன்பு போல் எழுதுவதில்லை? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். 

ஏதாவது நல்ல அனுபவங்களைப் பற்றி எழுதினால், ஏன் எப்பவும் உங்களைப் பற்றியே எழுதறீங்க? படிக்கறவங்க எல்லாம் உங்க ரசிக கண்மணியான்னு கேட்கறாங்க! கதை எழுதுனா இப்படி...?

தினமும் என் வலைப்பூவை படிக்கறவங்க ஒரு 200 பேர்தான். அவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன்.

"எழுதறதை நிறுத்தாம எதையாவது எழுதுறேனே அதைப்பாருங்க" என்று ஏன் முன்பு போல எழுதுவதில்லை என்று என்னிடம் கேட்பவர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

*****************************************

பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ் இதுல எல்லாம் எனக்கு அதிகம் பரிச்சயம் கிடையாது. என் பெண் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் பள்ளியிலேயே பேஸ்புக் அக்கவுண்ட் கொடுத்துள்ளார்கள். 

என் பெண், "என்னப்பா, உங்களுக்கு பேஸ் புக் இல்லையா?" என்று கேட்கவே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன்.

உள்ளே சென்று பார்த்தால், அது மிகப் பெரிய கடல். என்னால் ஒரு வலைப்பூவிலேயே தினமும் எழுத முடியவில்லை. இதில் எங்கே நாம் இந்த பேஸ் புக்கில்...? 

எப்படித்தான் நண்பர்கள் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ், ஆர்குட் அனைத்திலும் ஆக்டிவாக செயல்படுகிறார்களோ? தெரியவில்லை. அவர்களை மனமாற பாராட்டுகிறேன்.

நிச்சயம் அவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் என்று நினைக்கிறேன்.

*****************************************

சுஜாதாவின் கதைகள் அனைத்தையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரே எழுத்தாளரை மட்டும் படித்தால் அவரின் பாதிப்பு நமக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் இப்போது ஜெயகாந்தனையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். 1958லேயே மனிதன் என்னம்மா எழுதி இருக்கிறார்! ஜெயகாந்தன் முடித்துவிட்டு மற்றவர்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த பிறவியில் முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் சில எழுத்தாளர்கள் ஆங்கில நாவல்கள் கூட படித்து முடித்ததாக சொல்கிறார்கள். எப்படி அவர்களால் மட்டும் முடிகிறது? என்னால் முடியவில்லை?

*****************************************

சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் கவலையூட்டும்படியாக உள்ளது. எதையும் பொதுவில் சொல்ல முடியாது. தற்போதைய செய்தியின்படி மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாலும் போவார் என்று நினைக்கிறேன். 

படங்களில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உடல் நிலை தேறி வீட்டிற்கு வந்தால் நல்லது. தொடர்ந்து 20 நாட்களாக ஆஸ்பத்திரியில் உள்ளார்.

"அவருக்கு ஒன்றுமில்லை, சாதாரண நிமோனியாதான், விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவார்" என்கிறார்கள்.

வந்துவிட்டால் நல்லதுதான். பார்ப்போம். பிரார்த்திப்போம்.

*****************************************

+2 வைப்போலவே 10வதிலும் மாணவ மாணவியர்கள் நன்றாக மதிபெண்கள் எடுத்துள்ளார்கள். முதல் மூன்று ரேங்கில் எத்தனை மாணவர்கள் பாருங்கள்? எத்தனை பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்கிறார்கள் பாருங்கள். நான் படிக்கும் போது 400க்கு மேல் மார்க் வாங்குவது என்பதே பெரியவிசயம். இப்போது? எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா? இல்லை நாம் வழங்கும் கல்வி அவ்வளவு ஈசி ஆகிவிட்டதா?

வருங்கத்தில் நம் பிள்ளைகளுக்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அதற்காக 24 மணி நேரமும் படி படி என்று குழந்தைகளை துன்புறுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் தினமும் படித்ததில்லை. பள்ளியில் கவனிப்பதுதான். டியூஷன் படித்தது இல்லை. ஆனால் இப்போ....?

*****************************************

கடைசியாக ஒரு ஜோக்:

முதல் நண்பர்: நேற்று கனவுல நீயும் நானும் உலகம் பூரா சுத்தி வந்தோம்

அடுத்தவர்: அப்படியா? எங்கேயெல்லாம் போனோம்?

முதலாமவர்: ங்கொய்யால, நீயும்தானே வந்தே, உனக்குத் தெரியாதா?

*****************************************


May 25, 2011

300வது இடுகை -குறை ஒன்று உண்டு -17


நான் குழப்பமானேன். முருகனுமா இப்படி?

"முருகா"

"சொல்லுங்க ரகு"

"எப்ப பார்க்கலாம்"

"இப்போ பார்க்க முடியாது. நாம எப்பவும் போவோம்ல அந்த ஹோட்டல்ல வெயிட் பண்ணு. லஞ்ச் டைத்துல அங்க வரேன்"

"தேங்க்ஸ் முருகா"

"எதுக்கு?"

"நீயும் என்னை பார்க்க முடியாதுன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்"

"இல்லை வரேன்"

போனை செக்யூரிட்டி ஆபிஸரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

முருகன் வரும்வரை என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே காலார நடக்க ஆரம்பித்தேன். உலகம் எவ்வளவு அற்புதமானது. எல்லோரும் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள். ஏன் நம் வாழ்வு மட்டும் இப்படியானது. என்ன பாவம் செய்தோம். சிறு வயதில் இருந்து ஏன் எனக்கு மட்டும் இப்படி? எப்பவும் போல் நினைத்த விசயங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சரியாக மதியம் 1 மணிக்கு முருகன் வந்தான்.

"என்ன ரகு நல்லா இருக்கியா"

"இருக்கேன் முருகா நீ"

"எனக்கென்ன"

அருகில் உள்ள டேபிள் சேரில் அமர்ந்தோம். உடனே என் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதைக்கண்ட முருகன்,

"என்ன ரகு, ஏன் கண் கலங்கறீங்க?"

"முடியலை முருகா"

"என்ன பண்ணறது. நடக்க கூடாதது எல்லாம் நடந்துடுச்சு"

"என்னால அப்படி விட முடியலை முருகா"

"புரியுது"

"இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னு உனக்குத் தெரியும் இல்லை"

"தெரியும். நடந்ததை நினைச்சு வருத்தப்பட்டு என்னாக போகுது ரகு. மறந்துட்டு வேற வேலையை பாருங்க"

"எதை மறக்கச் சொல்ற. நான் இரண்டு வருசம் ஜெயில்ல பட்ட வேதனையையா? இல்லை எங்க வீட்டுல அம்மாவை பார்க்க பேசக்கூட என்னை அனுமதிக்காம என்னை வீட்டை விட்டு துரத்தினாங்களே அதையா? இல்லை என் வீணாவையா? எதை மறக்கச் சொல்லுற. இதுக்கு எல்லாம் காரணம் யாரு? ராஜா தானே?"

"ஆமாம் ரகு. நான் கூட ஒரு வேளை நீயேதும் தப்பு செய்திருப்பியோன்னு நினைச்சேன். ஆனால் அதன் பிறகு நடந்த பல காரியங்களை நினைச்சுப் பார்க்கும்போது, ராஜாதான் உன்னை திட்டம் போட்டு பழி வாங்கி இருக்கான்னு தெரிஞ்சு போச்சு"

"அவனை என்ன பண்ணாத்தகும்?"

"நான் உன்னை வந்து பார்க்கறது தெரிஞ்சு போய், என்னையும் கூப்பிட்டு மிரட்டி உன்னை போய் பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டான்"

"அவன் ஒரு துரோகி"

"ஆனா அதல்லாம் முடிஞ்சு போன விசயம். நீ ஏதாவது வேறு வேலை தேடற வழியைப் பார் ரகு"

"அதுக்கு முன்னால் சில வேலைகள் பாக்கி இருக்கு முருகா"

"என்ன வேலைகள்?"

"சமயம் வரும்போது நீயே தெரிஞ்சுக்குவ?"

"என்ன ரகு புதிர் போடறீங்க"

"ஆமாம். நான் ராஜாவை பார்க்க அனுமதி கேட்டேன். ஆனா பார்க்க மாட்டேனுட்டான். அதனால அவனை வீட்டுல பார்க்கறதா முடிவு பண்ணீட்டேன்"

"வேணாம் ரகு"

"அதே வீட்டுலத்தானே இருக்கான்?"

"ஆமாம் ரகு. ஆனா அங்கே போகாதே. ஏதாவது பிரச்சனை ஆகிடப்போகுது"

"என் மேல தப்பு இல்லைன்னு நீ ஒத்துக்கற. அதுவும் இல்லாம எல்லாப் பிரச்சனைக்கும் ராஜாதான் காரணம்ங்கறதையும் நீ ஒத்துக்கற. அப்படித்தானே?"

"ஆமாம்"

"அது போதும் எனக்கு"

"ஆனா, அவன் வீட்டுக்கு எல்லாம் போகாதே" என்று முருகன் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல், ஒரு வித வெறியுடன் அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தேன்.

-தொடரும்May 20, 2011

மிக்ஸர் - 20.05.2011


"ஏன் உலக்ஸ் இப்படி இருக்கீங்க?''

"ஏன்?"

"நீங்கள் எவ்வளவோ பிரச்சனையை சந்திக்கறீங்க. எவ்வளவோ குடும்ப பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கீங்க. ஆனா இதுக்கு ஏன் கவலைப்படறீங்க?"

"அப்படி இல்லை சார். ரொம்ப பிடிச்சு போச்சு. முடியாம ஆஸ்பத்திரில இருக்கார். அவரும் என் குடும்பத்தில் ஒருத்தர் போல நினைக்கிறேன்"

"உங்கள் பிரச்சனைகளுக்காக அவர் என்றாவது வருத்தப்பட்டிருக்கிறாரா?"

"என்ன யாருன்னே அவருக்குத் தெரியாது"

"அப்புறம் நீங்க மட்டும் ஏன் அப்படி?"

"அது அப்படித்தான்"

"ஆஸ்பத்திரில முடியாம எத்தனையோ பேர் இருக்காங்களே, அவங்களை நினைச்சு என்றாவது வருத்தப்பட்டதுண்டா"

"எனக்கு தெரிந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்காக பிரார்த்திப்பேன்"

இதற்குமேல் அவரிடம் பேச பிடிக்காமல் போனை கட் செய்துவிட்டேன். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்னை சுத்தமாக தெரியாது. ஆனால், எனக்கு அவரைத் தெரியும். அது ஒன்று போதுமே அவருக்காக நான் வருத்தப்பட? என் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தால் மட்டும்தான் வருத்தப்பட வேண்டுமா என்ன? 

எம்.ஜி.ஆர் புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது கூட நாங்கள் எல்லாம் கல்லூரியில் கூட்டுப்பிரார்ததனை செய்தோம். 

அமிதாப் பச்சன் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட பள்ளியில் நண்பர்கள் பிரார்த்தனை செய்தோம்.

பத்திரிகைகளில், தொலைகாட்சிகளில் வரும் செய்திகளை நம்புவது கஷ்டமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் விரைவில் குணமடைந்து வருவார் என்று நம்புகிறேன்.

தலைவர் சூப்பர் ஸ்டாருக்காக நான் ஒவ்வொரு விநாடியும் பிரார்த்திக்கிறேன். எம்.ஜி ஆருக்காக நான் கல்லூரி படிக்கையில் பாடி வேண்டிய பாடலை இன்று மீண்டும் அவருக்காக பாடுகிறேன்.

" இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இங்கு உன்னிடம் கையேந்தினேன் முருகைய்யா"

*******************************************************

நடிகர் தனுசுக்கு வாழ்த்துகள். இந்த சிறு வயதிலேயே தேசிய விருது என்பது சாதாரண விசயம் இல்லை. அதுவும் தன் மாமனாருக்கே இன்னும் கிடைக்காத விருது, இவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பாருங்கள், இந்த விருது அறிவிப்பு வந்தபோது அவரால் சந்தோசமாக அதைக் கொண்டாட கூட முடியவில்லை.

*******************************************************

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் டொமினிக் ஸ்ரோஸ் கலின் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நியூயோர்க் ஜோக் எப் கெனடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

62வயதான டொமினிக் ஸ்ரோஸ் கலின் பரிஸ் நோக்கி புறப்படுவதற்கு தயாராக இருந்த எயர் பிரான்ஸ் விமானத்தில் வைத்து விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நியூயோர்க் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஹோட்டல் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக முறைப்பாடு கிடைத்ததையடுத்து  அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை ஆணையர் பால் ஜே.பிரௌன் தெரிவித்துள்ளார்.

இது பழைய செய்தி. ஆனால், இப்போது என்ன சொல்கிறார் என்றால், அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் அந்த பெண்ணை ஓ...ல் செய்ய சொன்னதாகவும், இப்போது அந்த பெண் புகார் செய்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார்.

ஒரு 62 வயதானவர், 2012ல் பிரான்ஸின் ஜனாதிபதியாகக் கூடிய வாய்ப்புள்ளவர், IMF வின் தலைவரானவர் இப்படி நடந்து கொண்டிருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.

ஒரு வேளை, அவருக்கு வேண்டாதவர்கள் செய்த திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவருக்கு பெண் தேவை என்றால், அவரால் வேறுவிதத்தில் அடைய முடியாதா என்ன?

என்னவோ போங்க காலம் கெட்டுக் கடக்கு!

*******************************************************

சில சமயம் இங்கே வானவில் சேனல்ல இசை நிகழ்ச்சி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் இந்தியால ஏற்கனவே ஒளிப்பரப்பான நிகழ்ச்சியாத்தான் இருக்கும். வேற வழி இல்லாமல் பார்ப்பதுண்டு.  அதுல சில பாடகர்கள் பாடுறத பார்த்தா கோபம் கோபமா வருது. அவ்வளவு தப்பும் தவறுமா பாடறாங்க. 

அந்த மாதிரி பாடகர்களை இபிகோ 302 பிரிவின் படி அரஸ்ட் செய்ய முடியுமா?
மனிதர்களை கொலை செய்ய முயற்சி பண்ணா மட்டும்தான் அரஸ்ட் செய்யணுமா என்ன?

பாடல்களை கொலை செய்ய முயற்சித்தால் அரெஸ்ட் செய்யக்கூடாதா?

*******************************************************

என் தாத்தா ஒரு ஹோமியோபதி டாக்டர். எங்கள் பரம்பரையில யாருமே எம் பி பிஸ் படிக்கலை. என் பெண்ணை எப்படியாவது டாக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், இந்த வருடம் மாணவர்கள் வாங்கி இருக்கும் மார்க்கைப் பார்த்தால் என் ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால், எல்லாப் பாடங்களிலும் 200க்கு 200 வாங்கினால்தான் மெடிக்கல் சீட் கிடைக்கும் போல.

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா? இல்லை பாடங்கள் சுலபமாக இருக்கிறதா? இல்லை நமது பாடத்திட்டதில் ஏதாவது கோளாறா?

ஏறக்குறைய 140,000 இன்ஜினியரிங் சீட்டு உள்ள மாநிலத்தில் ஏன் மிகக்குறைவான மெடிக்கல் சீட்டுகள் உள்ளது? ஏன் மெடிக்கல் சீட்களை அதிகரிக்கக்கூடாது?

மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் டாக்டர்கள் நம் நாட்டில் உள்ளார்களா? யாராவது விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் பரவாயில்லை.

*******************************************************May 14, 2011

மிக்ஸர் - 13.05.2011


சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உண்டுநண்பர்களிடம் அதிகமாக அரசியல் பேசுவேன்இணையத்தில் அரசியல் பேசுவதில்லைஇந்த முறை நான் ஓட்டுப்போடவில்லைஇருந்தாலும் நேற்றிலிருந்து ஒருவித பரபரப்பு என்னை ஆட்கொண்டுள்ளது. (நேற்று பிளாக்கர் சொதப்பிவிட்டதால், இதற்கு பின் எழுதியவைகள் இப்போது தேவையில்லை. அதான் முடிவு தெரிந்துவிட்டதே)

*******************************************************

முன்னாள் கலிபோர்னியா கவர்னர் அர்நால்ட் Schwarzenegger (எப்படி தமிழில் எழுதுவதென்பது எனக்குத் தெரியவில்லை) தன்னுடைய மனைவியை (மரியா ஷ்ரிவர்) விட்டு பிரியப்போகிறாராம். அர்நால்ட் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பதும், அவர் ஒரு பாடிபில்டர் என்பதும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விசயம்தான். அர்நால்ட்க்கு தற்போது 63 வயது, அவர் மனைவிக்கு 55 வய்து. அவர்கள் திருமணம் நடந்த வருடம் 1986. கிட்டத்தட்ட 25 வருடம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்அவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ஆனால், அவர்கள் விவாகரத்து பெறப்போவதாக சொல்லவில்லை. ஆனால் பிரிந்து வாழப்போகிறார்களாம். எங்கள் நான்கு குழந்தைகளுக்கும் நாங்கள் எப்போதும் பெற்றோர்கள்தான் என்கிறார்கள் இருவரும். அவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

"நாங்கள் இருவரும் நீண்ட சிந்தனைக்குப்பிறகு, நிறைய யோசித்து, நிறைய பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்"

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. 25 வருடம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். பிரச்சனைகள் ஏதேனும் வந்திருக்கலாம். அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல் ஏன் பிரிந்து வாழ முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

நான் இத்தனை நாட்களாக விவாகரத்து ஏதோ கல்யாணம் ஆகி ஒரு சில வருடங்களில் சில பல காரணங்களுக்காக நடப்பது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். போகிற போக்கைப் பார்த்தால் 70 வயதில் கூட விவாகரத்து கேட்பார்கள் போல. பயமாய் இருக்கிறது.

*******************************************************

சர்வாதிகாரத் தலைவர்கள் எல்லாம் எப்போதும் என்ன மாதிரி மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியவில்லை. லிபியா அதிபர் கடாபி அந்த நாட்டு ராணுவத்தை தவிர அவருக்கு என தனி ராணுவம் வைத்திருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இராணுவம் லிபியாவின் சொந்த மக்களையே கொன்ற சம்பவும் நடந்தது. நேட்டோ படைகள் சென்ற வாரம் அவரின் மாளிகையை தகர்த்த போது, அவரின் இளைய மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். இத்தனை நாட்களாக கடாபியும் இறந்து இருக்கலாம் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நேற்று அவர் ஒரு பழங்குடியினத் தலைவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

குடும்பம் சிதறிப்போனது. ஒரு இளைய மகன் இறந்து போய்விட்டான். ஒரு பாவமும் செய்யாத மூன்று பேரக்குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். நாட்டிலும் அவருக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பிவிட்டது. பின்பு எதற்காக இப்படி உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது அவர் மன நிலை எப்படி இருக்கும்.

இன்னொரு கோணத்தில் யோசித்தோமானால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் என்ன காரணம், யார் காரணம் என்று சிறுபிள்ளைகளுக்கு கூடத்தெரியும்.

நல்ல வேளை, நம் நாட்டில் மிடில் ஈஸ்ட் நாடுகளைப் போல அதிகம் ஆயில் இல்லை.

*******************************************************

'ங்கேயும் காதல்' நல்லப் படமா? ஹிட்டா என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், எப்போவாவது சன் மியூஸிக் சேனல் பார்க்கும் போது அவர்களின் விளம்பரத் தொல்லை தாங்க முடியவில்லை. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், போன் செய்து பேசுபவர்களிடம், "எங்கேயும் காதல் படம் பார்த்துட்டீங்களா?" என்று தவறாமல் கேட்கிறார்கள். படத்தை எப்படி எல்லாம் மார்க்கெட்டிங் செய்கிறார்கள் பாருங்கள்.

*******************************************************

ரு நாளைக்கு 1152 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 பெண்கள். பயப்படாதீர்கள், நம் நாட்டில் இல்லைஆப்பிரிக்க நாட்டில் உள்ள காங்கோ என்னும் ஒரு சிட்டியில் தான் இந்த நிலமை. பூமியிலேயே பெண்களுக்கான மோசமான இடம் என்று இந்த சிட்டியை சொல்லலாம். ஐநா புள்ளிவிவரப்படி இது போன வருட எண்ணிக்கையை விட 26 முறை அதிகமாம். Michelle Hindin  (an associate professor at John Hopkins' Bloomberg School of Public Helath) சொல்கிறார், இந்த சதிவிகிதம் இன்னும் அதிகரிக்குமாம். ஒரு புள்ளிவிவரத்தின் படி 2006 முதல் 2007 வரை ஒரு வருடத்தில் 4 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கின்றார்களாம். அதாவது 1000 பெண்களில் 29 பெண்கள் கற்பழிக்கப்பட்டவர்களாம். படிக்கவே கொடுமையாக இருக்கிறது! என்ன மாதிரியான ஊர் அது. அங்கே இருக்கும் ஆண்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மிருகங்களா?

வசதி படைத்த நாடுகள் ஏன் இந்த மாதிரி ஏழை நாடுகளை கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையும், படிப்பறிவையும், குறைந்த பட்ச தேவைகளையும் பூர்த்தி செய்தால், இப்படிப்பட்ட ஏழைநாடுகளும் மாறும் அல்லவா?

*******************************************************

'ழைப்புக்கு ஏற்ற ஊதியம்' என்பது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் வீட்டில் உள்ள புல்களை மாத மாதம் வெட்டுவதற்கு அதற்குறிய மெஷினோடு ஒருவர் வருவார். கிட்டத்தட்ட 4 மணி நேரவேலை. வெட்டி முடித்தவுடன், அனைத்தையும் கூட்டி, பெருக்கி, எடுத்து தனித்தனியாக பெரிய பைகளில் கட்டி வெளியே உள்ள குப்பை வைக்கும் இடத்தில் வைப்பார். அளவுக்கு அதிகமாக வளர்ந்த பூச்செடிகளை எல்லாம் அழகாக வெட்டிவிடுவார். பத்து வருடமாக அவர் வாங்கியது 25 வெள்ளி. இப்போது 30 வெள்ளியாக உயர்த்தி இருக்கிறார்.

ஆனால், தலை முடியை வெட்டுவதற்கு இங்கே உள்ள சலூன்களில் வசூலிக்கும் தொகை 10 முதல் 12 வெள்ளி. மொத்தம் 15 நிமிட வேலை. அதுவும் என் தலைக்கு 5 நிமிடம் போதும். கூட ஷேம்பு போட்டு தலையை கழுவி விட்டால் 27 வெள்ளிவரை வாங்குகின்றார்கள். அதற்கு மேலும் ஒரு 25 நிமிடம்.

4 மணி நேரம் கடும் உழைப்பிற்கு கிடைக்கும் கூலி 30 வெள்ளி. 40 நிமிடத்திற்கு கிடைக்கும் கூலி 27 வெள்ளி.

இதில் எங்கே இருக்கிறது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் எனும் கோட்பாடு?

*******************************************************