Apr 15, 2011

இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்!


என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு சைக்கிளை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் எடுக்க சென்றார். மொத்தம் 3000 வெள்ளி பணம் ஏடிஎம் மெஷின் மூலம் எடுத்திருக்கிறார். ரொம்பவும் பசிக்கவே அருகில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு சென்று பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்க பர்ஸை தேடினால், பர்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இல்லை. சைக்கிளில் போனபோது பர்ஸை எங்கோ தவறவிட்டிருக்கிறார். பர்ஸில் மொத்தம் ஏற்கனவே வைத்திருந்த 500 வெள்ளியும் சேர்ந்து 3500 வெள்ளி அதாவது 50,750 இருந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவரின் ஏடிஎம் கார்ட், க்ரெடிட் கார்டுகள், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் சில முக்கியமான பேப்பர்கள் இருந்துள்ளன. 

இதில் என்ன கவனிக்க வேண்டிய விசயம் என்றால், அன்று காலை நண்பர் இன்னொரு நண்பரிடம் அவரின் ஏடிஎம் கார்டை கொடுத்து, கார்டின் பின் நம்பரை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து அவரைப் பணம் எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். அவருக்கு வேறு வேலை இருந்த காரணத்தினால், அவரால் பணம் எடுக்க முடியவில்லை. கார்டையும், பின் நம்பர் எழுதியிருந்த பேபரையும் நண்பரிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இவர் அந்த பேப்பரை கிழித்து போடாமல் பர்ஸில் வைத்திருந்திருக்கிறார். அதுவும் சேர்ந்து தொலைந்துவிட்டது.

பேங்கில் 10000 வெள்ளிக்கு மேல் பணம் இருந்திருக்கிறது. ஒரு நாளைக்கு 3000 வெள்ளி வரை ஏடிஎம் கார்டின் மூலம் பணம் எடுக்கலாம். இவர் இரவு 8 மணிக்கு 3000 வெள்ளி எடுத்துள்ளார். இரவு 12.01க்கு இன்னொரு 3000 வெள்ளி எடுக்க முடியும். நண்பர் பதறிப்போய் சாப்பிடாமல் இரவு முழுவதும் தெருவில் அலைந்து ஒவ்வொரு இடமாக தேடி இருக்கிறார். ஆனால், எங்கும் இவரின் பர்ஸ் கிடைக்கவில்லை.

இன்னொரு நண்பரையும் அழைத்துக்கொண்டு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்க சென்றிருக்கிறார். அவர்கள் கம்ப்ளெயிண்ட் எழுதுவது வேஸ்ட். பர்ஸ் கிடைத்த எவரும் திருப்பிக் கொடுத்ததாய் சரித்திரம் எதுவுமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள். நண்பருக்கு திடீரென ஒரு யோசனைத் தோன்றி வங்கியின் 24 மணி நேர சேவையை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டை பிளாக் செய்துவிட்டார். அட்லீஸ்ட் இனி பேங்கிலிருந்து யாரும் பணம் எடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் போய்விட்ட நிலையில் தூங்காமல், விடியற்காலையில் எழுந்து ஒருவித மனநிலையில் மீண்டும் தெரு முழுவதும் தேடி அலைந்திருக்கிறார். 

இதற்கு இடையில் அந்த பர்ஸ் ஒரு சைனிஷ் டீச்சர் கையில் கிடைத்துள்ளது. அவர் அந்த பர்ஸில் உள்ள போட்டோவைப் பார்த்து தமிழர் என்று தெரிந்து கொண்டு அங்கே உள்ள லைன்ஸ் கிளப் தமிழ் உறுப்பினர் ஒருவரிடம் விசாரித்திருக்கிறார். அவர் உடனே நண்பரின் வீட்டு முகவரியை கொடுத்திருக்கிறார். நடுஇரவில் நண்பரின் வீட்டுக்கு வந்த டீச்சர் கதவைத் தட்டி இருக்கிறார். அப்போழுதுதான் நண்பர் அசந்து தூங்கி இருக்கிறார்.  அதனால் அந்த டீச்சர், "நீங்கள் தொலைத்த பர்ஸ் என்னிடம் இருக்கிறது. நாளை காலை வந்து எங்கள் பள்ளி பிரின்ஸிபாலிடம் பெற்றுக்கொள்ளவும்" என்று ஒரு பேப்பரில் எழுதி கதவில் சொறுகி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதைப் பார்க்காத நண்பர் மீண்டும் காலையில் தேடச் சென்றுவிட்டார்.

மிகவும் நொந்து போன நிலமையில் வீட்டிற்கு வந்தவர் கண்ணில் அந்த பேப்பர் தென்பட்டுள்ளது. உடனே அந்தப் பள்ளிக்கு ஓடியிருக்கிறார். அங்கே அந்த சைனிஷ் பள்ளியின் முதல்வர் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் அவரின் பர்ஸை கொடுத்திருக்கிறார். பார்த்தால் ஒரு பைசா குறையாமல் அப்படியே இருந்திருக்கிறது. 

நண்பர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த டீச்சருக்கு ஏதேனும் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அவரோ 'எனக்கு ஒன்றும் வேண்டாம். வேண்டுமானால் எங்கள் பள்ளிக்கு நன்கொடை அளியுங்கள்' என்றிருக்கிறார். உடனே நண்பர் பர்ஸை பள்ளியின் முதல்வர் கையில் கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றிருக்கிறார்.

நண்பர் பர்ஸில் உள்ள 3500 வெள்ளியையும் தரும் மனநிலையில் இருந்தாலும், அவர்கள் வாங்கிக்கொண்டது வெறும் 100 வெள்ளி மட்டுமே. இந்த விசயத்தை நண்பர் என்னிடம் சொன்னபோது அவர் முகத்தில் ஏற்பட்ட அந்த சந்தோச உணர்வை என்னால் வார்த்தையில் கொண்டு வர முடியவில்லை.

அந்த ஆசிரியர் போன்றவர்கள் இருப்பதால்தான் மலேசியாவில் எப்போதும் அதிகம் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.


6 comments:

குடந்தை அன்புமணி said...

அந்த நல்ல மனம் வாழ்க... (இனிமேலாவது உங்கள் நண்பர் கவனமாக இருக்கட்டும்)

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...

உண்மைதான். நாம் மற்றவர்களுக்கு நல்லவர்களாக இருந்தால், அந்த பலன் நம்மை பிற்காலத்தில் எந்த பிறவியாக இருந்தாலும் வந்து சேரும். இதைத்தான் ஷிர்டி சாய்பாபா வலியுறுத்துகிறார்.

என். உலகநாதன் said...

//குடந்தை அன்புமணி said...
அந்த நல்ல மனம் வாழ்க... (இனிமேலாவது உங்கள் நண்பர் கவனமாக இருக்கட்டும்)//

வருகைக்கு நன்றி குடந்தை அன்புமணி

என். உலகநாதன் said...

//ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...
உண்மைதான். நாம் மற்றவர்களுக்கு நல்லவர்களாக இருந்தால், அந்த பலன் நம்மை பிற்காலத்தில் எந்த பிறவியாக இருந்தாலும் வந்து சேரும். இதைத்தான் ஷிர்டி சாய்பாபா வலியுறுத்துகிறார்.//

வருகைக்கு நன்றி நண்பா

shortfilmindia.com said...

being good

அன்புடன் அருணா said...

அந்த டீச்சருக்கு என் சார்பாக ஒரு பூங்கொத்து!