Apr 29, 2011

மிக்ஸர் - 29.04.2011ஏன் முன்பு மாதிரி 'மிக்ஸர்' எழுத மாட்டேங்கறீங்க? நல்லா இருக்குமே? தொடர்ந்து எழுதக்கூடாதா? என்று கேட்டு தினமும் நூறு மெயில்களும், போன்கால்களும் வராவிட்டாலும், அந்த ஒரு குறிப்பிட்ட பிரபலமான (?) எழுத்தாளர் கேட்டுக்கொண்டதால், அவர் விருப்பத்திற்கு இணங்க இனி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் மிக்ஸர் வெளியாகும். 

யார் அந்த எழுத்தாளர் என்பதை அறிய நீங்கள் கடைசி வரி வரை காத்திருக்க வேண்டும்.

************************************************************

தமிழ் எழுத்துலக சக்கரவர்த்தி சுஜாதா அவர்களின் "கணையாழி கடைசிப் பக்கங்கள் 1965-1998" (உயிர்மை வெளியீடு) படித்துக்கொண்டிருக்கிறேன். நான் பிறப்பதற்கு முன்பிலிருந்து அவர் எழுதியவைகளை, இப்போது படிக்கும் போது சுவையாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே எல்லா விசயங்களையும் எழுதியிருக்கிறார். ஆகஸ்ட்-செப்டம்பர், 1966ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

"தமிழ் பத்திரிகைகளில் 'தைரியம், தரம்' இரண்டும் கிடையாது.'க்ரிடிஸிஸம்' என்பது மருந்துக்கும் கிடையாது. ஒரு வருஷத்தில் நம் தமிழ்ப் பத்திரிகைகளில் சுமார் 1,500 கதைகள் வரலாம்.இதில் 3 அல்லது 4 கதைகள் சுமார் ரகத்தில் சேர்கின்றன. மற்றவை அனைத்தும் குப்பை. இவைகளைப் பதிப்பிப்பதற்குப் பதிலாக 16-ஆம் வாய்ப்பாட்டைப் பிரசுரிக்கலாம்"

நல்ல வேளை என் சிறுகதை தொகுப்பு வெளியான சமயத்தில் சுஜாதா உயிருடன் இல்லை.

*************************************************************

சென்ற வாரம் சனிக்கிழமை மிகுந்த யோசனைக்குப் பிறகு "கோ" படம் சென்றோம். தியேட்டரில் மொத்தம் 8 பேர்தான், எங்கள் நால்வரையும் சேர்த்து. படம் முதலில் நன்றாக ஆரம்பித்து, இழு இழு என்று இழுத்து முடிவு பரவாயில்லாமல் இருக்கிறது. பாட்டு, சாரி மிஸ்டர் ஹரிஸ் ஜெயராஜ். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!. எல்லாப் பாடல்களுமே கேட்ட பாடல் போலவே இருக்கிறது. பாடல்கள் சமயத்தில் எல்லோரும் எழுந்து வெளியே போய்விட்டார்கள். எல்லோரும் என்றால் எங்கள் நால்வரைத் தவிர. படத்தில் நகைச்சுவை நடிகர்கள் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. ஹீரோயின்....சாரி. இந்தப் படத்தை எப்படி ஹிட் படம் என்கிறார்கள் என்று தெரியவில்லை.

*************************************************************

நேற்று எதேச்சையாக மலேசிய சேனலான 'வானவில்' பார்த்தேன். பார்த்தால் லைவ் ரிலே, எல்லாம் நம்ம ஊர் சின்னத்திரை நட்சத்திரங்கள். ஏதோ இன்றும், நாளையும், நாளை மறுநாளும் கலை நிகழ்ச்சி செய்ய வந்திருக்கின்றார்களாம். அவர்கள் அனைவரும் எப்படி ரசிகர்களை நிகழ்ச்சி பார்க்க அழைத்தார்கள் தெரியுமா?

"நாங்களெல்லாம் இந்தியாவிலிருந்து கஷ்டப்பட்டு உங்களுக்காக நிகழ்ச்சி வழங்குவதற்காக வந்திருக்கிறோம். அதனால், தயவு செய்து நிகழ்ச்சியைப் பார்க்க வாங்க. உங்களை எண்டர்டெயிண்ட்மெண்ட் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். டிக்கட் வாங்குவதற்கு இந்த எண்ணில்..... அழையுங்கள்"

ஒருவர் போன் செய்து இப்படி ஒரு கேள்வி கேட்டார்,

"ஏன் தமிழ் சீரியல்களில் எல்லாம் பெண்களையே வில்லியா காமிக்கறீங்க?"

பதில்: "தேவிப்பிரியாவை பாருங்க. வில்லியா நடிக்கும்போது தானே அவங்க நடிப்புத் திறமை வெளிப்படுது"

என்ன மாதிரி ஒரு பதில் பாருங்க?

*************************************************************

நேற்று டிவியில் ஒரு பழைய படத்தோட விளம்பரம் போட்டாங்க. படத்தோட பெயர் "ஒற்றையடி பாதையிலே" ஹீரோ சங்கர் கணேஷ். விளம்பரத்தை பார்த்த பையன் கேட்டான்,

"ஏம்ப்பா யாரு ஹீரோ?"

"இவர்தான்" என்று சங்கர் கணேஷை காண்பித்தேன்.

''இவரா?" என்று சிரி சிரி என்று சிரித்தான்.

ஜென்ரேஷன் கேப்........

*************************************************************

என் பொண்ணு என் பையனைப் பார்த்து கேட்டா,

"உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?"

"இரண்டு பேரையும்"

"உனக்கு என்னைப் பிடிக்குமா, அப்பாவைப் பிடிக்குமா?"

"இரண்டு பேரையும்தான்"

"நான் அழகா இல்லை அப்பா அழகா?"

"இரண்டு பேரும் அழகு"

"நடிகர் விஜய் ஹேண்ட்சம்மா இல்லை அப்பாவா?"

"அப்பாத்தான்"

பொய்யாக இருந்தாலும் அவனின் பதில்களிலானால் ஒரு வித சந்தோசத்துடன் மாடியை நோக்கிச் சென்றேன்.

இரண்டு பேரும் ஏதோ பேசிக்கொள்வது லேசாக காதில் விழுந்தது. அவர்களுக்குத் தெரியாமல் கூர்ந்து கவனித்தேன்.

"ஏண்டா பொய்தானே சொன்ன? அன்னைக்கு விஜய் ரொம்ப ஹேண்ட்சம்ன?" 

பையன்: "நாளைக்கு விஜயா எனக்கு பிஸா வாங்கித்தருவாரு?"

*************************************************************

முதல் பாராவுக்கான விடை. வேற யாரு? அந்த எழுத்தாளர் நான் தான். (நம்மளை எந்த எழுத்தாளர் கூப்பிட்டு பேசப்போறாரு?)

*************************************************************


Apr 18, 2011

பொய்யான நிஜங்கள் - 1


வேகமாக மிக வேகமாக வந்து நின்றது அந்த பஸ். காலை மணி 8. ஒரே கூட்டம். ஒரு 3 நிமிடங்கள் நின்று மக்களை அடைத்துக்கொண்டு கிளம்ப ஆரம்பிக்கையில் ஓடி வந்து ஏறப்போனவனைப் பார்த்து,

"யோய் ஏன்யா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?" என்று கடுப்புடன் திட்டி முறைத்துப் பார்த்து அவனுக்கு ஒரு கையை கொடுத்து உள்ளே இழுத்துவிட்டார் அந்த பஸ்ஸின் கண்டெக்டர். 

இந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது இந்தக்கதை. இது ஒரு பக்கக் கதையா? சிறுகதையா? குறுநாவலா? தொடர்கதையா அல்லது நாவலா? எனக்குத் தெரியாது. இது எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். அது போக போகத்தான் தெரியும். அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று நமக்கு இன்று தெரியுமா என்ன? அது போலத்தான் இந்தக் கதையும். போகப் போகத்தான் என்ன ஆகும்? என்று தெரியும். எப்படிப்பட்ட கதை இது என்று இந்த நொடி வரை எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு நல்ல கதையாக வரும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இப்போது தெரிகிறது. 

இந்தக்கதை அதன் போக்கில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும். கதாசிரியனாக விலகி நின்று நான் வேடிக்கைப் பார்க்க போகிறேன். எப்போதாவது தேவைப்பட்டால், நான் குறுக்கிடுவேன். அதற்கு என்னை மன்னிக்க வேண்டுமாய் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நாமும் பஸ்ஸுக்குள்ளும், ஏன் கதைக்குள்ளும் சென்று விடலாம்.

கண்டக்டரிடம் திட்டு வாங்கி ஏறியவன் பெயர் குரு. அவன்தான் கதையின் நாயகன். பார்க்க ஒரு 26 வயது சொல்லலாம். நல்ல உயரம். மாநிறம். குண்டும் இல்லாத ஒல்லியும் இல்லாத ஒரு உடம்பு. அவன் அணிந்திருந்த உடைகள் அவன் ஒண்ணும் அவ்வளவு பணக்காரன் இல்லை என்று சொல்கிறது. நிறைய தெய்வ பக்தி உள்ளவன் போல் தெரிகிறது. நெற்றியில் திருநீரும், குங்குமமும் இருக்கிறது. கோயில் போய்விட்டு வந்தவன் போல் தெரிகிறது. கையில் ஒரு சின்ன ஜோல்னா பை. அதில் என்னவென்று பார்த்துவிடலாமா? ஒரு பழைய சுஜாதா நாவல், ஒரு சின்ன டிபன்பாக்ஸ், அதன் வாடையை வைத்து சொல்லிவிடலாம், அதில் இருப்பது தயிர்சாதமும், ஊறுகாயும் என்று. அப்புறம் சில புத்தகங்கள். மீதி எல்லாம் கதைக்கு தேவையில்லாத சமாச்சாரங்கள்.

பஸ்ஸில் ஏறிய குரு இடம் கிடைக்காததால் அருகில் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் பார்த்தான். ஒரே கூட்டம். எல்லோரும் நெருக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்து கொண்டிருந்த சில செயல்களை குரு அருவெறுப்புடன் நின்று பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டான். 

இந்தக் கதையில் 'அப்படிப்பட்ட' எந்த வர்ணனைகளோ அல்லது நிகழ்வுகளோ இருக்காது என்பதை என் கோடிக்கணக்கான ரசிக கண்மணிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் கதைக்கு தேவையான சில சம்பவங்கள் அவ்வப்போது என்னையறியாமல் நிகழ்ந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. முதலில் அத்தியாயத்திலேயே (முதல் அத்தியாயமா? அப்படின்னா இது ஒரு பக்கக் கதை இல்லையா?) இரண்டு முறை நான் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். என்ன செய்வது? சில விசயங்களை விளக்குவது என் கடமையாகிறது. 

ஒரு வயதான பெரியவர் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். அதை இரண்டு கல்லூரி மாணவர்கள் ஏதோ சொல்லி கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்கள் நேற்று டிவியில் ஒளிப்பரப்பான ஒரு நாடகத்தின் நாயகிக்காக ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் அருகே இரண்டு அழகான இளம் யுவதிகள் ஏதோ புரியாத ஒரு ஆங்கில நாவலை இருவரும் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்காமல் தன் கடமையில் கண்ணாக, 'டிக்கெட், டிக்கெட்' என்று கேட்டுக்கொண்டே கும்பலை பிளந்து கொண்டு குரு அருகில் வந்தார் கண்டெக்டர்.

"சார், எங்க போகணும்?"

"அண்ணா நகர்"

"சார், அப்படியே எனக்கும் ஒரு டிக்கட் எடுத்துடுங்களேன்" என்று சொல்லி பணத்துடன் நீட்டிய கையிலிருந்து பணத்தை வாங்கினான் குரு.

நன்றாக உற்றுப் பார்த்ததில் அது ஒரு பெண்ணின் கை என்பது தெரிந்தது. அவள் யார்? ஒரு நாள் பொறுங்களேன்!

அவள் இந்தக் கதையின் நாயகியாகவும் வாய்ப்பு உள்ளதுபோல் தெரிகிறது.

பார்ப்போம்!
Apr 15, 2011

இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்!


என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு சைக்கிளை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் எடுக்க சென்றார். மொத்தம் 3000 வெள்ளி பணம் ஏடிஎம் மெஷின் மூலம் எடுத்திருக்கிறார். ரொம்பவும் பசிக்கவே அருகில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு சென்று பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்க பர்ஸை தேடினால், பர்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இல்லை. சைக்கிளில் போனபோது பர்ஸை எங்கோ தவறவிட்டிருக்கிறார். பர்ஸில் மொத்தம் ஏற்கனவே வைத்திருந்த 500 வெள்ளியும் சேர்ந்து 3500 வெள்ளி அதாவது 50,750 இருந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவரின் ஏடிஎம் கார்ட், க்ரெடிட் கார்டுகள், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் சில முக்கியமான பேப்பர்கள் இருந்துள்ளன. 

இதில் என்ன கவனிக்க வேண்டிய விசயம் என்றால், அன்று காலை நண்பர் இன்னொரு நண்பரிடம் அவரின் ஏடிஎம் கார்டை கொடுத்து, கார்டின் பின் நம்பரை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து அவரைப் பணம் எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். அவருக்கு வேறு வேலை இருந்த காரணத்தினால், அவரால் பணம் எடுக்க முடியவில்லை. கார்டையும், பின் நம்பர் எழுதியிருந்த பேபரையும் நண்பரிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இவர் அந்த பேப்பரை கிழித்து போடாமல் பர்ஸில் வைத்திருந்திருக்கிறார். அதுவும் சேர்ந்து தொலைந்துவிட்டது.

பேங்கில் 10000 வெள்ளிக்கு மேல் பணம் இருந்திருக்கிறது. ஒரு நாளைக்கு 3000 வெள்ளி வரை ஏடிஎம் கார்டின் மூலம் பணம் எடுக்கலாம். இவர் இரவு 8 மணிக்கு 3000 வெள்ளி எடுத்துள்ளார். இரவு 12.01க்கு இன்னொரு 3000 வெள்ளி எடுக்க முடியும். நண்பர் பதறிப்போய் சாப்பிடாமல் இரவு முழுவதும் தெருவில் அலைந்து ஒவ்வொரு இடமாக தேடி இருக்கிறார். ஆனால், எங்கும் இவரின் பர்ஸ் கிடைக்கவில்லை.

இன்னொரு நண்பரையும் அழைத்துக்கொண்டு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்க சென்றிருக்கிறார். அவர்கள் கம்ப்ளெயிண்ட் எழுதுவது வேஸ்ட். பர்ஸ் கிடைத்த எவரும் திருப்பிக் கொடுத்ததாய் சரித்திரம் எதுவுமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள். நண்பருக்கு திடீரென ஒரு யோசனைத் தோன்றி வங்கியின் 24 மணி நேர சேவையை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டை பிளாக் செய்துவிட்டார். அட்லீஸ்ட் இனி பேங்கிலிருந்து யாரும் பணம் எடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் போய்விட்ட நிலையில் தூங்காமல், விடியற்காலையில் எழுந்து ஒருவித மனநிலையில் மீண்டும் தெரு முழுவதும் தேடி அலைந்திருக்கிறார். 

இதற்கு இடையில் அந்த பர்ஸ் ஒரு சைனிஷ் டீச்சர் கையில் கிடைத்துள்ளது. அவர் அந்த பர்ஸில் உள்ள போட்டோவைப் பார்த்து தமிழர் என்று தெரிந்து கொண்டு அங்கே உள்ள லைன்ஸ் கிளப் தமிழ் உறுப்பினர் ஒருவரிடம் விசாரித்திருக்கிறார். அவர் உடனே நண்பரின் வீட்டு முகவரியை கொடுத்திருக்கிறார். நடுஇரவில் நண்பரின் வீட்டுக்கு வந்த டீச்சர் கதவைத் தட்டி இருக்கிறார். அப்போழுதுதான் நண்பர் அசந்து தூங்கி இருக்கிறார்.  அதனால் அந்த டீச்சர், "நீங்கள் தொலைத்த பர்ஸ் என்னிடம் இருக்கிறது. நாளை காலை வந்து எங்கள் பள்ளி பிரின்ஸிபாலிடம் பெற்றுக்கொள்ளவும்" என்று ஒரு பேப்பரில் எழுதி கதவில் சொறுகி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதைப் பார்க்காத நண்பர் மீண்டும் காலையில் தேடச் சென்றுவிட்டார்.

மிகவும் நொந்து போன நிலமையில் வீட்டிற்கு வந்தவர் கண்ணில் அந்த பேப்பர் தென்பட்டுள்ளது. உடனே அந்தப் பள்ளிக்கு ஓடியிருக்கிறார். அங்கே அந்த சைனிஷ் பள்ளியின் முதல்வர் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் அவரின் பர்ஸை கொடுத்திருக்கிறார். பார்த்தால் ஒரு பைசா குறையாமல் அப்படியே இருந்திருக்கிறது. 

நண்பர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த டீச்சருக்கு ஏதேனும் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அவரோ 'எனக்கு ஒன்றும் வேண்டாம். வேண்டுமானால் எங்கள் பள்ளிக்கு நன்கொடை அளியுங்கள்' என்றிருக்கிறார். உடனே நண்பர் பர்ஸை பள்ளியின் முதல்வர் கையில் கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றிருக்கிறார்.

நண்பர் பர்ஸில் உள்ள 3500 வெள்ளியையும் தரும் மனநிலையில் இருந்தாலும், அவர்கள் வாங்கிக்கொண்டது வெறும் 100 வெள்ளி மட்டுமே. இந்த விசயத்தை நண்பர் என்னிடம் சொன்னபோது அவர் முகத்தில் ஏற்பட்ட அந்த சந்தோச உணர்வை என்னால் வார்த்தையில் கொண்டு வர முடியவில்லை.

அந்த ஆசிரியர் போன்றவர்கள் இருப்பதால்தான் மலேசியாவில் எப்போதும் அதிகம் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.


Apr 8, 2011

என் புத்தகங்கள் பற்றிய சர்ச்சைகள்! -2


சாமான்யனின் கதை:

இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசும் முன் எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி இங்கே:

"உங்கள் எழுத்தில் எங்கேனும், எப்போதேனும் நீங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு ஒரு அளவு வேண்டும். எப்போதும் உங்களை பற்றி மட்டுமே எழுதினால் வாசிக்கும் அனைவரும் உங்கள் ரசிகர் மன்ற கண்மணிகளா என்ன?

கதை என்கிற பெயரில் நீங்கள் எழுதுபவற்றில் கூட அந்த முக்கிய "நல்லவன்" பாத்திரம் நீங்கள் தான் என்பது தெளிவு. இது புரிய ஆழ்ந்து படிக்கணும் என அவசியமில்லை. உங்களை நீங்களே எப்படி புகழ்ந்து எழுதி கொள்கிறீர்கள் என படித்து கிண்டல் செய்யவே எப்போதாவது ..ஆம் எப்போதாவது அவை வாசிக்கபடுகிறது.

உங்கள் எழுத்தை வைத்து பார்க்கும் போது நீங்கள் உங்களை பற்றி மட்டுமே சிந்திக்கும், பேசும், எழுதும் நபராக தான் தெரிய வருகிறீர்கள். அந்த பின்னூட்டம் சொல்ல வந்தது அதை தான்.

இதையும் கூட உங்கள் வளர்ச்சி பிடிக்காமல் யாரோ எழுதியதாக நீங்கள் நினைத்தால்.. ம்ம் ஒன்னும் செய்ய முடியாது. பல நாளாக உங்களிடம் சொல்ல நினைத்தது இன்று முடிந்திருக்கிறது"

இந்த பின்னூட்டத்தைப் படித்தபோது முதலில் கோபம் வந்தது. ஆனால் திரும்ப திரும்ப படித்ததில் அவர் கூறுவது சரிதான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்னைப் பற்றி அதிகம் எழுதி இருக்கிறேன் என்பது உண்மைதான்.

ஆரம்பத்தில் வலைப்பூ எழுத ஆரம்பித்த காலத்தில் என்ன எழுதுவது என்று குழம்பிய நிலையில் நான் எடுத்த முடிவுதான் அனுபவங்களைப் பற்றி எழுதலாம் என்பது. ஏதாவது ஒரு கருத்தினை சொல்லும்போது அதை என் அனுபவங்களின் வாயிலாக ஏன் சொல்லக்கூடாது? என்று நினைத்தேன். அதனால்தான் அப்படி எழுத ஆரம்பித்தேன். அது பலரால் ரசிக்கப்பட்டது. ஆனால், எதற்குமே ஒரு அளவு வேண்டும் இல்லையா? அதுவே அளவிற்கு அதிகமாக போகும் போது அது என்னைப் பற்றியே தற்பெருமை அடிக்கும் இடுகையாக அந்த நண்பருக்கு தோன்றியதில் ஒன்றும் வியப்பில்லை.

இனி அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டிக் காட்டிய அந்த முகம் தெரியாத நண்பருக்கு என் இதயம் கனிந்த நன்றி.

'சாமான்யனின் கதை' புத்தகம் பலரால் விரும்பி படிக்கப்படுகிறது. அதைப் பற்றி பாராட்டிப் பேசியவர்களை விட்டுவிடுவோம். இப்போதுதான் தற்பெருமை எழுத மாட்டேன் என்றேன். இந்த புத்தகத்தைப் பற்றிய மாற்றுக்கருத்துகள் ஒரே ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து வந்தது. "எங்கேயோ எப்போதோ அங்கங்க எழுதியதை புத்தகமா போட்டு இருக்காங்க. உன் டைரியை நான் ஏன் படிக்கணும்?"

நான் அவரிடம், "நீங்கள் முழுவதும் படித்தீர்களா?" என்றேன்.

"இல்லை சில கட்டுரைகள் மட்டும் படித்தேன்" என்றார்.

ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்காமல், சில கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு எப்படி புத்தகத்தைப் பற்றி கருத்து சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவிற்கும், புத்தகத்தின் "என்னுரையில்" மிகத் தெளிவாக விளக்கியுள்ளேன். புத்தகத்தின் ஆரம்பத்தின் சில பகுதிகள் சுயசரிதை போல் இருந்தாலும், பிற்பகுதிகள் முழுவதும் வாழ்வியல் அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள் என்று.

முழுவதும் படித்தால்தான் அந்த புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரியும்.

இரண்டு புத்தகங்களையும் அவர் முழுமையாக படிக்காமல் அவர் கேட்ட சில கேள்விகளைப் பாருங்கள்:

01. கதைகளில் வருவது நீ இல்லை என்கிறாய்? ஆனால் நம் ஊர் கோயில் வருகிறதே?

02. ஒரு அனுபவக் கட்டுரையில் ஒரு சூழ்நிலையில் நீ எப்படி நடந்து கொண்டாய் என எழுதியுள்ளாய். அதனால் எனக்கு என்ன பயன்?

03. உன் புத்தகங்களை கடையில் வைத்தால் போலீஸ் வந்து என்னை அரெஸ்ட் செய்துவிடுமோ என பயமாயிருக்கிறது.

ஆக புத்தகம் படிக்கும் மனநிலையில் இல்லாத ஒருவருக்கு என் புத்தகங்களை கொடுத்து எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் பாருங்கள். மொத்தம் 29 கதைகள் புத்தகத்தில் உள்ளது. அதில் மொத்தம் 4 அல்லது 5 கதைகளில் செக்ஸை ஓரளவு தொட்டிருக்கிறேன். அதுவும் ஒரு சில வர்ணனைகள்தான்.  எப்படி:
"என் கைகளின் மேல் அவள் கைகளை வைத்துக்கொண்டாள்"

"அவள் மார்பின் மேல் இருந்த செயின் மேல் பொறாமையாக இருந்தது"

"எனக்கு முன்னே குளித்தாள். துணிகளை மறைக்க முற்படவில்லை. பார்க்கக் கூடாதவைகளை பார்க்க வைத்தாள்"

இவைகள் சரோஜாதேவி கதைகள் போல் இருக்கிறது என்றால், அப்போ சரோஜாதேவி கதைகளை என்னவென்று சொல்வார்? அனைத்து கதைகளையும் படிக்காமல் ஒரு சில கதைகளை மட்டும் படித்துவிட்டு, இப்படி சொல்வதில் என்ன நியாயம்?

நண்பர் கேபிள் சங்கர் அடிக்கடி சொல்லுவார் "செக்ஸைப் பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாதவர்கள், போலியாக வாழ்பவர்கள்தான், சாதாரண விசயங்களுக்கு எல்லாம் குய்யோ முய்யோ என்று கத்துவார்கள்"

அது உண்மைதான் போல. போலியாக ஒருவிதமான நடிப்புடன் அடுத்தவர்களுக்காக வாழ்வது முறையான வாழ்க்கையா இல்லை வெளிப்படையான மனிதனாக வாழ்வது முறையான வாழ்க்கையா?

நான் வெளிப்படையான மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன்.

கட்டுரையை முடிக்கும் முன் ஒரே ஒரு தற்பெருமை விசயம். நேற்று இரவு ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் சென்னையிலிருந்து அழைத்தார். "வீணையடி நீ எனக்கு" புத்தகத்தைப் பற்றி ஒரு 30 நிமிடம் பேசினார். ஒவ்வொரு கதைகளாக விவாதித்தார்.

"பெண்களின் மறுபக்கங்களை நாசுக்காக தொட்டு சென்றிருக்கின்றீர்கள். நிறையபேரின் கல்யாண வாழ்க்கை சரியில்லாமல் போவதற்கே சரியான புரிதல் இல்லாததுதான் காரணம். ஆனந்த விகடன் ஒரு சர்வேயில் படித்தேன். 75 சதவிகித குடும்பங்களில் படுக்கை அறையில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் தனித் தனியாகத்தான் உறங்குகின்றார்களாம். காரணம் சரியாக மனம் விட்டு யாரும் பேசிக்கொள்வதில்லை. நீங்கள் ஒரு கதையில் சொன்னது போல, கல்யாணம் ஆனவுடன் கணவன் மனைவியைப் பற்றி கவலைப்படாமல் மிலிட்டரிக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ சென்றுவிடுகின்றார்கள். அவர்கள் எப்படி எல்லோமோ தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அந்த மனைவிகளின் நிலமையை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கஷ்டம். கணவன் மனைவிக்கிடையே சரியான புரிதல் இல்லாததால்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன" என்றவர்,

'உங்கள் கதைகளை காட்சிப்படுத்தினால் நன்றாக வரும் போல் உள்ளது. அதனால் உங்களின் புத்தகத்தில் உள்ள கதைகளை குறும்படமாக எடுக்க ஆசைப் படுகிறேன். அனுமதி கொடுப்பீர்களா?" என்றார்.

நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

இதைவிட வேறு என்ன எனக்கு சந்தோசம் வேண்டும்!

Apr 7, 2011

என் புத்தகங்கள் பற்றிய சர்ச்சைகள்! - 1

என் இரண்டு புத்தகங்களும் உறவினர்கள் மற்றும் என் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் ஒருவிதமான அதிர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில்,

வீணையடி நீ எனக்கு பற்றி:

"சாமான்யனின் கதை" படித்துவிட்டு கூப்பிட்டு பாராட்டிய உறவினர்கள், "வீணையடி நீ எனக்கு" படித்துவிட்டு அடிக்காத குறைதான். என் மேல் அவர்கள் வைத்திருந்த பிம்பம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கிறது.

பிரச்சனையின் உள்ளே செல்லும் முன் ஒரு சின்ன பிளாஷ்பேக்.

"ழ" பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருக்கும் நண்பருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

"தலைவரே, கதைகள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டேன். எல்லாக்கதைகளுமே நல்லத்தனமாக இருக்கிறது"

"அப்படியானால் விட்டுவிடுவோம் தலைவரே"

"தலைவரே, நான் நல்லத்தனமாக இருக்கிறது என்றுதான் சொன்னேனே தவிர, புத்தகம் வேண்டாம் என்று சொல்லவில்லையே"

புத்தகம் அச்சில் இருக்கும் போது எழுதிய சில கதைகளை அனுப்பி, "இப்போ பாருங்க கெட்ட கதைகள் எழுதி இருக்கிறேன்"

படித்து முடித்துவிட்டு அவர், "தலைவரே, இந்தக்கதையிலும் நீங்கள் நல்லவன்தான். இன்னொரு முறை படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்"

இன்னொரு முறை படித்துப் பார்த்தேன். அவர் சொன்னது எனக்கும் சரி என்று பட்டது. அடுத்தக் கதைக்கான விமர்சனமும் அப்படித்தான் இருந்தது.

அவருக்காகவே, "நான் கெட்டவன்" என்ற தொடரை எழுதினேன். படித்து முடித்துவிட்டு, "மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும், இதிலும் நீங்கள் நல்லவரே"

இன்னொருவர் அவரும் ஆசிரியர் குழுவில் உள்ளார். அவரிடம்,

"புத்தகம் வேண்டாம் தலைவரே"

"ஏன்?"

"எல்லாமே ஒருவிதமான நல்லவன் என்கிற போர்வையில் எழுதியதுபோல் இருக்கிறதாம்"

"தலைவரே, ஒன்று புரிந்து கொள்ளுங்கள். நானும் புத்தக கண்காட்சி முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன். இந்த பார்மேட்டில் எந்தக் கதைப்புத்தகமும் இல்லை. அதனால் இந்த புத்தகத்தில் மாற்றம் வேண்டாம். பின் வரும் புத்தகங்களில் மாறுபட்ட கதைகளை வெளியிடுவோம்"

இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

என் கதைகள் மீது என் உறவினர்கள்/ நண்பர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்:

01. பெர்சனல் டைரி போல் உள்ளது.
02. சில கதைகள் யாரிடமும் சொல்லக்கூடாதது.
03. சில கதைகள் ஓக்கே ரகம்.
04. சில கதைகள் ..... உன்னிடமிருந்து இப்படி நான் எதிர்பார்க்கவில்லை.
05. ஸ்பெஷலான நடை என்று எதுவும் இல்லை.
06. அந்த கோகிலா யார்? சுதா, ராகிணி யார்? எந்த வீட்டில் நம் தெருவில் இருந்தார்கள்?
07. கொஞ்சம் கூட கதைக்கான இமேஜினேஷன் இல்லை.
08. சரோஜாதேவி கதைகள் போல் உள்ளது
09. கடையில் எல்லாம் இந்தப் புத்தகத்தை எப்படி வைத்து விற்பார்கள்?

ஒருவருக்கு நல்லத்தனமாக தோன்றிய கதைகள் சிலருக்கு பிடிக்காமல் போனது ஏன்?

கதைகள் எதுவுமே புதிதாக சொல்ல முடியாது. எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. ஆதாம், ஏவால் காலத்திலிருந்தே கதைகள் நம்மிடையே உலவி வருகின்றன. எப்படி "சரிகம பதனி" என்று ஏழு சுவரங்களுக்குள் சங்கீதம் பரவி கிடைக்கிறதோ அப்படித்தான் கதைகளும்.

கதை சொல்வதில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கதாசிரியரின் பார்வையில் கதைகள் எழுதுவது. அதைப்புரிந்து கொள்ளாமல் எழுதிய அனைத்துமே கதாசிரியரின் வாழ்வில் நடந்தவைகள் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

ஏறக்குறைய சுஜாதா பல கதைகளில் அவர் சொல்வதுபோல் தான் எழுதி இருப்பார். "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" கதைகளைப் படித்துவிட்டு அவைகள் உண்மைக் கதைகள் என்று நம்பியவர்கள் பலர். ஆனால் அவைகள் உண்மைக்கதைகள் அல்ல. உண்மையும் கற்பனையும் கலந்த கதைகள்.

அந்த பாணி எனக்குப் பிடித்திருந்ததால் நானும் அதை பின்பற்ற ஆரம்பித்தேன். உறவினர்கள் அனைவரும் அந்தக் கதைகளில் வரும் ரவி கேரக்டர் நான்தான் என்று உறுதியாக நம்புவதாக தெரிகிறது. நம்மால் புதிதாக எதையும் எழுத முடியாது. ஏதாவது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து, சுவராஸ்யமாகத்தான் தர முடியும். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன்.

இது புரியாமல், "ரவி எப்படி இப்படி எழுதலாம்? என்று எப்படி நினைக்கலாம்?"

இவன் என் அண்ணன், என் உறவினன், என் மகன் என்று ஏன் பார்க்க வேண்டும்? ஏன் என்னை ஒரு எழுத்தாளராக பார்க்கக்கூடாது?

"சுஜாதாவோ அல்லது மற்ற எழுத்தாளர்களோ எழுதாத எந்த வசனத்தை, வர்ணனனையை நான் அப்படி எழுதிவிட்டேன்?"

வாழ்க்கையில் பல மனிதர்களை சந்தித்துவிட்டேன். நிறைய நாட்டினரை சந்தித்துவிட்டேன். பலவிதமான அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.

இருந்தாலும், நான் என் வாழ்க்கையை எப்படி வாழ்கிறேன் என்றுதான் பார்க்க வேண்டுமே ஒழிய என் எழுத்தை வைத்து என்னை எடை போடலாமா?

நான் செய்த ஒரே தவறு உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் என் புத்தகத்தை படிக்க கொடுத்ததுதான்.

இந்த பிரச்சனைகளுக்கு முற்றிப் புள்ளி எப்படி வைப்பது?

ஒன்று எல்லாப் புத்தகங்களை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் மிகச் சிறந்த கதைகள் (மிகச் சிறந்த கதைகள் என்றால்....?) அடங்கிய இன்னும் ஒரு தொகுப்பை வெளியிட வேண்டும்.

என்ன செய்வது?

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

"சாமன்யனின் கதை" பற்றிய சர்ச்சை.. நாளை...

Apr 6, 2011

தோனியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது! - பாகம் 2நேற்றைய இடுகையைப் படித்த நண்பர் ஒருவர் இப்படி பின்னூட்டமிட்டிருந்தார்:


"இது ஏற்கனவே நீங்க போட்ட மொக்க தானே? மீள்பதிவா?

அன்புடன்

மயில் ராஜபாண்டியன்"

எனக்கு அவரின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். உண்மையாகவே நான் ஏற்கனவே எழுதிய சப்ஜக்டா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது வரை தேடிக்கொண்டிருக்கிறேன், என்னால் எந்த இடுகையில் எழுதியிருக்கிறேன் என்று கண்டுபிடிக்கவில்லை. சில சமயம் இப்படி ஆகிவிடுகின்றது. நம்மை அறியாமலேயே இந்த தவறு நேர்ந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்.

அவர் ''மீள்பதிவா?" என்று கேட்டிருந்தார். இது என்னுடைய 275வது இடுகை. கூட்டிப்பார்த்துவிட்டு என்ன கம்மியாக இருக்கிறதே? 275 வரவில்லையே என கேட்க வேண்டாம். என்னுடைய இரண்டு புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் கதைகள், கட்டுரைகள் என் வலைத்தளத்தில் இப்போது இல்லை.

இந்த 275 இடுகைகளில் ஒரு மீள்பதிவு கூட கிடையாது. ஏன் என்றால் மீள்பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. விசயம் இருந்தால் எழுதுவேன். இல்லை என்றால் எழுதமாட்டேன். தினமும் ஏதாவது பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவிட மாட்டேன்.

நான் ஏன் நண்பரின் பின்னூட்டத்தைப் பார்த்து சந்தோசப்பட்டேன் என்றால், எழுதிய நான் மறந்துபோன விசயத்தை அவர் நினைவு வைத்திருந்து சொல்கிறார் என்றால், நண்பர் என்னை எப்படி ஆழ்ந்து படிக்கிறார் பாருங்கள். அதனால்தான் அதிகம் சந்தோசப்பட்டேன்.

நண்பர் நேற்று நான் எழுதியது ஏற்கனவே எழுதிய மொக்கை என்று கூறிவிட்டதால், அந்த இடுகையை தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் நான் சொல்ல வந்த விசயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.

பொதுவாக எந்த ஒரு கருத்தையோ அல்லது சமபவத்தைப் பற்றியோ விவரிக்கும்போது, என் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு அனுபவம் மூலம் விளக்கவே ஆசைப்படுவேன். அதனால்தான் நேற்று அப்படி ஆரம்பித்தேன்.

ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும்? எப்படி சமாளிக்க வேண்டும்? எப்படி பதட்டப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்?

இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் காண்பது அவ்வளவு சுலபம் அல்ல. அன்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் கேப்டன் தோனி நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். இலங்கை முதலில் பேட் செய்யும்போது ரன் ரேட் விகிதம் 2. ஆனால் கடைசி 5 ஓவர்களில் அவர்கள் நம் பவுலர்களை விளாசித்தள்ளிதனால் ரன் ரேட் உயர்ந்தது. இந்த இரண்டு சமயங்களிலும் தோனியின் முகத்தில் என்னால் எந்தவித உணர்ச்சியும் பார்க்க முடியவில்லை. மிகச் சாதாரணமாக வைத்து இருந்தார்.

இந்தியாவே ஆவலாக பார்த்துக்கொண்டிருக்கும் போது சேவாக் அவுட் பின் டெண்டுல்கர் அவுட். பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஷாக். கம்பீர் வந்து ஓரளவு ஆடிக்கொண்டிருக்கையில், அடுத்தவரும் அவுட். அப்போது யுவராஜ்சிங் விளையாட வேண்டும். ஆனால் ஆர்டரை மாற்றி தோனி இறங்குகிறார். அதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். அதுமட்டும்மல்ல. கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து மிக மிக சரியான பந்துகளை மட்டும் தேர்ந்து எடுத்து, ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று அடிக்க ஆரம்பித்தவர் பின் நான்கும் ஆறும் அடித்தார்.

30,000 ஆயிரம் பார்வையாளர்கள் அரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் டிவியில் பார்க்கிறது. ஏதேனும் தவறு நடந்து தோற்றிருந்தால் அது தோனியால்தான் என்று சொல்லி அவரை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் நினைக்காமல், நிதானமாக மிக மிக நிதானமாக, வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கொளாய் கொண்டு, எவ்வளவு பொறுமையாக விளையாண்டார் பாருங்கள்.

அந்த நிதானம்தான் நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது. வெற்றி பெற்று பந்து சிக்ஸர் போகும் போது கூட, யுவராஜ் சிங் வெளிப்படுத்திய அளவு தோனி தன் மகிழ்ச்சியை வெளியே காண்பிக்கவில்லை. என்ன ஒரு நிதானம் பாருங்கள். மற்றவர்கள் போல் அவர் கத்தவோ, குதிக்கவோ இல்லை.

டென்ஷனின் போதும், வெற்றியின்போதும் அவருக்கு இருந்த அந்த நிதானம் மட்டும் ஒவ்வொரிடமும் இருந்தால், எந்த பிரச்சனையும் யாரையும் அண்டாது. இது நான் அவரிடம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய மேனேஜ்மெண்ட் பாடம்.

எனக்கு தோன்றியதை இங்கே எழுதிவிட்டேன். இதை ஒத்துக்கொண்டு படிப்பதும், மொக்கை என்று ஒதுக்கித் தள்ளுவதும் உங்கள் விருப்பம்.

Apr 5, 2011

தோனியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது! - பாகம் 1


எனக்கு சிறு வயதில் அதிக கோபம் வரும். தேவையில்லாமல் கோபப்படுவேன். அதனால் நண்பர்களுடன் நிறைய சண்டை வந்திருக்கிறது. சில சமயம் அடிதடி வரை சென்றிருக்கிறது. அதனால் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன். ஆனால் அதற்கு எல்லாம் என்ன காரணம் என்று அந்த வயதில் என்னால் உணரமுடியாமல் போய்விட்டது. யோசித்துப்பார்த்தால், எதிலும் ஒரு அவசரம், நிதானமின்மை, நான் பெரிய ஆள் என்ற அகம்பாவம், தலைக்கனம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

என் நிலமை எனக்குப் புரிய பல வருடங்கள் ஆனது. நான் கம்பனியில் சேர்ந்த புதிது. எங்கள் கம்பனி இயக்குனர்களில் ஒருவரின் மகன் எங்கள் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தார். ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மிகப்பெரிய புத்திசாலி. நல்ல படிப்பாளி. ஆனால் அவரும் கோபக்காரர். அவருக்கும் எனக்கும் வேலை விசயமாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்னுடைய தினசரி அலுவலக வேலையில் குறுக்கிட ஆரம்பித்தார்.

அவருடைய தொல்லைகள் அதிகமாக ஒரு நாள் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் பெரிதாகி சண்டையில் போய் முடிந்தது. உடனே நான், "என் ரூமை விட்டு வெளியே செல்லுங்கள்" என்று கூறிவிட்டேன். அவரும் உடனே சென்றுவிட்டார். வெளியில் இருந்த அனைத்து அலுவலக நண்பர்களும், "உலக்ஸ், நீ அவ்வளவுதான். அவரை பகைச்சுக்கிட்ட இல்லை. உன் வேலை போகப்போகிறது" என்று சொல்லி பலவாறு பயமுறுத்திவிட்டார்கள்.

சூழ்நிலையின் ஆழம் புரிய எனக்கு பல மணி நேரங்கள் ஆனது. புதிதாக சேர்ந்திருந்த சிலர், அவரைப் பிடிக்காதவர்கள், என்னிடம், "நீ பண்ணது சரிதான். அவனை இன்னும் நீ திட்டி இருக்க வேண்டும். டைரக்டர் பையன் என்றால், மனதில் பெரிய இவன் என்று நினைப்பா?" என்று சொல்லி என்னைப் பலவாறு உசுப்பேத்திவிட்டார்கள். பலவிதமான குழப்ப நிலையில் நான் தங்கி இருந்த அறைக்குச் சென்றேன். பல மணிநேரம் சிந்தித்தேன்.

'நான் செய்தது தவறா? நான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாதோ? என்ன இருந்தாலும் அவன் ஒரு இயக்குனரின் மகன் அல்லவா? அப்படி என்ன நமக்கு கோபம்? பல வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு வேலை கிடைத்திருக்கிறது. அதிலிருந்து நம்மை அனுப்பிவிட்டால் என்ன செய்வது? வேலை கிடைக்க பல மாதங்கள் ஆகுமே? அப்பாவிடம் என்ன பதில் சொல்வது?' என்று குழம்பி தவித்தேன்.

ஆனாலும் மனதின் ஓரத்தில், 'அவர் நம் வேலையில் குறுக்கிடுவது சரியா? தேவையில்லாமல் என்னை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? அவரிடம் சண்டை போட்டது சரிதான்'

இப்படி மாறி மாறி குழம்பினேன். நான் பொதுவாக எந்த சண்டையையும் வளரவிடமாட்டேன். உடனே பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். பல மணி நேர சிந்தனைக்கு பிறகு ஒரு முடிவு எடுத்தேன். ரூமை விட்டு வெளியே வந்தேன். யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை. ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு நேராக இயக்குனரின் மகனின் வீட்டிற்கு சென்றேன். வண்டியை நிறுத்தினேன்.

இந்த சமயத்தில் ஒரு விசயத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எந்த சண்டையுமே ஏதோ ஒரு கண நொடியில் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில்தான் ஆரம்பிக்கிறது. சரியாக யோசித்துப் பார்த்தோமானால், பல நேரங்களில் அந்த சண்டையோ அல்லது வாக்குவாதமோ தேவையற்றது என்பது நமக்குப் புரியும். அதே போல் சண்டையிட்டவர்களை அடுத்த நாள் ஒன்றுமே நடக்காதது போல் நேரில் சந்தித்துப்பாருங்கள், உங்களுக்கு பல உண்மைகள் புரிய வரும்.

அவரின் வீட்டின் கதவைத் தட்டினேன்.

கொஞ்ச நேரம் கழித்து கதவு திறந்தது. வெளியே வந்த அவர் என்னைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டார். அந்த நேரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. "என்னடா இது? சாயங்காலம் நம்மிடம் சண்டையிட்டவன் இரவு வீட்டில் வந்து நிற்கிறானே" என்ற குழப்பம் அவரின் முகத்தில் தெரிந்தது.

ஒருவிதமான ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் என்னைப்பார்த்து,

"உள்ளே வா உலக்ஸ்" என்றார்.

-தொடரும்

 

Apr 1, 2011

மிக்ஸர் - 01.04.2011

புதன் இரவு 1.30 வரை விழித்திருந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்தது வீண் போகவில்லை. மிக அற்புதமான மேட்ச். மீண்டும் என்னை பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றது. ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடும் போது மட்டும் ஏன் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம் என்றுதான் தெரியவில்லை. அதை ஏன் நம்மால் ஒரு மேட்சாக பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு போர் நடப்பது போல் அல்லவா நினைக்கிறோம். டெண்டுல்கர் நூறாவது செஞ்சுரி அடிப்பார் என்று பார்த்தால் ஏமாற்றமே. மும்பையில் பைனலில் நிச்சயம் செஞ்சுரி அடிப்பார் என்று நம்புகிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன். World Cupம் நமக்குத்தான் என்று நினைக்கிறேன். பார்ப்போம்...

**************************************************

'ழ' பதிப்பகத்தின் புத்தக வெளியீடு நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. விழாவிற்கு நான் செல்லவில்லையே என்ற ஏக்கம் அன்று முழுவதும் இருந்தது. சென்ற ஞாயிறு அன்று இரவு எங்கும் செல்லவில்லை. என் குழந்தைகள் பிறந்ததினம் அன்று ஏற்பட்ட அதே உணர்வு அன்றும் ஏற்பட்டது. கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது. புத்தகங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்ற பயமும் இருந்தது. ஒரளவிற்கு புத்தகங்கள் விற்று இருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி. இன்னும் ஒரு டென்ஷன் பாக்கி இருக்கிறது. காரணம் என் அக்காக்கள் மற்றும் உறவினர்கள் இன்று முதல் படிக்க இருக்கிறார்கள். நான் ஏற்கனவே என் மூன்றாவது அக்காவிடம் சொன்னேன்,

"சந்தோஷ் சுபரமணியம் படத்தில் ஒரு காட்சி வரும். ஜெயம் ரவியைப் பற்றி வீட்டில் நல்ல இமேஜ் வைத்திருப்பார்கள், ஜெனிலியா அவரைப் பற்றி ரவியின் அண்ணிகளிடமும், தங்கையிடமும் சில விசயங்கள் சொல்லுவார். அவர்கள் உடனே, அப்படியா? எங்கள் வீட்டு பிள்ளை அப்படிப்பட்டவனா? என்று ஆச்சர்யப்படுவார்கள். அதுபோல் நீங்கள் என்னைப்பற்றி வைத்திருக்கும் பிம்பம் உடையப்போகிறது" என்றேன்.

"பார்ப்போமே, உன்னைப் பற்றியும் தெரிந்து கொள்வோமே" என்று சொல்லி இருக்கிறார்கள். அதான் டென்ஷ்ன்.

**************************************************

நான் ஜனவரியில் ஊரில் இருந்த போது என் இரண்டாவது அக்காவிடம் என் மனைவி ஒரு கதையின் பிரின்ட் அவுட்டை கொடுத்து (புத்தகம் அச்சிடும் முன்) படிக்கச் சொன்னார்கள். அவர் ஒரு பாரா படித்துவிட்டு தூக்கி எரிந்து விட்டார். எனக்கு அழுகையே வந்துவிட்டது.

பிறகு நான் "உனக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த கதை நான் 25 வருடங்களுக்கு முன் எழுதியது. பலரால் பாரட்டப்பட்டது. பரிசு வாங்கியது" என்று சொல்லி அதை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு வெளியில் சென்று விட்டேன்.

பின் இரவு நான் வீட்டிற்கு வந்தவுடன் என் அக்கா,

"டேய் அந்த கதை நல்லா இருந்துச்சுடா" என்றார்கள்.

"உனக்கு எப்படி கதை கிடைத்தது. நாந்தான் அதை வேறு இடத்தில் வைத்துவிட்டேனே" என்றேன்.

"கண்டு பிடித்து எடுத்து படித்தேன்"

"அப்போது ஏன் தூக்கி எரிந்தாய்?"

"என் தம்பி போய் கன்னா பின்னா என்று காதல் கதை எழுதுவதா?"

எனக்கு ஒரே ஆச்சர்யம். தம்பிக்கு வயது ஆகிவிட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இன்னும் என்னை சிறுவனாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் பயமாக இருக்கிறது. படித்தவுடன் என்ன சொல்வார்களோ என்று?

**************************************************

நேற்று மதியம் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக உணர்ந்தேன். சென்னையிலிருந்து ஒருவர் அழைத்தார். அவர் பெயர் ஹரிஹரன் என்று நினைக்கிறேன். அவர் ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டராம். பிறகு அவரை வைக்க சொல்லி விட்டு நான் அழைத்தேன். நண்பர் கேபிள் சங்கர் மூலம் என் நம்பர் கிடைத்திருக்கிறது. ஒரு 15 நிமிடம் என் "சாமன்யனின் கதை" புத்தகத்தைப் பற்றி பேசினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். ஒவ்வொரு கட்டுரையாக விமர்சித்தார். "81ம் பக்கத்தில் இருக்கிறேன் சார், முழுவதும் முடித்தவுடன் அழைக்கிறேன்" என்றார். நாம் "நிச்சயம் சந்திக்க வேண்டும். என்னை போன்றவர்களுக்கு உங்கள் புத்தகம் ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது" என்றார். நண்பர்கள், உறவினர்கள் அழைத்து பாராட்டுவது முக்கியமல்ல. ஆனால் முகம் தெரியாத ஒருவர் அழைத்து பாராட்டுவது மிக முக்கியம் அல்லவா? இப்போது அதிக பொறுப்பு வந்திருக்கிறது. நல்ல விசயங்கள் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த சந்தோசத்திற்கு காரணமான "ழ" பதிப்பகத்திற்கும், நண்பர் கேபிள் சங்கருக்கும் மற்றும் நண்பர் கே ஆர் பி செந்திலுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி.

**************************************************
சினிமா இந்த அளவிற்கு குழந்தைகளின் படிப்பையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை.

இரண்டாவது படிக்கும் என் பையன் எழுதி இருப்பதைப் பாருங்கள்:

"Living Things" என்பதற்கு உதாராணமாய் "ரோபோ" என்று எழுதி இருக்கிறான். என்னடா இது? என்று கேட்டால், "எந்திரன் படத்துல ரோபோ பேசலியா நடக்கலையா?" என்கிறான். இது கூட பரவாயில்லை. இன்னொரு கேள்விக்கு அவன் எழுதி இருக்கும் பதிலைப் பாருங்கள்:

Question: Please give five ways to express your anger or frustration to someone who is lazy?

01. I will beat him with a rock

02. I will punch him with leg

03. Slaps with my hand

04. I do not friend forever

05. I will scold him

டீச்சர் படித்துவிட்டு, "Not good attitude" என்று எழுதி அனுப்பியுள்ளார். நான் அவனிடம், "ஏண்டா, இதெல்லாம் தப்பு இல்லையா?" என்றால், "என்ன தப்பு? அவன் லேசியா இருக்கான். சினிமால அன்னைக்கு அவங்க அப்பா அவனை அடிக்கலை" என்கிறான்.

எவனை எந்த அப்பா அடிச்சான்னு எனக்குத் தெரியலை. அவனால எனக்கு கிடைச்ச பேர், "அப்பனுக்கு பிள்ளை தப்பாம்ம பொறந்துருக்கு"

**************************************************