Mar 26, 2011

என் ராசி அப்படி!

நான் எட்டாவது படிக்கும் போது கட்டுரைப் போட்டி ஒன்றில் பரிசு வாங்கினேன். பரிசு கொடுக்கும் நாள் அன்று என்னால் சென்று வாங்க முடியவில்லை. காய்ச்சலோ என்ன காரணமோ நினைவு இல்லை.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அனைத்து பள்ளிகள் சார்பாக நடந்த ஒரு பாட்டு போட்டியில் ஆறுதல் பரிசு வாங்கும் போதும் அதே நிலை.

கல்லூரியில் நடந்த சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கியபோதும் என்னால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. காரணம் ஏதோ விடுமுறை நாளில் அந்த நிகழ்ச்சி நடந்ததாக நினைவு. பிரின்ஸ்பால் ரூம் சென்று பின்னொரு நாளில் சர்ட்டிபிகெட்டைப் பெற்றுக்கொண்டேன்.

M.COM முதல் ஆண்டில் அனைத்து பாடங்களிலும் முதலாக வந்த போது சர்ட்டிபிகெட்டும், புத்தகமும் பரிசாக வழங்கினார்கள். அந்த பரிசளிப்பு விழாவிற்கும் செல்ல முடியவில்லை. காரணம் அன்று கோவாவில் சுற்றுலாவில் இருந்தோம். அதே போல் பிரின்ஸ்பாலிடம் பின்னாளில் பெற்றுக்கொண்டேன்.

M.COMல் முடித்து யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியபோதும் அதே நிலைதான்.

ஏன் நான் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதெல்லாம் கூட பரவாயில்லை. பெண் பார்த்து வந்து, பிடித்துள்ளது என்று அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு மலேசியா வந்துவிட்டேன். பிறகு வீட்டில் கலந்து பேசி, நிச்சயதார்த்தம் தேதி குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் பாருங்கள்! என்னுடைய நிச்சயத்தார்த்தத்திற்கே என்னால் செல்ல முடியவில்லை.

என் கல்யாணத்திற்கு நான் செல்ல வேண்டியது ரொம்ப முக்கியம் என்பதால் கல்யாணத்திற்கு சென்றேன் என்று நினைக்கிறேன்!

நான் சில சமயம் நினைத்துக்கொள்வதுண்டு. வேறு ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிக்கு நாம் நிச்சயம் செல்வோம், முதல் அமைச்சர் கையிலோ அல்லது பிரதமர் கையிலோ........ வேண்டாம் விடுங்கள். விசயத்திற்கு வருகிறேன்.

இதே வரிசையில் இன்னும் ஒரு நிகழ்வு. நாளை என்னுடைய முதல் இரண்டு புத்தகங்கள் வெளிவருகிறது. ஆனால் என்னால் செல்ல முடியாத சூழல். என்ன செய்வது? என் ராசி அப்படி!

அதனால் வாசகர்கள், பதிவர்கள், நண்பர்கள், தமிழ் நாட்டில் வசிக்கும் அனைவரும், ஏன் இந்தியாவில் வசிக்கும் அனைத்து தமிழரும், ஏன் முடிந்தால் உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழரும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று சிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.Mar 21, 2011

நிறைவேறும் ஆசை!
''அப்பாடா! ஒரு வழியாக என் ஆசை நிறைவேறப்போகிறது. என் எழுத்துக்கள் எல்லாம் புத்தகமாக வருமா? என நான் ஏங்கிய நாட்கள் பல உண்டு. இதோ இப்போது என் புத்தகங்களும் வெளிவருகிறது"

இப்படி எல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் நீண்ட நாட்கள் கழித்து வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதே நாமும் புத்தகம் போட வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் எழுத ஆரம்பித்தேன். எப்பொழுதுமே ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டு அதை நோக்கி பயணப்படுவதுதான் என் பழக்கம். அந்த வகையில்தான் என் புத்தகங்கள் இப்போது வெளி வரப்போகின்றன.

இப்படி நான் சொல்வது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அதுதான் உண்மை. நம்மால் முடியும் என்று நினைத்து எந்த காரியத்தை தொடங்கினாலும் நமக்கு வெற்றிதான் கிடைக்கும். இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

மற்றபடி புத்தகம் நன்றாக இருக்குமா? இல்லை குப்பையா? என்ற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நான் இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அதன் தரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன்.

ஆனால், என்னதான் குறிக்கோளுடன் நான் எழுத ஆரம்பித்தாலும், முதலில் நான் எழுதியவைகள் பிரசுரிக்க தகுதியானவைகளா? என்பதில் பெரும் குழப்பம் இருந்தது. அதனால் முதலில் பல நண்பர்களிடம் அவர்களின் அபிப்ராயங்களை கேட்டேன். எல்லோரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். பின் அன்பு நண்பர்கள் கே ஆர் பி செந்திலையும், கேபிள் சங்கரையும் கலந்து ஆலோசித்தேன். அவர்கள் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவிக்கவே, என் எழுத்துக்கள் புத்தகங்கள் ஆக வெளிவருவதற்கு சம்மதித்தேன்.

என் புத்தகங்களை வெளியிடும் "ழ" பதிப்பகத்திற்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என் எழுத்துக்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை.

என் புத்தகங்கள் பதிவுலக சூப்பர் ஸ்டார் கேபிளின் புத்தகத்துடனும், வளர்ந்து வரும் தொழில் அதிபர் கே ஆர் பி செந்திலின் புத்தகத்துடனும் வெளிவருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இது சம்பந்தமாக "ழ" பதிப்பகம் வெளியிட்டுள்ள இடுகையினை கீழே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

ழ பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

ழ பதிப்பகத்தில் இருந்து வரும் வாரம் நான்கு புதிய புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்..

1. "சாமானியனின் கதை", ஆசிரியர் திரு.என். உலகநாதன் அவர்கள்.
2. "வீணையடி நீ எனக்கு", ஆசிரியர் திரு.என். உலகநாதன் அவர்கள்.
3. "பணம்'', ஆசிரியர், திரு.கே.ஆர்.பி.செந்தில்
4. "கொத்து பரோட்டா", திரு.சங்கர் நாரயண் (கேபிள் சங்கர்)


எங்களது முந்தைய படைப்பான ‘சங்கர் நாராயண்’ அவரகள் எழுதிய “மீண்டும் ஒரு காதல் கதை” க்கு நீங்கள் தந்த அதே ஆதரவை இந்த படைப்புகளுக்கும் தருமாறு வேண்டுகோள் வைக்கிறோம்..