Jan 22, 2011

மிக்ஸர் - 22.01.2011


கடுமையான வேலைப்பளு. ஆனால் பேங்கிற்கும் செல்ல வேண்டியிருந்தது. அப்போதுதான் ஏஜிஎம் வந்து சென்றிருந்ததால் பேங்கிலும் பரபரப்பு இருந்தது. மேனஜர் டென்ஷனோடு இருப்பார். தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என நினைத்து அவரின் ரூமை நெருங்கினேன். அவர் ரொம்ப கூலாக பேச ஆரம்பித்தார்.

"சாரி சார்! ரொம்ப பிஸியா இருப்பீங்க போல. அப்புறம் வரட்டா?"

"என்ன பிஸி. உக்காருங்க. டென்ஷனா இருக்குங்கிறதுதுக்காக நம்ம இயல்பு மாறக்கூடாது. எப்பவும் போல் சந்தோசமாக இருக்க வேண்டும்" என்றவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார்.

அவர் உதிர்த்த சில ஜோக்குகள்:

ஜோக் 1:

ஒருவர் எங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரின் விண்ணப்பத்தை சரி பார்த்துக்கொண்டிருந்த ஆபிஸருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சரி, அவரிடமே கேட்கலாம் என நினைத்து, அவருக்கு தொலை பேசி இருக்கிறார்,

"சார், நான் பேங்கிலிருந்து பேசறேன். உங்க விண்ணப்பத்துல ஒரு சந்தேகம் இருக்கு சார். கொஞ்சம் பேசலாமா?"

"சார், நான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கேன். அப்புறம் பேசலாமே?"

"அதனால என்ன? வண்டியை ஓரமா நிறுத்திட்டு பேசுங்க"

"சார், அது முடியாது"

"ஏன்"

"டிரையினை எப்படி ஓரமா நிறுத்த முடியும் சார்"

அவர் ரயில் இன்ஜின் டிரைவர் என்பது அப்புறம் தான் ஆபிஸருக்கு தெரிந்திருக்கிறது.

**********************************************************

ஜோக் 2:

"சார், உங்க பையன் படிப்பை முடிச்சுட்டானா?"

"முடிச்சிட்டான்"

"மேலே படிக்கிறானா?"

"ம்ம்ம் படிக்கிறான்"

"என்ன படிக்கிறான்?"

"ஏதோ அரியர்ஸாம், அதான் படிக்கிறேன்னான்"

**********************************************************

ஜோக் 3

படித்ததில் பிடித்தது. எழுதியவர் பெயர் மறந்துவிட்டது:

"ஏங்க, சக்கரை இல்லைங்கறதுக்கு சந்தோசப்படாம இதுக்குப் போய் வருத்தப்படறீங்க"

"ஹலோ, ரேஷன்ல சக்கரை இல்லைனுட்டாங்க!!!

**********************************************************

கேட்டதில் பிடித்தது:

உலகத்துல மனச்சிதைவு நோய் ரெண்டு பேருக்கு மட்டும் வராது?

யார் யார்?

ஒருத்தன் இன்னும் பொறக்கலை. இன்னொருத்தன் ஏற்கனவே செத்துப்போய்ட்டான்.

- பெரியார்தாசன்.

**********************************************************

நண்பர் இறப்பதற்கு முதல் நாள் இரவு, சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டபோது, அவரை உடனே ஆஸ்பிட்டல் கூட்டிப்போகலாமா? இல்லை காலையில் கூட்டிப்போகலாமா? என நிறைய யோசித்துருக்கிறார்கள். டிரிங்ஸ் சாப்பிட்ட நிலையில் கூட்டிச்சென்றால், டாக்டர் திட்டக்கூடும் என்பதால் அடுத்த நாள் காலை கூட்டிச்செல்லலாம் என நினைத்து விட்டுவிட்டார்கள். அதிகாலை நண்பர் இறந்துவிட்டார். அவனின் அப்பா என்னிடம்,

"இரவே கூட்டிச் சென்றிருக்கலாம். சென்றிருந்தால் பிழைத்திருப்பானோ?" என அழுதார்.

அதற்கு நண்பர் என்னிடம்,


"அப்படித்தான் நடக்கும். எப்போதுமே எமதர்மன் தன் மேல் குற்றம் வராமல் பார்த்துக்கொள்வான்"

உண்மையாக இருக்குமோ?

**********************************************************

நேற்று ஒரு இடத்தில் பிளாட் பார்க்க சென்றிருந்தோம். மாலை 6 மணி இருக்கும். நானும் என் இன்ஜினியரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு லுங்கி, பனியனுடன் வந்தார்.

"யார் நீங்க? எதுக்கு வந்தீங்க? இங்க எதுக்கு நிக்கறீங்க?"

எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே,

"உங்களுக்கு என்ன? நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்? இந்தியால நான் எங்க வேணா வருவேன் போவேன்"

என்னை நிமிர்ந்து பார்த்தவர்,

"பிளாட் பார்க்க வந்தீங்களோனு நினைச்சேன்" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

நண்பர், "வாங்க, இந்த நிலத்து ஓனர் யாருனு அவர் கிட்ட கேட்கலாம்?"

வேறு வழியில்லாமல் அவரிடம் சென்று கேட்டோம்.

'யாருங்க இங்க பிளாட் போடறது?"

"நாந்தான். அதான் உங்களை கேட்டேன்"

அசடு வழிந்து வந்தேன்.

நண்பர் வேறு, "என்ன உலக்ஸ், அவர் கேட்ட முறை தப்பா இருக்கலாம். ஏன் கோபப்பட்டீங்க? அதனாலதான் அவர் கிட்ட பேச சொன்னேன்"

இப்படித்தான் சில சமயம் ஆகிவிடுகிறது.

**********************************************************

Jan 13, 2011

நோகடிக்கக் கூடாது!

ஒரு வழியாக செவ்வாய் கிழமை காலை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட திருச்சி வந்து சேர்ந்தேன். நிறைய நண்பர்களை சந்திக்க ஆசை. நேரம் கிடைக்குமா? எனத்தெரியவில்லை. எப்பொழுதும் என்ன வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்? என்றைக்கு என்ன வேலை பார்க்க வேண்டும் என்று ஒரு செக் லிஸ்ட்டுடன் வருவேன். இப்பொதும் அப்படித்தான். இருந்தாலும், முதலில் நான் பார்க்க நினைத்தது, என் நண்பனின் குடும்பத்தை. 25 நாட்களுக்கு முன் அவன் எங்களை விட்டு பிரிந்து இறைவனிடம் சென்றுவிட்டான். நண்பர்களின் வட்டத்தில் முதல் மரணம் இது.. அவனைப் பற்றியும் அவன் மரணத்தைப் பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

முதலில் என் நண்பனின் அண்ணனை சந்தித்தேன். அவனும் எனக்கு மிக நெருக்கம். முதலில் என்னை சந்தித்தவுடன் வந்த அழுகையை அடக்கிக்கொண்டான், நானும்தான். நானும் அவனும் அவன் தம்பி வீட்டிற்கு சென்றோம். சென்ற வழியில் அவன் கூறிய விசயங்கள் தான் என்னை இந்த இடுகையை எழுத வைக்கிறது. அவன் இறந்ததோ ஹார்ட் அட்டாக்கில். குடிப்பழக்கம் தான் காரணம். ஆனால், ஊரில் உள்ளவர்கள் பல விதமாக பேசுவதாக கூறி வருத்தப்பட்டான். எனக்கு இதில் நிறைய அனுபவம் இருந்ததால், அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே சென்றேன்.

வீட்டை நெருங்குகையில் அவனிடம் சொன்னேன்,

"இழப்பின் வலி எனக்கு மிக நன்றாகத் தெரியும். நிறைய அனுபவித்துவிட்டேன். அதனால் என்னால் எதுவும் பேச முடியாது. அமைதியாக மட்டுமே என்னால் இருக்க முடியும். உன் அம்மா அப்பாவிற்கோ, உன் தம்பியின் மனைவிக்கோ என்னால் எதுவும் ஆறுதல் கூற முடியாது என நினைக்கிறேன்' என்றேன்.

ஆனால் வீட்டில் நுழைந்தவுடன், அவன் கதறி அழ ஆரம்பித்துவிட்டான். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்கள் கலங்குகின்றன. வீடு முழுக்க அவனின் போட்டோக்களும், அவன் பொருட்களும். மிகப்பெரிய படிப்பாளன். ஒரு அறை முழுவதும், ஜெயகாந்தனில் தொடங்கி எஸ் ராவரை புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறான். அவனின் வீட்டின் கோலத்தை பார்த்தோமானால் அவன் 100 வருடம் வாழ வேண்டும் என நினைத்திருப்பான் என தெரிந்தது. அவ்வளவு ஆசையாக அனைத்தையும் வாங்கி வைத்திருக்கிறான்.

"உலகத்திலேயே மிகக் கொடுமையான விசயம் என்னவென்றால் நண்பனின் இழப்பிற்கு பின் அவன் மனைவிக்கு ஆறுதல் சொல்வதுதான். என்ன சொல்லி தேற்ற முடியும். அவன் போயிருக்கக்கூடாது, இருந்தாலும்.... என்று, பேசிப்பாருங்கள், அதன் வலித்தெரியும்"

நான் அவன் அப்பாவிடம் சொன்னது, "யாரையும் அதிகம் அந்த பெண்ணிடம் அண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களின் வேதனை அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களாகவே அழுது சரியாகி விடுவார்கள். என்ன கொஞ்ச காலம் பிடிக்கும். மறதி ஒன்றுதான் ஆண்டவன் நமக்கு கொடுத்த வரம். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும், மறப்பது எவ்வளவு கடினம் என்பதும்" என்று பேசி ஒரு மாதிரி சமாளித்தேன்.

நான் ஏன் ஒன்றும் பேச மாட்டேன் என சொன்னேன் என்றால்,என் தங்கை இறந்த பிறகு ஒரு சம்பவம் நடந்தது. அதன் பிறகுதான் நான் இப்படி மாறிப்போனேன். ஒரு தமபதியினர் வீட்டிற்கு வந்தார்கள். வந்தவருக்கும் என் அப்பாவிற்கும் நடந்த மறக்க முடியாத உரையாடலில் இருந்து அவர் பேசியதை மட்டும் கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்.

"ரொம்ப கஷ்டப்பட்டாங்களோ?"

"கிட்னி பெயிலியராமே?"

"ரொம்ப வலிச்சிருக்கும் இல்லை"

"உங்க பொண்ணு. எவ்வளவு கஷ்டமா இருக்கும் உங்களுக்கு?"

"எப்படித்தான் தாங்கிக்கறீங்களோ?"

"ஆப்பரேஷன் பண்ணும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க?"

"கல்யாணம் வேற ஆகலை"

"நல்ல வேளை. ஒரு வேலை பிழைச்சிருந்தா, அவங்களுக்கு மருந்து வாங்கியே ரொம்ப கஷ்டப்படுவீங்க?"

"என்ன காரணம்? ஜாதகம் பார்த்தீங்களா?"

"உங்க பொண்ணு, அதுவும் 25 வயசுல, ரொம்ப பாவம சார் நீங்க?"

இப்படி பேசிப்பேசி அப்பாவை அழ வைச்ச கொடுமயை பண்ணினார், மிக நல்ல பொறுப்பில் இருந்த ஒரு மனிதர்.

ஏற்கனவே இழப்பின் வலியில் இருக்கும் ஒருவரிடம் அதைப்பத்தி பேசி, அவரை ரணகளமாக்கி, அவர் துக்கத்தை அதிகப்படுத்தலாமா?

அதற்கு எதுவும் பேசாமல் வந்து விடுவதே நல்லது அல்லவா?

Jan 2, 2011

புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

போன வருடம் புத்தாண்டு பிறந்தபோது எங்கள் ஊர் லால்குடி சிவன் கோவிலில் நடராஜர் முன் அமர்ந்து தரிசித்துக்கொண்டு இருந்தேன். அன்று இரவுதான் நடராஜருக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம். பல வருடங்கள் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடி இருந்தாலும், ஒரு கோவிலில் தெய்வத்திற்கு முன்பு அமர்ந்து புத்தாண்டை வரவேற்றது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

பள்ளியில் படிக்கும் காலக்கட்டத்தில், புத்தாண்டு அன்று விடியற்காலை எழுந்து அப்பாவுடன் கோயில் சென்று தரிசிப்பது வழக்கம். கல்லூரி படிக்கையில் கொண்டாடிய புத்தாண்டுகள் மிக சுவாரஸ்யமானவை. அந்த நாட்கள் இனி வரவே வராது. ஜனவரி 1 என்றாலே தூக்கக் கலக்கத்துடன் இருந்த காலம் அது.

ICWA, ACS படிக்கும் காலக்கட்டத்தில் கொண்டாடிய புத்தாண்டுகள் மிக சந்தோசம் தருபவை. காரணம் டிசம்பர் 30ம் தேதி போல்தான் பரிட்சை முடியும். அதனால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

இந்த வருடம் மலேசியாவில் இருந்ததால், எல்லா நாட்களைப் போலவே நேற்றும் கடந்து சென்றுவிட்டது. 31ம் தேதி இரவு ஒழுங்காக நேரத்தோடு தூங்க போயிருக்கலாம். அதைவிட்டு விட்டு, அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால், டிவியில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்" பார்த்தோம். எனக்கு என்னவோ அவ்வளவு சிரிப்பு வரவில்லை. படமும் மிக சாதாரணமான படம். சந்தானம் அடுத்த கவுண்டமணியாக உருவாகி வருகிறார், கத்தலில், நகைச்சுவையில் இல்லை.

அந்த கடுப்புடனே உறங்கி எழுந்து காலையிலே கோயில் சென்று வந்தோம். பிறகு அடிக்க ஆரம்பித்தது மழை. எங்கும் செல்ல முடியவில்லை. கடுமையான மழை. ஒரே போர். படித்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் ஒரு வழியாக நேரம் கடந்தது.

நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்திலும், தொலை பேசி அழைப்பிலும், அவர்களுக்கு நான் பதில் அனுப்பியதிலும் சில மணி நேரங்கள் கடந்து சென்றது.

கேபிளிடம் ஒரு 25 நிமிடம் பேசினேன். "தலைவரே, தலைவரே" என்று அவர் அன்பு ஒழுக பேசிய பேச்சின் மயக்கத்தில் ஒரு ஒருமணிநேரம் சென்றது.

இரவு ஒரு நார்த் இண்டியன் வீட்டில் சாப்பிட சென்றோம். அது ஒரு வித்தியாசமான அனுபவம். நம் உணவு முறைக்கும், அவர்களின் முறைக்கும் வித்தியாசம் மிக அதிகம். நாம் சாதம் வைக்கும் தட்டில் அவர்கள் நிறைய சைடிஷ் ஐயிட்டங்களையும், நாம் காய்கறி, பொரியல் வைக்கும் சின்ன தட்டில் சப்பாத்தியையும் வைக்கிறார்கள். அதாவது காய்கறி மற்றும் சில சாலட்களை அதிகம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி ஒன்றோ இரண்டோ சாப்பிடுகிறார்கள்.

நம் வீட்டில் விருந்தினர்கள் வந்தால், அவர்கள் சாப்பிட்டு முடித்து போனவுடன் தான், வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அவர்கள் வீட்டில் அனைவருமே அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டது வித்தியாசமாக இருந்தது. இன்னொரு விசயம், எதையும் வீணாக்கக்கூடாது என்பதால், மீதி இருந்த அனைத்தையும், அனைவருக்கும் சரிசமமாக பிரித்து பறிமாறினார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம். கடைசியில்தான் தெரிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பது என் வழக்கம். ஆனால், டைனிங் டேபிளில் தண்ணீர் ஜக் இல்லை. அவர்கள் வீட்டில் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம்,

"சாப்பிட்ட உடன் 45 நிமிடங்கள் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும். அப்போதுதான் நன்றாக செரிமானம் ஆகும். உடனே குடித்தால், சாப்பாட்டினால் உற்பத்தியாகும் ஜீஸ் அதன் வேலையை சரிவர செய்யாது. சாப்பிட்ட உடன் சிலருக்கு வயிற்றில் ஏற்படும் ஹெவினஸ் இருக்காது"

உண்மையா என்பதை விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

31ம் தேதி இரவிலிருந்து மனதில் ஏதோ ஒரு சோகம் இருந்து கொண்டே இருந்தது. இரவு படுக்க போகையில்தான் நினைவு வந்தது.

ஆம், என் செல்லத் தங்கையை அடக்கம் செய்த நாள் ஜனவரி 1 என்று!


Jan 1, 2011

நண்பர்களுக்கு!

என் அன்பு நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2010:

சென்ற வருடத்தைப் பொருத்தவரை எனக்கு நல்ல வருடமாகவே கழிந்தது. சில சின்ன மனக்கஷ்டங்கள் வந்து போனாலும் அது எல்லாம் எல்லோருக்கும் வந்து போகும் சாதாரண விசயங்களாகவே எடுத்துக்கொண்டேன். சென்ற வருட சாதனை என்றால் எங்கள் கம்பனியை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து காப்பாற்றியதில் என் பங்கும் இருந்திருக்கிறது என்பதுதான். சென்ற வருடத்தில்தான் நான் CFO ஆக பதவி உயர்வு பெற்றேன். பணத்தின் மேல் உள்ள ஆசையை ஓரளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்ததும் சென்ற வருடம்தான். உடல்நிலையை பொருத்தவரை எல்லா வருடங்கள் போலும், சென்ற வருடமும் தவறாமல் வாக்கிங், யோகா மற்றும் ஜிம் சென்றதால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். அதனால் என் அன்பு நண்பர்களாகிய நீங்களும் நல்ல விதமாக உடல்பயிற்சி செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும். நான் உங்களுக்கு அநாவசியமாக அறிவுரை சொல்வதாக எண்ண வேண்டாம். இதை என்னுடைய கடமையாக கருதுகிறேன். குடி, சிகரட்டை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படியும் உங்கள் கால்களில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்.

நான் எப்போதும் ஒரே கொண்டாட்ட மனநிலையில் வாழ்வதால் மற்ற கஷ்டங்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் பாதித்த விஷயங்கள் என்றால், என் நண்பனின் மரணமும், என் உறவினர் ஒருவரின் வாழ்க்கை என் கண்முன்னாலே வீணாகிப்போய்க் கொண்டிருப்பதும்தான்.

2011:

2011 ஆம் ஆண்டுக்கு என்று ஒன்றும் புதிதாக எந்த சபதமும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது வாழ்வது போலே கடைசிவரை வாழ வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், இந்த வருடத்தில் இருந்து சில நல்ல காரியங்களில் ஈடுபடலாம் என நினைக்கிறேன். மற்றபடி நாட்டிற்கும், குடும்பத்திற்கும், வீட்டிற்கும் மற்றும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ எல்லாம் வல்ல என் குல தெய்வம் கொப்பாட்டி அம்மனையும், ஏழுமலையானையும் வேண்டிக்கொள்கிறேன். அதே போல் நண்பர்களும் வாழ பிரார்த்திக்கிறேன்.

"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்ப மில்லாத வாழ்வும்
துய்ய! நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட ஊரின் வாழ்வே!
அமூதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி அபிராமியே!"

தமிழ்மணம்:

நான் மார்ச் மாதம் 2009ல் பதிவுலக்த்துக்கு வந்தேன். 10 மாதங்களில் 230 இடுகைகள் எழுதினேன். நிறைய பின்னூட்டங்களும், ஓட்டுகளும், ஹிட்ஸ்களும் பெற்ற வருடம் அது. ஆனால், 2010ல் என்னால் அப்படி செயல்பட முடியவில்லை. மொத்தமே 108 இடுகைகள்தான் எழுதினேன். நிறைய சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். என்னால் இடுகை எழுதி போஸ்ட் செய்வதற்கே நேரம் இல்லாமல் போனதால், என்னால் மற்றவர்களின் பதிவுகளுக்கு படித்து பின்னூட்டம் இட நேரம் கிடைத்ததில்லை.

அதனால் எனக்கு ஒரு இரண்டு அல்லது மூன்று பின்னூட்டங்கள் வரும். ஓட்டுகளும் அவ்வளவு கிடைக்காது. என் ஓட்டை சேர்த்து ஒரு இரண்டு ஓட்டுகள்தான் கிடைக்கும் . மொத்தம் 113 நண்பர்கள் பின் தொடர்கிறார்கள். ஹிட்ஸ் மட்டும் ஓரளவு அவ்வப்போது கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு 200 பேர் படித்தால் பெரிய விசயம். இவர்களுக்காக இத்தனை மணி நேரம் செலவழித்து எழுத வேண்டுமா? என்று நினைத்ததுண்டு. பின்பு இவர்களுக்காகவாவது எழுத வேண்டும் என்றும் நினைத்ததும் உண்டு. ஆனாலும், ஏதோ ஒன்று என்னை தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டுதான் உள்ளது.

வாராவாரம் தமிழ்மணத்தில் வெளியாகும் முதல் 20 வலைப்பதிவுகளின் பட்டியலை நான் பார்ப்பதே இல்லை. ஏன் என்றால் பின்னூட்டத்தினாலும், ஹிட்ஸினாலும் தேர்வு செய்கிறார்கள் என்பது தெரியும். அதனால் நான் பார்ப்பதில்லை. அதனால் இன்று தமிழ்மணத்தின் சிறந்த 100 வலைப்பதிவுகள் பட்டியலையும் நான் பார்க்கவில்லை. ஆனால், தமிழ்மண முகப்பில் ஒவ்வொரு பதிவரின் பதிவின் கடைசியில் 'Traffic Rank' என்ற இடத்தினை கிளிக் செய்து பார்த்தேன். கடைசி பகுதியில் ஒரு வேளை 5000ம் ஆவது ரேங்கில் இருக்கிறதா? எனப்பார்த்தேன். ஒவ்வோரு பக்கமாக பார்க்க விருப்பம் இல்லாம் பக்கத்தை மூடப்போகையில்தான் கவனித்தேன், நம் வலைப்பதிவின் பெயரை வைத்தும் தேடலாம் என்று. பார்த்தேன். என்ன ஆச்சர்யம், என் வலைப்பூவின் ரேங்க் 170.

5000 ரேங்கை எதிர்பார்த்த எனக்கு 170 ரேங்க் சந்தோசம்தான். நன்றி நண்பர்களே!

2011 ம் வருடத்தைப் பற்றி வந்த மெயில் ஒன்று;

1.1.11

11.1.11

1.11.11

11.11.11

இது போல தேதிகள் ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறைதான் வருமாம்!

மீண்டும் நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.