Oct 29, 2010

காணாமல் போன சந்தோசங்கள்?

பள்ளி, கல்லூரி நாட்களில் அனுபவித்த சந்தோச பண்டிகை தினங்கள் தினமும் மனதில் வந்து போகின்றன. மிக அதிக சந்தோசத்துடன் தீபாவளியை கொண்டாடிய நாட்கள் இன்றும் என் நினைவில். நான் ஏன் 'கொண்டாடிய நாட்கள்' நாட்கள் என்கிறேன் என்றால், எங்களை பொறுத்தவரை தீபாவளி என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது. ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவோம். எங்களை என்று இங்கே நான் சொல்வது என் பால்ய நண்பர்களையும் சேர்த்து.

தீபாவளிக்கு புதுத்துணிகள் வாங்குவது என்பது சாதாரண விசயமாக கருதாமல் அதை எதையோ மிகப்பெரிய புராஜக்ட் அளவிற்கு பேசி முடிவு எடுப்போம். ஒரு பேண்ட் வாங்குவதற்கு ஊரில் உள்ள கடைகள் எல்லாம் ஏறி இறங்குவோம். திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் யாரும் நுழையக்கூட முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருக்கும். துணி வாங்க செல்வதைவிட துணி வாங்க வருபவர்களை வேடிக்கை பார்க்க சென்ற நாட்கள் அதிகம்.

எங்கள் தெருவில் என் வயது ஒத்த பதினைந்து நண்பர்கள் இருந்தோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதமும் எங்கள் பேச்சு தீபாவளியை பற்றி மட்டுமே இருக்கும். எல்லோரும் அவரவர் வாங்கிய துணிகளைப் பற்றியும், லேட்டஸ்ட் மாடல் டிரெஸ்களை பற்றியும் பேசிக்கொண்டு இருப்போம்.

எப்படியாவது அப்பாவிடம் பேசி பேசி இரண்டு செட் பேண்ட், சர்ட் வாங்கிவிடுவேன். அதை போட்டு எல்லோரிடமும் காண்பிக்க எப்போது தீபாவளி வரும் என்று ஏங்கிக் கொண்டு இருப்பேன். எங்கள் குடும்பம் மிகப்பெரியது என்பதால், நிறைய ஸ்வீட் வகைகள் செய்வார்கள். தினமும் இரவில் அந்த ஸ்வீட் செய்யும் நிகழ்ச்சியை அவர்கள் ஒருவித சந்தோசத்துடன் செய்யும் போது, எனக்கும் அந்த சந்தோசம் பற்றிக்கொள்ளும்.

எவ்வளவு செலவு செய்தாலும் அப்பா வெடி வாங்க மட்டும் அதிக காசு தர மாட்டார். எப்படியோ அங்கே இங்கே தேத்தி ஒரு 500 ரூபாய்க்கு வெடி வாங்கிவிடுவேன். இப்போது 500ரூபாய்க்கு ஒரு வெடிக்கட்டு கிடைப்பதே பெரிய விசயம் போல் உள்ளது. வாங்கிய வெடிகளை வெடிக்க வேண்டும், அதுவும் அப்பாவுக்கு தெரியாமல் வெடிக்க வேண்டும். அப்படி வெடிப்பது சந்தோசம் கலந்த ஒரு திரில்லாகவே இருக்கும். அப்படி ஒரு முறை கலசம் வைக்கும்போது வெடித்து, கைகளில் சுட்டுக்கொண்டு அப்பாவுக்கு தெரியாமல் உப்பில் கை வைத்து சரி செய்ய முயற்சித்து முடியாமல், பின் அப்பாவுக்கு தெரிந்து, அவரிடம் திட்டு வாங்கியதை எல்லாம் இன்று நினைத்தாலும், ஒரு வித சந்தோசம் தோன்றுகிறது.

தீபாவளிக்கு முதல்நாள்தான் மிக அதிக சந்தோசமாக இருக்கும். ஒரு மாதமாகவே ஊரே தீபாவளியை பற்றி பேசி பேசி எல்லோருமே ஒரு வித சந்தோசத்தில் இருப்பார்கள். அதுவும் முதல் நாள் பார்த்தீர்கள் என்றால், ஒரே சொந்தக்காரர்கள் கூட்டமாக இருக்கும். தூரத்தில் வேலையில் இருக்கும் அண்ணாவோ, அக்காவோ அல்லது அத்தையோ வருவார்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் வருவார்கள். வீட்டில், "இந்த மாவை வாங்கி வா? அவங்க வீட்டுல முறுக்கு சுடுறது வாங்கிவா" "வெறகு தீர்ந்துட போவுது நாளும் கிழமையுமா விறகு இல்லாம அல்லாட முடியாது, போய் நல்ல காஞ்ச விறகா வாங்கிவா" என்று வீட்டில் துரத்தி அடிப்பார்கள். ஒருவித முணுமுணுப்புடன் அனைத்தையும் செய்வது வழக்கம்.

முதல் நாள் சாப்பாடு தூக்கம் இல்லாமல் நண்பர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். அப்போதுதான் ஊருக்கு கல்யாணம் ஆகி முதல் முறை வந்திருக்கும் புது மணப்பெண்கள், நண்பனின் அக்காவாகவோ, தங்கையாகவோ இருப்பார்கள். முன்பு தோழிகள் போல் விரசம் இல்லாமல் பழகியவர்களாக இருப்பார்கள். கல்யாணம் ஆகி முதல்முறை வரும்போது நம்மை பார்க்கும்போது ஒரு வித நாணத்துடன் அவர்கள் நம்மிடம் பேசும் அழகே ஒரு வித சந்தோசத்தை கொடுக்கும். தவறாகவும் நினைக்க முடியாது அதே சமயத்தில் அப்படி அவர்களிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

தீபாவளி முதல் நாள் இரவுதான், ரவா உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, சோமாசா செய்வார்கள். ஏன் அன்றைய இரவுதான் செய்கிறார்கள் என்பது எனக்கு இன்று வரை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பொதுவாக அம்மாவோ, அக்காக்களோ, தங்கைகளோ அன்று இரவுதான் மருதாணி போட்டுவிடுவார்கள். அவர்களும் போட்டுக்கொள்வார்கள். இரண்டு கைகளும் மருதாணி இருக்கும். அப்போது பார்த்து கொசு கடிக்கும். அப்போது ஒவ்வொருவரும் நெளியும் நெளியும் அம்மாவிடம் கொசுவை அடிக்க சொல்ல ஓடியதும் இன்றும் என் மனதில்.

அதிகாலையில் எழுந்து எல்லோருக்கும் முன்னே ஒரு சரம் வெடியாவது வைத்துவிட துடிப்பேன். ஆனாலும், யாராவது ஒருத்தர் வீட்டில் வைத்துவிடுவார்கள். பிறகு சாமி கும்பிட்டு, அப்பா எல்லோரையும் கூப்பிட்டு தலையில் எண்ணைய் வைத்து, சீக்கிரம் குளிக்க சொல்வார்கள். எல்லோரும் சுடு தண்ணிக்கு அடித்துக்கொள்வோம். எல்லாரும் குளித்து முடித்து புது டிரஸ் போட்டு, சாமி கும்பிட்டு உடனே வீட்டை விட்டு வெளியே ஓடுவேன் இரண்டு விசயத்திற்காக, ஒன்று, தீபாவளி காலை சாப்பாடு எப்போதும் என் நண்பன் வீட்டில்தான், அதற்காக. பிறகுதான் வீட்டிற்கு வந்து சாப்பிடுவேன். நண்பனின் அம்மா ஒரு தீபாவளி லேகியம் தருவார்கள். அதை சாப்பிட்டால் எவ்வளவு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு ஒரு கெடுதலும் வராது.

இரண்டாவது விசயம் புது டிரஸை போட்டுக்கொண்டு நம்ம ஆளிடம் காமிப்பதற்கு!. அவங்க பார்க்கிறாங்களோ இல்லையோ அவங்க வீட்டு பக்கம் சைக்கிளிலோ அல்லது பைக்கிலோ...........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... எல்லாம் ஒரு கனவா போச்சு.

இன்னும் தீபாவளிக்கு ஒரு வாரம்தான் இருக்கு. இன்று காலை வீட்டைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு ஈ காக்கா இல்லை. தீபாவளி வருவதற்கான ஒரு அறிகுறி இல்லை. என்ன செய்வது இருப்பது தமிழ் நாட்டில் இல்லையே? மனதிற்குள் ஒருவித சோகம். காணாமல் போன அந்த சந்தோச நாட்கள் வந்து வந்து போகின்றன.

இத்தனை வருசமா எப்படியாவது தீபாவளிக்கு வீட்டிற்கு போய் விடுவேன். இந்த முறை போக முடியாத சூழல். அதனால்தான் இந்த புலம்பல். அப்படியே போனாலும், பழைய சந்தோசம் வருவதில்லை. சந்தோசத்தை மட்டுமே அள்ளிக்கொடுக்கும் அப்பா இல்லை. அக்காக்களும், தம்பிகளும், சொந்தங்களும் - ஏதாவது பிரச்சனைகளில் சந்தோச நாட்களை சந்தோசமாக ஏற்பதில்லை.

நான் அப்படி இல்லை.

சந்தோசப்பிரியன். பிள்ளைகள் சந்தோசத்திற்காகவாவது நாம் சந்தோசமாக இருக்க வேண்டும் இல்லையா?

Oct 27, 2010

நானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்!!!நான் சிறு வயதிலிருந்தே உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துபவன். நிறைய கிரிக்கட் விளையாடியதாலும், எப்போதுமே விளையாட்டு மைதானத்திலேயே இருந்ததாலும் கல்லூரி காலம் வரை 'சுள்ளான்' பட தனுஷ் போல ரொம்ப சிலிம் ஆக இருந்தேன். எப்போது வேலை கிடைத்து, வீட்டை விட்டு வெளியில் வந்து 'அந்த' பேச்சுலர் வாழ்க்கை ஆரம்பித்ததோ அப்போது ஆரம்பித்தது பிரச்சனை. அதிக சந்தோசம் காரணமா இல்லை அதிக சாப்பாடு காரணமா இல்லை அதிக பேச்சிலருக்கே உரித்தான பழக்க வழக்கம் காரணமா தெரியவில்லை (என்ன பழக்க வழக்கம் என்பது படிப்பவர்களின் சாய்ஸுக்கு விட்டுவிடுகிறேன்) வயிற்றின் அளவு மட்டும் 29லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி 34 ஆகிவிட்டது. இது ஒன்றும் அதிகம் இல்லைதான்.

ஆனாலும், ரஜினி, விஜய் மற்றும் சூர்யாவை பார்க்கும்போது எல்லாம் பொறாமையாக இருக்கும். நாம் ஏன் நம் வயிற்றை கவனிக்கவில்லை என்று தோன்றும். இந்த வயதில் நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா போய் உடலை அழகாக்கி சிக்ஸ் பேக்ஸுடன் வந்தவுடன், என் ஆவலும் அதிகரித்தது. 14 வருடமாக ஜிம் சென்று வந்தாலும், உடம்பின் அனைத்து பாகங்களும் சரியாக ஒரு அளவோடு இருந்தாலும், வயிறு மட்டும் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. பல முறை முயற்சி செய்தேன். அதிகமாக சிட் அப்ஸ் மற்றும் அனைத்துவிதமான பயிற்சிகளும் செய்தாலும், வயிற்றை மட்டும் குறைக்கவே முடியவில்லை.

இரவு உணவை குறைக்கச் சொன்னார்கள். ஐந்து இட்லியிலிருந்து மூன்றாக குறைத்தேன். வெள்ளை முட்டை சாப்பிட சொன்னார்கள். தினமும் காலையில் இரண்டு, இரவில் இரண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்து பார்த்தேன். சிக்ஸ் பேக் வருவதற்கு பதில் ஒரே பேக் சற்று பெரிதானது. இதற்கு இடையில் என் பெண் வேறு,

"என்ன டாடி இது? தினமும் ஜிம்முக்கு போறீங்க. வயிறு மட்டும் அப்படியே இருக்கிறது?" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

இந்த நிலையில் என் மலேசிய நண்பன் ஒருவன், என்னுடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவன், மாலை ஜிம் செய்வதற்கு பதில் இரவில் செய்ய ஆரம்பித்தான். ஏனென்றால், அவன் ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவன். அவன் சமீபத்தில் ஒரு நாள் மாலையில் ஜிம்முக்கு வந்தான். அவனை பார்த்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. 34 இன்ச் இருந்த அவன் இடுப்பு இப்போது 30க்கு வந்துவிட்டது. நெஞ்சுக்கு கீழ் இடுப்பு உள்ளதா இல்லையா என்றே தெரியவில்லை. ஆறு மாதத்தில் எப்படி இந்த மாற்றம்? அவனிடம் கேட்டேன். அவன் சொன்னது என்னவென்றால், சிக்ஸ் பேக் அவ்வளவு சாதாரணம் அல்ல. அதற்கு கீழ் கண்ட முறையை தினமும் கடை பிடிக்க வேண்டும்:

01. காலையில் வேகமான நடை பயிற்சி அல்லது ஜாகிங் அல்லது ட்ரெட் மில்லில் கார்டியோ நடை பயிற்சி.

02. மாலையில் ஜிம்மில் முதலில் அனைத்து பாகங்களுக்கும் வொர்க் அவுட் (தினமும் ஒரு பாகத்திற்கும் செய்யலாம். ஒரு நாள் பைசப், ஒரு நாள் ட்ரைசப், ஒரு நாள் செஸ்ட் என்று)

03. கடைசியில் ABS

04. ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிட வேண்டும்.

05. காலையில் இரண்டு வெள்ளை முட்டை + ஒரு இட்லியோ அல்லது கோதுமை கலந்த பிரட்டோ + சாலட்

06. மதியம் கொஞ்சம் அரிசி சாதம் + கோழியின் நெஞ்சு கறி + ஒரு பீஸ் மீன்+ சாலட்

07. இரவில் அரிசி உணவு அதாவது கார்போ ஹைட்ரேட் உணவு சாப்பிடக்கூடாது. தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

08. மற்ற இடைப்பட்ட நேரங்களில் பழங்களோ அல்லது காய்கறிகளோ சாப்பிடலாம்.

09. தேவை என்றால் ப்ரோட்டின் சப்ளிமெண்ட் சாப்பிடலாம். இல்லை வெள்ளை முட்டை எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.

10. எண்ணையில் வறுத்த பொறித்த எதையுமே சாப்பிடக்கூடாது.

அவன் சொன்னதை கேட்டதிலிருந்து எனக்கும் ஆசை வந்து தினமும் கடை பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் மீன் சாப்பிடுவது கிடையாது. தினமும் கோழிக்கறியும் சாப்பிட முடியாது.

முடிந்த வரை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்ன ஒன்று,

எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அது எதையும் சாப்பிட முடியவில்லை.
எனக்கு என்னவெல்லாம் பிடிக்காதோ அதை சாப்பிட வேண்டியுள்ளது.

இப்படி நான் கஷ்டப்படுவதை பார்த்து என் வீட்டில் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி:

" அப்படி சிக்ஸ் பேக் வந்து என்னத்தை சாதிக்க போறீங்க?"

ஆமால்ல, என்னத்தை சாதிக்கப்போறேன்!!!

பின் குறிப்பு:

01. சிக்ஸ் பேக் வந்தவுடன் இப்போ இருக்கும் அனைத்து பேண்ட்களையும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

02. நான் கூடிய விரைவில் சிக்ஸ் பேக் பெற நண்பர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

Oct 19, 2010

காதலித்தே ஆக வேண்டும்?

"அம்மா விசயம் தெரியுமா? அந்த கோடிவீட்டு கோமளா இல்ல. அவ பக்கத்துவீட்டு ராமுவ இழுத்துட்டு ஓடிட்டாளாம்" - பக்கத்துவீட்டு அம்மா.

"என்னைக்கு அக்கா?" - எங்கள் வீட்டில்.

"நேத்து ராத்திரி"

அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஊருக்கு வந்த அவர்கள் இருவரையும் ஊரில் சேர்க்கவே இல்லை. அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இது நடந்தது 20 வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்தில்.

நான் கல்லூரி படிக்கையில் இது போல் சிலர் ஓடிப்போனார்கள். வெகு சிலரே குடும்பத்துடன் சேர்ந்து வாழந்தார். ஓடிபோய் திருமணம் செய்து கொண்ட நிறைய நண்பர்களின் வாழ்க்கை சரியாக அமையவில்லை. சொந்த குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் அவர்கள் பட்ட வேதனையை நான் கண்கூட பார்த்திருக்கிறேன்.

அதில் ஒரு நண்பனின் தங்கை கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம். அதனால் அவர்கள் பட்ட அவமானம் நிறைய. நல்ல வேளை காதலித்தவனே அவளை கல்யாணம் செய்து கொண்டான். என்னதான் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே காதல் இருந்தாலும், நாங்கள் படிக்கும் காலங்களில் நம் தமிழ்நாட்டில் காதல் கல்யாணம் என்பது கனவில் மட்டுமே சாத்தியாமாயிருந்தது.

காதலித்தவர்களையும், காதல் கல்யாணம் செய்தவர்களையும் எதிரிகளாகவே அந்த குடும்பத்தினர் பார்த்தனர். ஏகப்பட்ட வெட்டு குத்து காதல் கல்யாணங்களில் பார்த்திருக்கிறேன்.

அந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்த்ததினாலேயே, "யாரையும் இழுத்துக்கொண்டு ஓடக்கூடாது" என்று முடிவு எடுத்திருந்தேன். இழுத்துக்கொண்டு ஓடும் அளவிற்கு யாரும் என்னிடம் இருந்திருக்கவில்லை என்பது வேறு விசயம்.

காதல் திருமணம் தப்பு என்றோ இல்லை அம்மா அப்பா பார்த்து ஏற்படுத்தி தரும் குடும்ப வாழ்க்கைத்தான் சிறந்தது என்றோ நான் வாதிட விரும்பவில்லை. அது அவரவர்கள் மன நிலையை பொறுத்தது.

நான் இங்க சொல்ல வந்த விசயம் என்னவென்றால், அப்போது எல்லாம் காதலர்கள் ஒரு வித பயத்துடனும், குடும்பத்தாருக்கு பயந்தும் காதலித்து வந்தார்கள். அதுவும் அனைத்து பெண்களும் ஆண்களும் காதலித்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் வாழ்ந்ததாக நினைவில்லை.

சிறுவயதில் இருக்கும் ஒருவித இனக்கவர்ச்சி அனைவருக்குமே இருந்திருக்கும். அதிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இங்கு மலேசியாவில் 95% காதல் கல்யாணம் தான். அதனால் இங்கு எதுவுமே எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் நம் மக்கள் தெளிவாக இருந்தாலும் இந்த டிவி சேனல்கள் அவர்களை சும்மா இருக்க விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சன் மியூசிக் சேனலின் 'அன்பே அன்பே' நிகழ்ச்சியை பார்த்தால் வேதனையும் கவலையுமே அதிகரிக்கிறது, அது காதலர்களுக்கான நிகழ்ச்சியாம். அனைத்து காதலர்களுக்கும் கேள்வி என்ற பெயரில் ஏதாவது ஒரு கண்றாவியை தினமும் கேட்கிறார்கள். அதற்கு ஆண்களும் பெண்களும் சொல்லும் பதில்கள் அதைவிட கொடுமை.

ஏதோ எல்லோரும் காதலித்துத்தான் ஆக வேண்டும் என்பது போல் இருக்கிறது அந்த நிகழ்ச்சி. காதல் தவறு என்று சொல்லவில்லை. சரியான வயதில் சரியான நபர்களை காதலித்து கல்யாணம் செய்தால் பரவாயில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பேசுவதெல்லாம் அந்த அளவு ஒரு புரிதலுடன் பேசுவதாக தெரியவில்லை.

சிறு பெண்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்த்து கெட்டு போவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு. காதலைப் பற்றி பேச பயந்த காலம் போய் இப்போது பொது ஊடகத்தில் தன் காதலைப் பற்றி பெண்கள் தைரியமாக பேசுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

'சுறா' படத்தின் ஒரு காட்சி அன்று சன் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் தமன்னா விஜயை பார்த்து (விஜயை பார்க்கும் இரண்டாவது காட்சியிலெயே) தன் காதலை சொல்லுவார்.

அந்த காட்சியைப் பார்த்த என் ஆறு வயது பையன் கேட்ட கேள்வி,

"என்ன டாடி இவ்வளவு சீக்கிரம் " I Love You" சொல்லிட்டாங்க?

பதில் சொல்ல முடியாமல் குழம்பிப்போனேன்.

Oct 13, 2010

கொஞ்சம் யோசிக்க வேண்டும்?

ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர்கள் மிகுந்த பொறுப்புடனும், நல்ல திறமையுடனும் இருக்க வேண்டும். அதை விட முக்கியம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். எல்லோருக்குமே பிடித்தவராக ஒரு பாஸ் இருப்பது மிகவும் கஷ்டம். இருந்தாலும், மெஜாரிட்டி ஊழியர்களுக்கு அவரை பிடித்திருக்க வேண்டும். இரண்டு வகையான பாஸ்கள் இருக்க வாய்ப்புண்டு. சில பேர் மிகுந்த கடுமையுடன் இருப்பார்கள். சிலர் சாந்தமாக இருப்பார்கள். இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று இருவகையான பாஸ்களையும் நாம் சொல்ல முடியாது.

சில பேர் எப்போதும் திட்டி வேலை வாங்குவார்கள். ஆனால், உள் மனதில் நல்லவர்களாக இருப்பார்கள். ஊழியருக்கு ஒரு கஷ்டம் என்றால் உடனே ஓடிப் போய் உதவுவார்கள். சிலர் சாந்தமாக பேசுவார்கள், ஆனால், சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். முதலாளிகளைப் பொருத்தவரை அவர்கள் நிறுவனம் நன்றாக ஓடினால் போதும். அதிகமாக உள் விசயங்களில் தலையிட மாட்டார்கள். தலையிடவும் கூடாது. அப்படி எல்லா விசயங்களிலும் தலையிட்டால், மேல் அதிகாரியால் சரியாக வேலை செய்ய முடியாது.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் ஒரு அதிகாரி இருந்தார். அப்படி ஒன்றும் பெரிய கல்வித் தகுதியோ இல்லை மிக பெரிய அறிவாளியோ கிடையாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதிர்ஷ்டம் காரணமாக அந்த பதவி அவருக்கு கிடைத்தது. அப்படி அந்த பதவி கிடைத்ததும் அவரை கையில் பிடிக்க முடியவில்லை. தலை கால் புரியாமல் ஆடினார். அவர் வைத்ததுதான் சட்டம் என்று ஆனது.

தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், உலகில் உள்ள மற்ற அனைவரும் முட்டாள் என்ற எண்ணம் கொண்டவர். சரி, அப்படி ஏதாவது அவரால் கம்பனி பயன் அடைந்ததா என்றால் அதுவும் இல்லை. எல்லாவற்றையும் ஆரம்பிப்பார். எதையும் முடிக்க மாட்டார். Totally Disorganised Person.

யாராவது சிறு தவறு செய்தாலோ அல்லது அவர் சொல்வதை சரியாக கேட்காவிட்டாலோ, சம்பந்தப்பட்ட நபரை அவர் மேனேஜராக இருந்தாலும் அனைத்து தொழிலாளிகள் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்துவார். அனைவரும் அவரின் திட்டால் கூனி குறுகி போய்விடுவார்கள், பல நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் அவரைப் பற்றி சொல்வதுண்டு. சிலர் அவரை அடிக்கும் அளவிற்கு ஆத்திரப்பட்டார்கள். ஆனால் அவரின் நல்ல நேரம் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதை அறிந்த நான், ஒரு நாள் அவரிடம் கேட்டேன், 'இப்படி அனைவரின் முன்னிலையிலும் திட்டுகின்றீர்களே? இது நியாயமா? ஏன் உங்கள் அறைக்கு கூப்பிட்டு புத்தி சொல்லலாம் இல்லையா?"

அவரின் பதில் என்ன தெரியுமா?

"அப்படி அனைவரின் முன்னிலையில் திட்டினால்தான், அவர்கள் அதை நினைத்து இனி தவறு செய்யமாட்டார்கள்"

என்னால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் மனம் ஒன்றுதான். எல்லோரும் விரும்புவது அன்பை மட்டும்தான். ஏதோ சில காரணங்களால், சிலர் மேல் அதிகாரிகளாகவும், சிலர் சாதாரண ஊழியர்களாகவும் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை அடிமைகள் போல் நடத்தலாமா? அவர்கள் மனம் என்ன பாடுபடும்?

அப்படிப்பட்ட அந்த நபர் சமீபத்தில் வேலையை விட்டு வேறு கம்பனிக்கு சென்றார். அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. நானும் சென்றிருந்தேன். அப்போது அவர் ஊழியர்களிடம் பேசும்போது, "இவ்வளவு நாள் உங்களை ஏதேனும் திட்டி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்றார்.

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இவர் இருக்கும்வரை எல்லோரையும் திட்டுவாராம். போகும்போது ஒரே வார்த்தையில் மன்னிப்பு கேட்பாராம். உடனே அனைவரும் அவரை மன்னிக்க வேண்டுமாம். எந்த ஊர் நியாயம் அது? அத்தனை நாள் அவர்கள் பட்ட வேதனைக்கு என்ன பதில்?

எனக்கு சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பன் கோபத்தில் இன்னொருவரை, "போடாங்........." என்று அம்மாவை இழுத்து திட்டிவிட்டான். நண்பர்கள் அவனை கடிந்து கொள்ளவே அவன் அந்த நண்பனிடம் மன்னிப்பு கேட்டான். பாதிக்கப்பட்ட அந்த நண்பன் அவனை மன்னிக்கவில்லை. என்ன செய்தான் தெரியுமா?

"போடா...................." என்று அவனைத் திருப்பி திட்டிவிட்டு அவனும் சிம்பிளாக ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு போய்விட்டான்.

அவர் ஊருக்கு போனபின் என்னை தினமும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். நான் ஒரு முறையும் அவர் போன்காலை அட்டண்ட் செய்யவில்லை. மற்ற நண்பர்களுக்காக, என்னால் இப்படி மட்டுமே என் கோபத்தை தீர்த்துக்கொள்ள முடிந்தது.

யாராக இருந்தாலும், அதிகாரிகளாகவோ அல்லது ஊழியர்களாக இருந்தாலும் அடுத்தவர்களை காரணம் இல்லாமல் திட்டாதீர்கள். கடும் சொற்களை உபயோகிக்காதீர்கள். எல்லோரிடமும் கூடிய மட்டும் அனபாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.

அன்பாலும் காரியத்தை சாதிக்க முடியும்.

Oct 2, 2010

எந்திரன் - ஷங்கருக்கு நன்றி!ஏகப்பட்ட விமர்சனங்களை இது வரை நீங்கள் படித்திருப்பீர்கள். எனக்கு சினிமா விமர்சனம் எழுதும் பழக்கம் இல்லை. இருந்தாலும் படத்தைப் பற்றி என்னுடைய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் நேற்று எழுதி இருந்தது போல ஒரே காம்ப்ளக்ஸில் உள்ள ஐந்து தியேட்டர்களில், நான்கில் எந்திரன் ஓடுகிறது.

முன்பு திருச்சியில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் வெவ்வேறு இடங்களில் ஓடும்போது, ஆட்டோவோவில் முதல் தியேட்டரில் ஓடிய படச்சுருளை எடுத்துக்கொண்டு வேகமாக அடுத்த தியேட்டரை நோக்கி செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்த தியேட்டரில் ஓடும். இங்கு ஒரே காம்பளக்ஸில் ஓடுவதால், அப்படி ஓட மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், இங்கும் படச்சுருளை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடியதை ஆச்சர்யமாக பார்த்தேன். படம் ஆரம்பிக்கும்போது மொத்தம் 20 பேர்கள்தான் இருந்தார்கள். மனம் மிகவும் கஷ்டப்பட்டது. ரஜினி படத்தை 20 பேருடன் பார்த்த அனுபவமே கிடையாது. ஆனால், கொஞ்ச நேரத்தில் மக்கள் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். இதில் ஆச்சர்யமான விசயம் என்ன என்றால் நிறைய மலேய மக்களை தியேட்டரில் பார்த்ததுதான்.

படத்தைப் பற்றி ஷங்கர் பேசியது, சன் பிக்ஸர்ஸின் அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டம், அதை எல்லாம் நினைத்து கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், அவர்கள் பேசியதின் நியாயத்தை படம் பார்க்கும்போதுதான் உணர்ந்தேன். அத்தனை உழைப்பு. ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு தமிழன் படம் எடுத்திருக்கான் என்பதை நினைத்து நாம் எல்லாம் பெருமை கொள்ளலாம். இந்த படத்தை பார்த்தவுடன் வருத்தப்படக்கூடிய ஒரே நபர்........ யார் என்பதை கடைசியில் சொல்கிறேன்.

ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து எடுத்து இருக்கிறார் ஷங்கர். 60 வயது ரஜினி மிக அழகாத் தெரிகிறார். ஆனால் 35 வயது ஐஸ்வர்யா? வயது முதிர்ச்சி உடம்பில் அங்கங்கே தெரிகிறது. ஆனால், ஐஸ்வர்யாவை, வடிவேல் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், 'எவ்வளவு உரிச்சு காமிக்க முடியுமோ அவ்வளவு உரிச்சு காண்பிச்சிருக்கிறார்" ஷங்கர்.

பாடல்கள் எடுத்திருக்கும் விதம் அற்புதம், "காதல் அணுக்கள்" பாடல் எடுத்திருக்கும் இடம் இதுவரை யாரும் பார்த்திருக்காத இடமாகத்தான் இருக்கும். அதே போல் 'அரிமா அரிமா' பாட்லும் அருமையாக உள்ளது. ஏ ஆர் ரகுமான் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். பின்னனி இசை சான்ஸே இல்லை. அவ்வளவு இனிமை. அதுவும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் மிக அற்புதம். அதற்கு மட்டுமே 65 லட்சம் செலவு ஆகியதாக தகவல்.

வசனங்கள் சுஜாதா, ஷங்கர், கார்க்கி என்று இருந்தாலும், சுஜாதாவின் சாயல்தான் அதிகம் தெரிகிறது. ஆனால், அந்த ஷேவிங் ரேசர் வசனத்தை தவிர்த்து இருக்கலாம். ரஜினி படத்தில் இப்படி ஒரு வசனமா?

ஒளிப்பதிவு மிகத்தெளிவு. கொசுக்களை வைத்தும் காமடி செய்ய ஷங்கரால் மட்டுமே முடியும்.

கடைசி கிளைமாக்ஸ் காட்சிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பிள்ளைகள் இருவரும் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்த்ததே அதற்கு சாட்சி. படம் ஆரம்பித்து இடைவெளி வரை போனதே தெரியவில்லை. ஆனால், இடவேளைக்கு அடுத்து கொஞ்சம் திரைக்கதை தடுமாறி, பின்பு கடைசியில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. வில்லனாக ஒருவரை காட்டிவிட்டு, இடையிலேயே அவரை சாக வைத்து பின் ரோபோ ரஜினியே வில்லனாவது புது முயற்சி.

விஞ்ஞானி ரஜினியின் நடிப்பை விட ரோபோ சிட்டியின் நடிப்பு அமர்க்களம். இண்டர்வெல் முடியும்வரை சிரித்து சிரித்து வயிரே புண்ணாகிவிட்டது. அந்த அளவிற்கு நகைச்சுவை அருமையாக வந்துள்ளது. கருணாஸும், சந்தானமும்தான் அதற்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சிட்டியால்தான் தியேட்டரே அதிகம் குலுங்குகிறது. கருணாஸையும், சந்தானத்தையும் ஷங்கர் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், இது ஒரு சையின்ஸ் ஃபிக்ஸன் படம் என்பதால் தாரளமாக எல்லாவற்றையும் மன்னித்துவிட்டு படத்தை ரசிக்கலாம். ஆனால், என்னதான் லாஜிக் மீறலை ஒத்துக்கொண்டாலும் படத்தில் வரும் ஒரு காட்சியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய விஞ்ஞானி, ரோபோ சிட்டியை இனி வேண்டாம் என்று முடிவு செய்து, அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எடுத்து விட்டு, அதை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடுவது கொஞ்சம் நெருடலாய் உள்ளது. அவ்வளவு முக்கியமான ரோபோவை அழிக்கும் போது அதனுடைய அனைத்து புரோக்ராமையும் ஏன் அழிக்காமல் விட்டார்? என்பது யோசிக்க வைக்கிறது. அதே போல் வில்லன் போனதும் அவன் காரில் ரோபோ வந்து அதாக உட்காருவதும், கொஞ்சம் நம்ப முடியவில்லை.

படத்தில் நிறைய கேரக்டர்கள் ஒரு சில சீன்கள் மட்டுமே வந்து போகிறார்கள். ஒரு 5 நபர்களை மட்டும் வைத்தே படம் நகர்கிறது. ஆனால், அந்த கடைசி ஸீன், என்னதான் சிட்டி ஒரு ரோபோ என்றாலும், மனமும் என் கண்களும் கொஞ்சம் கலங்கியது. அது ஏன் என்பதை தியேட்டரில் போய் பாருங்களேன்!

இந்த காலத்தில் குடும்பத்தோடு அமர்ந்து அழாமல் சிரித்து சந்தோசமாக பார்க்கும்படி படம் வருவது மிக அபூர்வம். எந்திரன் அப்படிப்பட்ட படம். தயவு செய்து யாரும் மிஸ் செய்யாமல் பாருங்கள்.

விடை: வருத்தப்படக்கூடிய ஒரே நபர் ஷாருக்கான்.

Oct 1, 2010

எங்கள் ஊரில் 'எந்திரன்'

நேற்று நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன்.

''சார், தெரியுமா? தமிழ்நாடு முழுவதும் ஒரே ஃபீவராம். ஏறக்குறைய எல்லோருக்குமாம்"

அவர் என்னவோ ஏதோ என நினைத்து, "அப்படியா? எனக்குத்தெரியாதே, நான் இன்னும் நியூஸ் பார்க்கலே. ஏதாவது பன்றிக்காய்ச்சல் மாதிரியா?" என்றார்.

நான் கொஞ்ச நேரம் கழித்து, "இல்லை சார். சாதாரண ஃபீவர் இல்லை. எந்திரன் ஃபீவர்" என்றேன். அவர் சபா என்ற ஊரில் இருப்பதால் அவரிடமிருந்து அடி வாங்காமல் தப்பித்தேன்.

நேற்று வரை மலேசியா முழுவதும் எந்த தியேட்டரிலும் ஆன் லைன் புக்கிங் ஆரம்பிக்கவில்லை. ஒரே கவலை ஆனது. இன்று காலை ஆபிஸ் வந்ததுமே, ஒரே போன்கால்கள், "சார், புக்கிங் ஆரம்பிச்சாச்சு"

இதுவரை எல்லா ரஜினி படங்களையும் முதல் நாளிலேயே பார்த்துவிடுவது என் வழக்கம். ஆனால், என்ன செய்ய? இந்த முறை இரண்டாம் நாள் பார்க்கும்படி ஆகிவிட்டது.

ராணிப்பேட்டையில் இருந்த போது அருணாச்சலம் படம் ரிலீஸான தினம் இன்றும் என் நினைவில பசுமையாக உள்ளது. எல்லா ஊர்களிலும் அடுத்த நாள் ரிலீஸ் என்றால், ஆற்காட்டில் முதல் நாள் இரவு 12 மணிக்கு படம் ரிலீஸானது. அன்று இரவு 9 மணி அளவில் தியேட்டர் சென்றோம். உள்ளே வரிசையில் நின்றோம். அது போல் வேதனையை என் வாழ்நாளில் அனுபவித்தது கிடையாது. அப்படி ஒரு கூட்டம். மொத்தம் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றேன். வேர்த்து கொட்டி சைட்டை எல்லாம் கழட்டிவிட்டு படம் பார்த்தோம்.

ரொம்ப நேரம் நின்றதாலோ என்னவோ எனக்கு அன்று இரவு அருணாச்சலம் படம் பிடிக்கவே இல்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் ரூமிற்கு திரும்பினேன். ஆனால், அடுத்து வந்த நாட்களில் மீண்டும் பார்த்தபோது படம் ரொம்பவும் பிடித்துவிட்டது. இன்று வரை பலமுறை அந்த படத்தை பார்த்துவிட்டேன். சமீபத்தில் கூட ஊரில் இருந்த போது 'கே' டிவியில் அருணாச்சலம் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் சந்தோசமாக இருக்கும். அதுதான் ரஜினி.

இன்று என் பிள்ளைகளும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். நானும்தான். அதற்காக கமல், விஜய், சூர்யா, அஜித் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்று சொல்வதில் என்றுமே வெட்கப்பட்டது இல்லை.

லால்குடியில் என் நண்பர்கள் அனைவருமே ரஜினியின் ரசிகர்கள். ராகவேந்திரா படம் ரிலீஸானபோது என் நண்பன் ராகவேந்திரர் போல வேடம் இட்டு படம் பார்க்க வந்தான். இன்று அவன் மிகப்பெரிய வக்கீலாக இருக்கிறான். எதற்காக இதை சொல்கிறேன் என்றால், தீவிர ரசிகராய் இருந்தாலும், நம் சொந்த முன்னேற்றத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ர்ஜினியும் அதைத்தான் எப்போதும் சொல்வார்.

எந்திரன் படத்தின் மார்க்கெட்டிங் டெக்னிக் ரொம்ப பயங்கரமா இருக்கு. 15 நாட்களிலேயே போட்ட பணம் எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊருக்கு பக்கத்தில் இரு காம்ப்ளக்ஸில் எந்திரன் படம் இன்று மதியம் வெளியாகிறது. ஒவ்வொரு காம்ப்ளெக்ஸிலும் சின்ன சின்னதாக நான்கு தியேட்டர்கள் உண்டு. சாதாரண நாட்களில் ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் மட்டுமே தமிழ் படம் ஓடும். மற்ற தியேட்டரில் ஆங்கிலம் மற்றும் சீனப் படங்கள் ஓடும்.

முதல்முறையாக ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் எந்திரன் படம்
ரிலீஸாகிறது. என்று நினைக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு காம்ப்ளக்ஸிலும் உள்ள தியேட்டர்களை சேர்த்து மொத்தம் 15 காட்சிகள். இருக்கும் மக்கள் தொகையோ மிக குறைவு. இங்கு ரஜினி படம் மற்றும் விஜய் படம் மட்டுமே அதிக நாட்கள் ஓடி உள்ளது. ஆனால் இந்த முறை இத்தனை காட்சிகள் ஓடுவதால், எப்படி அதிக நாட்கள் ஓடும் என தெரியவில்லை. அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.

எப்போதும் குழந்தைகளுக்கு டிக்கட் விலை குறைவாக இருக்கும். இந்தப் படத்திற்கு எல்லோருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே விலைதான். படம் பார்க்க டிக்கட் புக் செய்தவுடந்தான் நிம்மதி. எனக்கு ஆச்சர்யம் என்ன என்றால், பிள்ளைகள் ஏதோ தீபாவளி பொங்கல் போல் சந்தோசமாக நாளை மதியத்தை நினைத்து காத்திருக்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் நானும்தான்.

கலாநிதிமாறன் இவ்வளவு சம்பாதிக்க போகிறார், ரஜினியின் சம்பளம் அவ்வளவாமே? இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இருக்கும் வேலைப் பளுவில், குடும்பத்துடன் ரஜினி படம் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அந்த சந்தோசம்தான் எனக்கு வேண்டும்.

அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். என்ன ஒன்று எப்படியாவது படம் பார்க்கும் வரை எந்த விமர்சனத்தையும் படிக்காமல் இன்றைய தினத்தை ஓட்ட வேண்டும். அதுதான் என் இப்போதைய கவலை.

எப்போதுமே சீரியஸாகத்தான் இடுகை இருக்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மனசையும் லேசாக்கிக்கொள்ளவே இந்த இடுகை. அதனால் தொடர்ந்து என்னைப் படித்து வரும் நண்பர்கள் கோபம் கொள்ளவேண்டாம்.