Jul 15, 2010

வேதனையும் எரிச்சலும்!

இன்று காலை எங்கள் ஊரில் இருந்து கிளம்பி அலுவலக விசயமாக கோலாலம்பூர் வந்தேன். தொடர்ந்து மீட்டிங். மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு பங்ஸார் என்ற இடத்திலிருந்து ப்ரிக்பீல்ட் வந்து ஆனந்தவிகடன் வாங்கி விட்டு ஹோட்டலை நோக்கி வந்து கொண்டிருந்தேன். நான் எப்போது தமிழ் டிரவர்களுடைய டாக்ஸியில் ஏறுவதுதான் வழக்கம். ஏதோ நம்மால் ஆனது, நமது மக்கள் பிழைக்கட்டுமே என்ற நப்பாசையில். இன்றும் ஒரு தமிழ் டிரைவர்தான் டாக்ஸி ஓட்டி வந்தார். நன்றாக பேசிக்கொண்டு வந்தார்.

நான் மீட்டிங்கிலிருந்த போது நிறைய போன்கால்கள் வந்தன. பொதுவாக மீட்டிங்கில் இருக்கும்போது நான் போன் அட்டண்ட் செய்வதில்லை. மீட்டிங் முடிந்தவுடன் போனை எடுத்து ஒவ்வொரு நம்பராக பார்த்துக்கொண்டு வந்தேன். அதில் அட்ரஸ் புக்கில் இல்லாத ஒரு நம்பர் இருக்கவே அந்த நம்பருக்கு கால் பண்ணினேன். போன் எடுத்தது என் அம்மா. அத்தையின் போனில் இருந்து பேசி இருக்கிறார்கள். பிறகு போன கையில் வைத்துக்கொண்டு வந்தேன்.

எப்போதும் எந்த தமிழ் டிரைவராக இருந்தாலும் அவர்களுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து அடுத்த முறை வந்தால் கூப்பிடுங்கள் சார், என்பார்கள். இந்த டிரைவர் தரவில்லை. ஹோட்டல் வந்தவுடன் லக்கஜை எடுத்து வைத்துவிட்டு காரை விட்டு இறங்கியதும், ஏதோ தோன்றவே, பையில் செக் செய்தேன். என் போனை காணவில்லை.

உடனே காரை நோக்கி ஓடினேன். நிற்காமல் போய்விட்டது. உடனே நண்பரின் போன் மூலம் என் நம்பருக்கு தொடர்பு கொண்டேன். போன் ரிங் ஆனது, ஆனால் அவர் எடுக்கவில்லை. எஸ் எம் எஸ் மூலம் என் நண்பரின் நம்பர், ரூம் நம்பர் கொடுத்து போனை என்னிடம் சேர்த்துவிடுங்கள் தெரிவித்தேன். டிரைவர் என்னிடம் பேசிய உரையாடல்கள் மூலம் அவர் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். போன் ரிங் ஆகும் வரை எனக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் போனில் வாய்ஸ் மெயில் மட்டுமே வந்தது.

அப்படி என்றால் போனை எடுத்து சிம் கார்டை தூக்கி வீசிவிட்டார் என்றுதானே அர்த்தம். ஒரு தமிழ் டிரைவர் தமிழனுக்கே இப்படி செய்யலாமா?

சாதாரணமான போன் என்றால் கவலைப்பட மாட்டேன். போன வாரம்தான் வாங்கினேன்.

BlackBerry 9700 Bold

விலை 25000 ரூபாய்.

சரி, இனி சாதாரண போன் உபயோகிக்கலாம் என என்னால் நினைக்க முடியாது. ஏனென்றால், செல்போன் நிறுவனத்துடன் ஒருவருட காண்ட்ரெக்ட் போட்டுள்ளேன். மாதம் கமிட்மெண்ட் தொகையாக குறைந்தது 2000ரூபாய் இன்னும் ஒரு வருடத்திற்கு கட்ட வேண்டும்.

வேதனையில் இருக்கிறேன்.

போனை என்னிடம் திருப்பி தராத அந்த டாக்ஸி டிரைவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Jul 1, 2010

சந்தோசமான நாள்!

30.06.2004 மற்றும் 01.07.2004 என்னால் மறக்க முடியாத நாட்கள். 30.06.2004 அன்று எங்கள் கம்பனியில் Inspection and Investigation க்காக Anti Dumping Duty (ADD) Department யிலிருந்து வந்து இருந்தார்கள். ADD - அப்படி என்றால் என்ன? உதராணத்திற்கு எங்கள் கம்பனியையே எடுத்துக்கொள்வோம். நாங்கள் உற்பத்தி செய்யும் ப்ராடக்டை, மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் வாங்காமல், அதே ப்ராடக்டை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வார்களே ஆனால், நாங்கள் எந்த நாட்டிலிருந்து அந்த ப்ராடக்ட் இறக்குமதி ஆகிறதோ அந்த நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் மீது மலேசியா அரசாங்கம் மூலமாக, அந்த நாடுகளின் அரசாங்கம் உதவியுடன் அவர்களின் மேல் கேஸ் போடலாம். அப்படி கேஸ் போட்டு நாம் ஜெயித்தால், மலேசியா அரசாங்கம், அந்த நாடுகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் பொருட்களின் மேல் இறக்குமதி வரி போடும். அப்படியென்றால், யாராவது மலேசியாவிலிருந்து அந்த பொருட்களை இறக்குமதி செய்தால் வரி கட்டிய பிறகுதான் பொருட்களை யூஸ் செய்ய முடியும். ஆனால் எங்கள் கம்பனியின் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக்காக எங்கள் கம்பனி பொருட்களைத்தான் வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். ஆனால், அப்படி அந்த வரியை அரசாங்கம் போடுவதற்கு நிறைய ரிக்கார்ட்கள் எல்லாம் காண்பித்து ப்ரூவ் செய்ய வேண்டும். இப்படியே எழுதிக்கொண்டு போனால் இது ஒரு துறை சார்ந்த பதிவு ஆகிவிடும் அபாயம் இருப்பதால், இதை இத்தோடு நிறுத்திவிட்டு விசயத்திற்கு செல்வோம்.


30.06.2004 அன்று அந்த Inspection நல்லபடியாக முடிந்து அனைவரையும் அனுப்பி விட்டு நான் வீட்டிற்கு செல்ல இரவு மணி 7 ஆனது. அன்று ஒரு நண்பரின் மகளின் பிறந்த நாள் விழா இருந்ததால், நானும் என் பெண்ணும் சென்று வந்தோம். வீட்டிற்கு வந்து சேர மணி 10. சரி, படுக்கலாம் என நினைத்து ரூமுக்கு சென்றால், மாமியார் வந்து, என் மனைவிக்கு இடுப்பு வலி வந்து விட்டதாக கூறினார். ஆம், அப்போது என் மனைவி நிறைமாத கர்ப்பம். முதல் குழந்தை இந்தியாவில் பிறந்து, பிறகு அவர்கள் மலேசியா வந்து சேர 9 மாதங்கள் ஆனதால், அடுத்த குழந்தை பிரசவம் மலேசியாவிலேயே பார்த்துக்கொள்ளலாம் என முடிவு எடுத்திருந்தோம். வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை. அதனால், உதவிக்கு மாமியார் வந்து இருந்தார்கள். அவர்கள் என் மனைவிக்கு இடுப்பு வலி என்று சொன்னதும், நான் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமால், "எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம்" என சொல்லிவிட்டு படுக்க சென்றேன்.

கடுப்பான அவர்கள், "என்னங்க, நான் சொல்லிட்டே இருக்கேன். பயமா இருக்கு. வாங்க ஆஸ்பிட்டல் போகலாம்" என்றார்கள். அங்கு இருந்து நாங்கள் ரெகுலராக பார்க்கும் பிரைவேட் ஹாஸ்பிட்டல் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். பிறகு ஒரு வழியாக தேவையானவைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட இரவு 11 மணி ஆனது. ஹாஸ்பிட்டல் சென்று அடைய இரவு 12 மணி. டாக்டர் யாரும் இல்லை. ஹெட் நர்ஸ்தான் இருந்தார். நல்ல வேளை உடனே செக் செய்துவிட்டு, " இது சாதாரண வலி போல் தான் தெரிகிறது. எதற்கும் இங்கே தங்கிக்கொள்ளுங்கள். காலையில் டாக்டர் வந்ததும் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இரவு முழுவதும் தூங்கவில்லை.


முதன்முறையாக பயம் வந்தது. இந்தியாவிற்கே சென்று இருந்திருக்கலாமோ? எனத் தோன்றியது. காலையில் வந்த டாக்டர், " எதற்கும் ஒரு ஊசி போடுகிறேன். வலி வருகிறதா? என்று பார்ப்போம்" என்று சொல்லி ஊசி போட்டார். முதல் பெண் சுகப்பிரசவம். அடுத்த குழந்தையும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என வேண்டாத தெய்வமில்லை. சினிமா படத்தில் வருவது போலேயே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தேன். என் பெண் வேறு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள். ஆம்பிளை பிள்ளையாக பிறக்க வேண்டும் என பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். சரியாக 11.35க்கு ஒரு நர்ஸ் வந்து,

" சார், உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவம்" என்று கூறினார். உடனே கையில் இருந்த பணத்தை எடுத்து அந்த நர்ஸிடம் கொடுத்தேன். அப்போது ஏற்பட்ட சந்தோசத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

அதே சந்தோசமும் மகிழ்ச்சியும் இன்றும். ஆம். இன்று என் மகனின் பிறந்த நாள்.

26.06.2010 அன்று 10 வயது முடிந்து 11ம் வயதில் அடி எடுத்து வைத்த என் மகள் தேவதர்ஷினியும், இன்று 6 வயது முடிந்து 7ம் வயதில் அடி எடுத்து வைக்கும் என் மகன் வெங்கடேஷும், வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று, நோய் நொடி இல்லாமல், குடும்பத்துக்கும், இந்த சமுதாயத்திற்கும், இந்திய நாட்டிற்கும் நல்லது செய்பவர்களாக வாழ வேண்டும் என்று, எங்கள் குல தெய்வம் கொப்பாட்டி அம்மனையும், எல்லாம் வல்ல ஏழுமலையானையும், சமயபுரம் மாரியம்மனையும், கெமாமன் மாரியம்மனையும் வேண்டி, வாழ்த்துகிறேன்.

ஐ லவ் யூடா செல்லங்களா.