Apr 26, 2010

மிக்ஸர் - 26.04.2010

விஜய் படங்களின் பாடல்கள் என்றால் அனைத்துமே சூப்பராக இருக்கும். யார் மியுஸிக் டைரக்டராக இருந்தாலும் அனைத்துப் பாடல்களுமே ஹிட்தான். அப்படித்தான் இது வரை இருந்தது. ஆனால், சுறா படத்தின் பாடல்கள் அவ்வளவு நன்றாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானும் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படியாவது நமக்கு பிடிக்காதா? என்ற நம்பிக்கையில். ஆனால்..? விஜய் படங்களுக்கு ஏ. ஆர் ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி மட்டுமே மியூஸிக் டைரக்டர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், இந்தப் படம் சன் டிவியின் வெளியீடு. எப்படியாவது பாடல்களை ஹிட் ஆக்கி விடுவார்கள்.

ம்ம்ம். அடுத்த நல்ல பாடல்கள் வரும்வரை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

********************************************************************

சிறு வயதில் பள்ளி விடுமுறை என்றால் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். படிக்க வேண்டாம். யாரும் அதிகம் கண்டிக்க மாட்டார்கள். தெருவில் விளையாடலாம். கோலிக்குண்டு, கிட்டிப்புல், கபடி இப்படி நிறைய. மேல் நிலை பள்ளி படிக்கையில் வீட்டில் கேரம், செஸ் விளையாடுவோம். அதைத் தவிர யாராவது விருந்தினர்கள் வந்து போய் கொண்டு இருப்பார்கள். அதிகாலையும், சாயங்கால வேளைகளிலும் கிரிக்கட் விளையாடுவோம். கல்லூரி படிக்கையில் நிறைய நேரம் நண்பர்களுடன் அரட்டையில் செலவிடுவோம்.

ஆனால் உறவினர் வீட்டிற்கு லீவிற்காக சென்றதே இல்லை. என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை. அப்பா எங்களை எந்த உறவினர் வீட்டிற்கும் லீவிற்காக அனுப்பியதே கிடையாது. இருந்தாலும் சந்தோசமாகவே விடுமுறை நாட்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால், அதே சந்தோசங்கள் என் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை எனும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. என் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டு 10 நாட்கள் ஆகிறது. ஆபிஸ் வேலை காரணமாக எங்கும் கூட்டிச் செல்ல இயலவில்லை.

நான் சிறு வயதில் அனுபவித்த எதுவுமே அவர்கள் அனுபவிக்காமல் போய்விடுவார்களோ? என வருத்தமாக உள்ளது. நான் வசிக்கும் தெருவில் இந்தியர்களே கிடையாது. எல்லோருமே மலேசியர்கள். சேர்ந்து விளையாடுவது என்பது நடக்காத காரியம். காரணம் கலச்சார வேறுபாடு. வீட்டிலே பிள்ளைகள் அடைந்து கிடப்பதை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது.

பணத்திற்காக என்னவெல்லாம் இழக்க வேண்டியுள்ளது பாருங்கள். என் பிள்ளைகள் நிறையவே மிஸ் செய்கிறார்கள். அவர்கள் மட்டுமா? நாங்களும்தான். எப்போழுது இந்தியா வந்து வாழப் போகிறோம் என்று ஏக்கமாக உள்ளது.

********************************************************************

சனிக்கிழமை இரவு 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சி சன் டிவியில் பார்த்தேன். இது இந்தியாவில் சென்ற வாரம் ஒளிப்பரப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன். சமீபகாலமாக இந்த நிகழ்ச்சி மிகவும் போரடிக்க ஆரம்பித்து விட்டதால், மதுரை முத்துவின் ஜோக்குகளுக்கு பிறகு பார்ப்பதில்லை. ஆனால் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக பிரிதிவிராஜ் வரவே முழுவதும் பார்த்தேன். பிரிதிவியின் பங்களிப்பும் மிக நன்றாகவே இருந்தது. அதில் ஈரோடு சீனுவும், கிரியும் சேர்ந்து செய்த அண்ணாமலை படக் காமடி கிளாஸ். இன்னும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் ரஜினி பார்த்தால் கூட சிரித்துக்கொண்டே இருப்பார்.

பார்க்காதவர்கள் எப்படியாவது அந்த காமடியை பார்த்துவிடுங்கள். ரொம்பவே சிரிப்பீர்கள்.

********************************************************************

சனிக்கிழமை 'பையா' படம் பார்த்தேன். ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து இன்றுவரை மலேசியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் சென்றபோது மொத்தம் ஆறு பேர்தான். எங்களுக்காக படம் போட்டார்கள். முதலில் நாங்கள் நான்கு பேர்தான். இண்டர்நெட்டில் டிக்கட் புக் செய்திருந்தேன். ஐந்து நபர்களுக்கு மேல் இருந்தால்தான் படம் போடுவார்களாம். அதற்காக கொஞ்சம் கவலையுடன் காத்திருந்தேன். நல்ல வேளை ஒரு காதல் ஜோடி கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றியது. இதை வைத்து படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்யக்கூடாது. இங்கே இருக்கும் தமிழ் மக்கள் மிகக் குறைவு. ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள். அவர்களும் எதத்னை முறைதான் பார்ப்பார்கள். தமன்னா நல்ல அழகான, செக்ஸியான பிகர் என்றுதான் இந்த படம் பார்க்கும்வரை நினைத்திருந்தேன். கேமரா மேனுக்கு அப்படி என்ன தமன்னா மேல் கோபமோ தெரியவில்லை? குளோசப் காட்சிகளில் தமன்னா முகம் படு கேவலமாக உள்ளது.

'அடடா அடடா அடமழைடா' பாட்டில் மட்டும் கொள்ளை அழகு. ஜோக்கே இல்லாமல் ஒரு முழுப்படம் எடுக்க நிறைய தைரியம் வேண்டும். லிங்குசாமிக்கு அது நிறையவே உள்ளது. இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல.சும்மா நானும் இந்த படத்தை பார்த்துட்டேன் அப்படீனு சொல்றதுக்காக இதை எழுதிகிறேன்.

********************************************************************

நேற்றைய இரவு சன் டிவி நியூஸிலும், இன்று காலை மக்கள் டிவி நிகழ்ச்சியிலும் இந்த செய்தியினை கேட்டேன், "துபாயிலிருந்து கொச்சின் வந்த விமானம் நடுவானில் ஏர் பாக்கட் காரணமாக 15000 அடி தூரம் தலை கீழாக விழுந்து, விமானியின் சாமார்த்தியத்தால், பத்திரமாக பின்பு தரை இறங்கி உள்ளது".

படிக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தி. ஆனால், எனக்கு? இதைப் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். அந்த கொடுமையை நானும் அனுபவித்திருக்கிறேன். 24.10.2000 அன்று இரவு மலேசிய நேரம் சரியாக 11.30 மணிக்கு எனக்கு அந்த அனுபவம் கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்லும்போது ஏற்பட்டது. நான் தனியே என் குழந்தையை பார்க்க சென்று கொண்டிருந்தேன். அப்போது அவள் நான்கு மாதக் குழந்தை. 31.10.2000 அன்று இரவு என் மனைவியுடனும், என் மகளுடனும் மலேசியா திரும்பி வருவதாக ஏற்பாடு. அப்போதுதான் நான் சென்ற விமானம் 10000 அடி கீழே மிக வேகமாக விழுந்தது. நான் அநேகமாக அவ்வளவுதான் என்று முடிவு செய்து விட்டேன். விமானத்தில் உள்ள அனைவரும் கத்தி தீர்த்து விட்டனர். அவ்வாறு இரண்டு முறை விமானம் விழுந்தது. அன்று தான் என் இதயம் அவ்வளவு வேகமாக கூட துடிக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.

உயிர் பயம் என்றால் என்ன? என்பதை உணர்த்திய நாள் அது.

********************************************************************

படிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி!

எனக்கு நிறைய கருத்துக்கள்/விசயங்கள்/கட்டுரைகள் மெயில்களில் வருகின்றன. நண்பர்கள் அதனை என் பிளாக்கில் பிரசுரிக்கச் சொல்கின்றனர். சில மெயில்கள் ஆங்கிலத்தில் உள்ளன. நான் கூடுமான வரை என்னுடைய எழுத்துக்களையே இங்கே பிரசுரிக்க நினைக்கிறேன். யார் எழுதியது என்று தெரியாமல், நாம் எப்படி பிரசுரிக்கலாம்? சமப்ந்தப்பட்டவர்கள் படிக்க நேர்ந்தால்? அதனால் எனக்கு என்னவோ அப்படி அடுத்தவர்கள் எழுதியதை, எழுதியவர்கள் பெயர் தெரியாத நிலையில் பிரசுரிக்க விருப்பம் இல்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Apr 25, 2010

இந்தியா ஒளிர்கிறது!

எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டு அருகே சில பூக்கடைகள் உண்டு. காலை மாலை என எந்த வேலையிலும் பிஸியாகவே இருப்பார்கள். நான் சிறு வயதில் அவர்களை பார்த்து பொறாமைப் பட்டதுண்டு. எப்போதுமே இவ்வளவு கூட்டம் உள்ளதே, அப்படி என்றால் எவ்வளவு பணம் அவர்களிடம் இருக்கும்? என்று நான் அடிக்கடி அந்த வயதில் நினைப்பதுண்டு. அங்கே உள்ள ஒரு பூக்கடையில் ஒரு சிறு பெண் அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அவள் பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்களில் அவள் அழகை பார்த்து வியந்ததுண்டு. அவள் மட்டும் சினிமாவில் சேர்ந்து இருந்தால், எங்கோ போயிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது. இததனை வருடங்களுக்கு அப்புறமும் அந்த பூக்கடை இன்னும் அங்கே உள்ளது. இப்போது எல்லாம் நான் அதிகம் அந்த கடையை கவனிப்பதில்லை. ஆனால், கடந்த முறை கோவில் செல்லும் போது, அங்கே நிறுத்தி டிரைவரிடம் பூ வாங்க சொன்னேன். அப்போதுதான் கவனித்தேன். அதே இடத்தில் உட்கார்ந்து பூ கொடுக்கும் பெண்மணியை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, டிரைவரிடம் 'யார் அது?' என்று கேட்டேன். 'அவர்தான் பூக்கார அம்மாவின் பெண்' என்று என்னிடம் கூறினார். நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு சினிமா ஹீரோயின் போல இருந்த அவள், இன்று எலும்பும் தோளுமாய், மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். அவளை பார்க்காமலேயே இருந்திருக்கலாம். ஏன் பார்த்தோம் என்று ஆகிவிட்டது.

அவள் ஏன் இப்படி ஆனாள்? காரணம் வறுமை!

சிறு வயதில் எனக்கு செருப்பு வாங்கும்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு கடைக்கு அப்பா கூட்டிச்செல்வார். அப்போது அந்த கடையில் என் வயது உடைய ஒரு பையனையும் பார்த்திருக்கிறேன். அப்பா ரொம்ப முயற்சி செய்துதான் அவனை பள்ளியில் படிக்க வைத்தார். முயற்சி என்றால் அப்பா பள்ளியில் சேர்த்து விடவில்லை. அந்த பையனின் அப்பாவிற்கு வேண்டிய உதவிகள் செய்து, புத்திமதி சொல்லி அவனை படிக்க வைக்க உதவி செய்தார். ஆனால் என்ன நடந்தது? சமீபத்தில் அதே கடையியில் அவன் அப்பா இருந்த இடத்தில் அவனைப் பார்த்தேன். ஏன் அவன் படிப்பு என்ன ஆயிற்று? அவனால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.

காரணம் வறுமை!

இப்படி நான் சொல்லிக்கொண்டே போக நிறைய உதாரணங்கள் உள்ளது. ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். பணம் பணக்காரர்களிடம் மட்டுமே செல்கிறது. ஆனால் இந்தியா முன்னேறிக்கொண்டுதான் உள்ளது. உழைக்கும் ஏழை வர்க்கத்தினர் இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு சில சுயநல மனிதர்கள் மக்களின் பணத்தை சுரண்டி வாழ்க்கையை நடத்துவதை பார்க்கும் போது உள்ளம் கொதிக்கிறது.

அப்படிப்பட்ட ஒருவர்தான் கேதன் தேசாய். ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்த இவர் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு இதுவரை நமக்கு தெரிந்தவரையில் 3000 கோடி ரூபாய்.

பஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதில், ரூ.1,800 கோடி ரொக்கமாகவும்; 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் தேசாய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பல கோடி ரொக்கம், தங்கத்தை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றியதை பார்த்தபொது மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். டெல்லியில் உள்ள மருத்துவக் கவுன்சில் தான், நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதன் தலைவராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருபவர் கேதன் தேசாய். இளம் வயதில் இந்த உயர்ந்த பதவியில் அமர்ந்தவர் இவர்.

தேசாய் பல ஆண்டாகவே லஞ்ச வேட்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிகிறது. இதில் என்ன சந்தேகம் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு கொள்ளை ஒரு சில வருடங்களில் முடியுமா என்ன?. ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க, குறைந்தப்பட்சம் ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறார்.

இவ்வளவு பணத்தையும் சும்மா வீட்டில் வைத்திருந்திருக்கிறார். எதற்காக இவ்வளவு பணம்? அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார்? என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார்? ஒரு சாதாரண மனிதன் இன்கம்டேக்ஸ் கட்டவில்லை என்றால் 'லபோ திபோ' என்று குதிக்கும் அரசாங்கம், இவ்வளவு பணம் ஒரு தனி மனிதனிடம் போகும் வரையில் எப்படி ஒன்றும் செய்யாமல் இருந்தது? சத்தியமாக அவர் ஒருவரால் மட்டும் இந்த ஊழலை செய்திருக்க முடியாது. இதில் நிறைய நபர்கள் உடந்தையாக இருந்திருக்க வேண்டும். யாரோ வேண்டாத ஒருவர் சிபிஐயிடம் போட்டுக் கொடுத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மாட்டி இருக்க வாய்ப்பே இல்லை.

போலிஸ் அவரை அரஸ்ட் செய்து விட்டது. முடிவில் என்ன நடக்கும்?. அவர் விரைவில் ஜாமினில் வெளி வந்துவிடுவார். கேஸ் ஒரு 10 வருடம் நடக்கும். அதன் பிறகு அவருக்கு வயதாகி இறந்துவிடுவார். அது வரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மூலம் அவரும் அவர் குடும்பத்தாரும் சந்தோசமாகவே வாழ்வார்கள். ஆனால், எங்கள் ஊர் பூக்காரியின் குடும்பமும், செருப்பு தைப்பவனிம் குடும்பமும் காலம் முழுவதும் வேதனைகளை சுமந்தே வாழ வேண்டும்?. என்ன நியாயம் இது? நான் குறிப்பிட்டது இரண்டு நபர்களை பற்றி மட்டுமே. இது போல் லட்சக்கணக்கான மக்கள் ஏழையாகவே பிறந்து, வாழ்ந்து, ஏழையாகவே இறந்து போகிறார்கள்.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தை ஏன் இன்னும் கடுமையாக்க முடியவில்லை? ஏன் தீர்ப்பு வருவதில் தாமதம் ஆகிறது? என்ன காரணம்? ஒருவரைத்தானே இப்போது பிடித்திருக்கிறார்கள். இது போல் இன்னும் எத்தனை பேரோ?

சிலசமயம் அதிக ஜனநாயகம் கூட ஆபத்துதான் என்று நினைக்கிறேன். என்ன செய்வது, என்னால் இது போல் எழுதுவதைத்தவிர வேறு என்ன செய்து விட முடியும்?

ஆம், இந்தியா ஒளிர்கிறது. ஊழல் பெருச்சாளிகள் மூலமாகவும்,அரசியல்வாதிகள் மூலமாகவும்.

Apr 23, 2010

வெறுமையாய் உணர்கிறேன்?

16 வயதில் இப்படி இருந்ததாக நினைவு. பசிக்கும் ஆனால் சாப்பிட பிடிக்காது. எல்லோர் மேலும் எரிச்சலாக வரும். அறிவுரை சொல்பவர்கள் மேல் கோபம் கோபமாக வரும். ஆனால் ஒரு சிலரை பார்த்தால் 'ஜிவ்' என்று இருக்கும். எதுவுமே புரியாத வயது. எதுவும் தெரியாத வயது. ஆனால் எல்லாம் தெரிந்ததாக காட்டிக்கொண்ட வயது. இப்படிப்பட்ட உணர்வுகளோடு வாழ்ந்தாலும் கவலை என்றால் என்ன என்று தெரியாத வயது. அப்பா பணத்தில் ஜாலியாக இருந்த நாட்கள் அவை. மீண்டும் வராதா? என்று ஏங்க வைத்த வாழ்க்கை.

ஆனால் இன்று? எல்லாம் இருக்கிறது. ஆனால் எல்லாம் இல்லாதது போலும் இருக்கிறது. சந்தோசம் இருக்கிறது ஆனால், சந்தோசம் இல்லாதது போலும் இருக்கிறது. என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. ஆனால், அது சாத்தியம் இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறது. தினமும் ஆபிஸ் செல்கிறேன். பிள்ளைகள் பள்ளி செல்கிறார்கள். வாரம் தவறாமல் கோவில் செல்கிறோம். ஷாப்பிங் செல்கிறோம். எப்போதாவது சினிமா செல்கிறோம். மாதம் பிறந்தால் நல்ல சம்பளம் வருகிறது. இருந்தாலும் மனதில் ஒரு வெறுமை இருந்து கொண்டே உள்ளது. அது என்ன? என்று என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை.

சந்தோசம் நிரந்தரம் இல்லை என்பது மட்டும் தெரிந்தே இருக்கிறது. ஆனால், சந்தோசம் என்றால் என்ன? என்பதிலும் குழப்பம் இருந்து கொண்டே உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோசம். எனககு எது அதிக பட்ச சந்தோசம் கொடுக்கும்? என்று என்னால் இது வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால், இந்த வெறுமை உணர்வு என் அலுவல் சம்பந்தபட்டதாக இருக்குமோ என்றே சந்தேகமும் இருக்கிறது. ஒரு முக்கியமான புராஜக்ட் வேலையில் உள்ளேன். ஆரம்பித்து ஏறக்குறைய 15 மாதங்கள் முடிந்த நிலையில், நல்ல படியாக முடியுமா? இல்லை முடியாதா? என்று குழப்பமாக உள்ளது. மிகப் பெரிய முயற்சி அது. ஆனால் யாரிடமும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல். அந்த அளவிற்கு முக்கியமான வேலை. ஏதாவது மனக்குழப்பம் வந்தால், யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் ஓரளவு தெளிவு பிறக்கும். ஆனால், நான் இருக்கும் சூழ்நிலையில், நான் என்னிடம் மட்டும்தான் பகிர்ந்து கொள்ளமுடியும். என்னால் அந்த வேலையில் இருந்து கழட்டிக்கொண்டு வெளியில் செல்லவும் முடியவில்லை. அவ்வாறு செய்தால் அது என்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது போன்றது.

பாடல்கள் மட்டும் போதும் எனக்கு. பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தால் எனக்கு சாப்பாடு கூட வேண்டாம். என்னால் உயிர் வாழ முடியும். ஆனால், கேட்க நேரம்? புத்தகங்கள் படிக்க பிடிக்கும். ஆனந்த விகடன், குமுதம் கிடைக்காத ஊரில் அல்லவா நான் இருக்கிறேன். என்ன காரணமோ, எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எனக்கு பிடித்த புத்தகங்களை இந்தியாவிலிருந்து வாங்கிவர முடியாமலே போய் விட்டது. நிறைய படித்தால்தான் நிறைய எழுத முடியுமாம். ஒன்றும் படிக்காமலே நான் எப்படி 162 இடுகைகள் எழுதினேன் என்று தெரியவில்லை.

பணம், சொத்து மட்டுமே வாழ்க்கை என்றால் அதை என்றோ அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன். அதனால், பெரிய செலவந்தன் என்று யாரும் நினைக்க வேண்டாம். பணக்காரன் என்றால் யார்? என்ன அளவுகோல்? யார் நிர்ணயம் செய்வது?. என்னைப் பொறுத்தவரையில் என்றுமே நான் பணக்காரன்தான். அப்படித்தான் நம்மை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். நிறைய எழுத வேண்டும் என்றுதான் பதிவுலகத்துக்கு வந்தேன். தினமும் இரண்டு பதிவுகள் எழுதும் அளவிற்கு என்னிடம் விசயம் உள்ளது. எழுத உட்கார்ந்தால், எதற்காக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது? நிறைய கதைகள் என் மனதில் கருவாகவே உள்ளன. என்று பிரசவிக்கும் என்று எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் ஒரு வெறுமையான உணர்வு.

போன வருடம் மார்ச் 23ம் தேதி இப்படி எழுதியிருந்தேன்:

"என்ன வேண்டும் எனக்கு?

சிறு வயதில் எல்லாவற்றிலும் ஆசை. துணி மணியில் ஆரம்பித்து சாப்பாடு வரை. கஷ்டப்பட்டு படித்தேன். அப்பொழுது இருந்த மன நிலை என்ன? எப்படியாவது நனறாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும். படித்து வந்தாச்சு. அப்புறம் என்ன? நல்ல டிகிரி படிக்கனும், நிறைய படிக்கனும். நிறைய படிச்சாச்சு. படிச்சு என்ன பண்ண, நல்ல வேலை கிடைக்கணும். நல்ல வேலைல சேந்தாச்சு. இந்தியால வேலை பார்த்து என்னைக்கு பணக்காரனாவது, வெளிநாடு போக வேண்டாமா? அதுவும் போயச்சு. வெளிநாட்டு வேலை கிடைச்சாச்சு, பெரிய போஸ்ட் வேணாமா? அதுவும் வந்துடுச்சு. கம்பனி கார், வீடு இத்யாதி, இத்யாதி.......

நமக்குன்னு ஒரு வீடு வேண்டாமா, நம்ம சொந்த ஊர்ல?, கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன? நண்பன் கேட்டான், நல்ல ஒரு நிலம், ஒரு ஏக்கர் விலைக்கு வருதான், வேணுமா? ஆசை யார விட்டது (எனக்கு தேவை கடைசியில ஒரு ஆறு அடி நிலம்தான் என்று தெரிந்தே, நிலமும் வாங்கியாச்சு) .......

இப்போது நான் என்ன செய்வது? ஏதாவது ஒன்று தேவை என எண்ணும்போது அதை நோக்கியே மனம் செல்கிறது. அது முடிந்தவடன் மற்றதை நோக்கி செல்கிறது? முடிவில் எதை நோக்கி போகிறோம்?

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறது அது என்ன? எதை நோக்கி நான் அல்ல நாம் போகிறோம்? என்ன வேண்டும் எனக்கு? எதற்காக நான் பிறந்தேன்? என்னுடைய குறிக்கோள் என்ன? என்னுடைய பிறப்பின் நோக்கம் என்ன?

70 வயதில் (ரொம்ப அதிகமோ) இறந்தாலும், இறந்துவிடுவோம், என தெரிந்தே, தினமும் யோகா செய்கிறேன், வாக்கிங் போகிறேன், ஜிம் போகிறேன், தியானம் செய்கிறேன். சந்தோசமாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் ஏதோவொறு தேடுதல் எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது என்ன? அதை எப்போது நான் அடைய போகிறேன்?"


போன வருடம் இருந்த இந்த தேடல் ஒரு வருடம் முடிந்தும் இன்னும் என் மனதில் இருந்து கொண்டேதான் உள்ளது. இந்த தேடலுக்கு விடை கிடைக்காததால் ஒரு விதமான வெறுமை உணர்வு மனதில் இருந்து கொண்டே உள்ளது. எப்போது இந்த வெறுமை உணர்வு என்னை விட்டு போகும்? என்று எனக்குத் தெரியவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே?

Apr 3, 2010

சில எரிச்சலான செய்திகள்...

மலேசியாவில் ஆஸ்ட்ரோ டிவியில் தமிழ் (ஓரளவு) புதுப்படத்திற்கு என்று ஒரு சேனல் உள்ளது. இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் ரிலீஸாகும். ஒவ்வொரு படமும் தினமும் இருமுறை ஒளிப்பரப்பாகும். இதை ஏற்கனவே வேறு ஒரு இடுகையில் குறிப்பிட்டுள்ளேன். இப்போது சில நிகழ்ச்சியினையும் அதே போல் ஒளிப்பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை "2008 விஜய் அவார்ட்ஸ்" நிகழ்ச்சி (விழா 2009 இறுதியில் நடந்திருக்கும் என நினைக்கிறேன்) ஒளிப்பரப்பானது. இந்தியாவில் உள்ள நண்பர்கள் ஏற்கனவே பார்த்திருக்கக்கூடும். நானும் இந்த நிகழ்ச்சியை ரசித்துத்தான் பார்த்தேன். அதில் நான் பார்த்த ஒரு பகுதி என்னை எரிச்சல் ஏற்படுத்தியது. அந்த பழைய நிகழ்ச்சியைப் பற்றி ஏன் இப்போது எழுதுகின்றீர்கள்? என தயவு செய்து கேட்காதீர்கள். நான் பார்க்கும்போதுதானே நான் எழுத முடியும்?

சிறந்த குழுவிற்கான பரிசு சுப்ரமணியபுரம் படத்திற்கு கிடைத்தது. பரிசு வாங்குவதற்காக சசிகுமாரும், மற்றவர்களும் மேடைக்கு வந்தனர். நடிகர் ஜெய், ஜேம்ஸ் வசந்தனையும் மேடைக்கு அழைத்தார். அவரும் உடனே மேடைக்கு வந்தார். உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி, "உங்கள் குழு சார்பாக யார் பேசப் போகின்றீர்கள்" என்றார். உடனே சசி, ஜேம்ஸ் வசந்தனை கைக்காட்டினார். உடனே கோபி, "பாத்தீங்களா ஜேம்ஸ் சார். சசிகுமார் உங்களின் ஒரு நல்ல மாணவன் என்பதை எப்படி நிரூபிக்கிறார்? " என்று கேட்டார். அதற்கு ஜேம்ஸ் வசந்தனின் விளக்கத்தை பாருங்கள்:

" இந்த விசயத்துல சசிகுமார் நல்ல ஸ்டூடண்ட் தான். ஆனால்... என்று நிறுத்திவிட்டு ஒரு நக்கல் சிரிப்புடன், சசிகுமாரின் அனுமதியுடன் உங்களுக்கு ஒரு சமபவத்தை கூறுகிறேன். நான் அவன் மாணவனாக இருந்த காலங்களில் அவ்வப்போது அவனுக்கு ஆங்கில இலக்கணத்தை சொல்லித் தருவதுண்டு. நாங்கள் சவுதி அரேபியாக்கு சென்றிருந்த போது அங்கே பாலைவனத்தை (டெஸர்ட்ஸ்) பார்த்தோம். சுற்றிப் பார்த்துவிட்டு அங்கே உள்ள ஒரு கிளப்பில் இரவு உணவு சாப்பிட்டோம். பிறகு சாப்பிட்டு முடித்தவுடன், 'நாங்கள் டெஸர்ட்ஸ் சாப்பிட போகிறோம்' என்று கிளம்பினான் சசி. நான், " இப்போதுதானே டெஸர்ட்டிலிருந்து வந்தாய். மீண்டும் டெஸர்ட் என்கிறாயே? இந்த டெஸர்ட்டுக்கு என்ன அர்த்தம்? என்றேன். உடனே சசி, "டெஸர்ட்னா டெஸர்ட்தான்" என்றான். "இரண்டுக்கும் ஸ்பெல்லிங் என்ன ?" என்றும் கேட்டேன். அவரும் ஜெய்யும் பல நிமிட யோசனைக்குப் பிறகு desert என்று கூறினார்கள். நான், இரண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங் இல்லை, என்று சொல்லிவிட்டு, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடும் டெஸர்டுக்கு கூட ஒரு S சேர்க்க வேண்டும், என்று கூறினேன். பிறகு ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு என்னிடம் வந்தவர், என்னிடம் வந்த சசி, 'சார் ஒரு S சேர்க்கனும்னு சொன்னிங்க, எந்த இடத்துல சேர்க்கனும்னு கேட்டார்' னு சொல்லி அவ்வளவு பெரிய மேடையில் அவர் மட்டுமே சிரித்தார்.

உடனே சசிகுமார், " நான் ஒரு தமிழன்" என்று சொல்லிவிட்டு சென்றார். சசிகுமாருக்கு கோபம் வந்ததோ இல்லையோ? எனக்கு அவ்வளவு கோபமும், எரிச்சலும் வந்தது. என்னுடைய கேள்வி இதுதான். அவ்வளவு பெரிய அரங்கில், அத்தனை மக்களுக்கு மத்தியில் ஒருவரின் குறையை இப்படியா சொல்வது. அப்படியென்ன, ஆங்கிலம் என்பது அவ்வளவு பெரிய விசயமா? என்ன?. சசிக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால் என்ன குறைந்து போய்விட்டார். இல்லை ஆங்கிலம் அதிகம் தெரிந்த ஜேம்ஸ்தான் என்னைத்தை பெரிதாக சாதித்து விட்டார்? அதிலும் ஜேம்ஸ் வசந்தனின் அந்த அசட்டு சிரிப்பு அப்படியே...........

இதுல என்ன ஒரு கொடுமைனா தினமும் அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்புகின்றார்கள்.

சாரி, ஜேம்ஸ் வசந்தன்! நீங்க செஞ்சது தப்பு!

****************************************************************

அதே நிகழ்ச்சியில கோபியின் தொண தொண பேச்சும் ஒரே எரிச்சல். ஏதோ இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்ததற்கு சந்தோசப்படுவது போல், ஹரிஷ் ஜெயராஜும், கொளதம் மேனனும் மேடையில் இருப்பதை பார்த்து, பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து இருப்பது சந்தோசம் அளிக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்றும் (இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும் போல) பேசும்போது எல்லாம் எரிச்சல்தான் வந்தது. பேச வேண்டியதுதான், எது தேவையோ அதை மட்டும் பேசினால் போதாதா? தொண தொணன்னு சே... அதுலயும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கமலே கூச்சப்படும் அளவிற்கு அவரை புகழ்ந்து தள்ளியது... திஸ் ஈஸ் டூ மச் கோபி.

****************************************************************

வியாழன் மதியம் கோலாலம்பூரில் ஒரு லன்ச் மீட்டிங்கின் போது அங்கே வந்திருந்த விருந்தினர் ஒருவர் கூறியது;

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்ப்பதற்காக இந்தியா சென்றுள்ளார். அமெரிக்காவில் அவரின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருப்பவர், ஒரு இந்தியர். அமெரிக்கர் ஒரு மாதம் இந்தியாவில் பயணம் செய்து விட்டு அமெரிக்கா சென்றுள்ளார். நீண்ட நாட்களாக இந்தியாவுக்கே செல்லாத அந்த பக்கத்து வீட்டு இந்தியர், அமெரிக்கரிடம்,

" இந்தியா எப்படி உள்ளது?" என்றாராம்.

அதற்கு அவர், " நன்றாக உள்ளது. டெல்லி, மும்பை (இப்படி பல இடங்களை சொல்லி) எல்லாமே அருமையாக உள்ளது" என்றாராம்.

" இந்தியர்கள் எப்படி உள்ளார்கள்?"

மீண்டும் அவர், பல இடங்களையும், கட்டிடங்களையும் பற்றி அருமை என்று சொல்லி இருக்கிறார். நம்ப ஆளும் விடாமல்,

" எல்லாம் சரி, இந்தியர்கள் எப்படி உள்ளார்கள்?" என்று கேட்டுருக்கிறார்.

அதற்கு அமெரிக்கர், " இந்தியர்களை நான் பார்க்கவில்லை" என்று இருக்கிறார்.

நம் நண்பருக்கு ஆச்சர்யம். உடனே, " என்ன நீங்கள் ஒரு மாதம் இந்தியாவில் இருந்து உள்ளீர்கள். இந்தியர்களையே நான் பார்க்கவில்லை என்கின்றீர்களே? எப்படி?" என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அமெரிக்கர் இப்படி பதில் சொன்னாராம்:

" ஆமாம். நான் ஒரு மாதம் இந்தியாவில் இருந்தது உண்மைதான். ஆனால் ஒரு இந்தியரையும் பார்க்கவில்லை என்பதும் உண்மைதான். நான் பார்த்து எல்லாம், மராட்டியர்கள், காஷ்மீரியர்கள், பீகாரிகள், தமிழர்கள், தெலுங்கர்கள்..............இப்படித்தான். இந்தியர் என்று ஒருவரையும் பார்க்கவில்லை"

அவர் சொன்னது ஒரு வேளை உண்மையோ???

****************************************************************