Jul 31, 2009

கல்வியே ஒரு சுமையாகலாமா???

ரிப்போர்ட் டே என்பதாலும், பிரின்சிபால் நாங்கள் அவசியம் வரவேண்டும் என்று சொன்னதாலும் அவசர அவசரமாக அங்கே சென்றோம்.
போனவுடன் எல்லா பரிட்சை பேப்பர்களும் எங்களிடையே காண்பித்தார்கள். அனைத்திலும் 98 அல்லது 99 மார்க் எடுத்திருந்தான் என் பையன். எனக்கு ஒரே பெருமை. ஆனால் அடுத்து நடந்த உரையாடல்கள்தான் என்னை இந்த பதிவினை எழுத தூண்டியது.

"ரொம்ப தேங்க்ஸ் மேடம். பையன் ரொம்ப நல்ல மார்க் வாங்கியிருக்கான்"

" ரொம்ப மார்க் வாங்கியிருந்தாலும், சில விசயங்கள் நாங்க உங்க கிட்ட சொல்லணும்"

" என்ன விசயம்"

" பையன் ரொம்ப "சையா" இருக்கான். அவன் நல்லா கான்பிடெண்டா பேச மாட்டேங்கறான்"

" இல்லையே வீட்ல நல்லா பேசறானே"

" வீட்ல இருக்கலாம். அதனால நீங்க கேட்ட மாதிரி 'அந்த' வகுப்புக்கு எங்களால ப்ரோமோட் செய்ய முடியாது"

" என் பெண்ணும் அப்படித்தானே படிச்சா. இப்போ எல்லாத்துலயும் முதல் ரேங்க் வாங்கலியா?"

" அது அப்போ சார். இப்போ நாங்க அனுமதிக்க முடியாது"

" நீங்க ப்ரோமோட் பண்ணைலைனா, தயவு செய்து டிசி குடுங்க"

" அப்படீன்னா பிரின்ஸ்பால பாருங்க"

நான் போயிருந்த இடம், என் பையன் படிக்கும் LKG ஸ்கூல். அவன் படித்து முடித்தது K2 ( K3 - pre school, k2 - second stage then K1 - third stage). நான் அவர்களை கேட்டது அவனை பர்ஸ்ட் ஸ்டேண்டர்டில் அனுமதிக்க. அவனின் வயது 5 முடிந்து, ஆறு தொடக்கம். மலேசியாவில் 7 வயதில்தான் முதல் வகுப்பில் அனுமதிப்பார்கள். பிறகு இந்தியா போனால் ஒரு வருடம் இழக்க வேண்டி வரும். கஷ்டப்பட்டு என் பெண்ணிற்கு போராடி சரி செய்தேன் எந்த இழப்பும் இல்லாமல். இப்போ பையன் முறை.

பிறகு பிரின்ஸ்பாலை பார்த்து பேசியவுடன் அவரும் அதே காரணத்தை கூறி, "அவனுக்கு நன்கு தன்னம்பிக்கையை கொடுங்கள், நன்றாக தினமும் படிக்க சொல்லுங்கள், விளையாட்டு பையனாக இருக்கிறான்" என அட்வைஸ் செய்தார்.

நான் பிரின்ஸிபாலுக்கும், அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் பின் வருமாறு கூறினேன்,

" நான் எக்காரணத்தைகொண்டும், தன்னம்பிக்கையை வலுக்கட்டாயமாக திணிக்க மாட்டேன். படிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன். அவனை விளையாட வேண்டாம் என சொல்ல மாட்டேன்"

எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.

" ஏன் அப்படி சொல்லறீங்க"

" ஏன்னா, அவன் ஐந்து வயது குழந்தை. அவன் குழந்தையாக இருப்பதையே நான் விரும்புகிறேன். எதையும் திணிக்க விரும்பவில்லை. அவன் அவனாகவே வளரவே விரும்புகிறேன். அவன் நாளைக்கே இந்திய பிரதமராக உட்காரப்போவதில்லை. அதனால், முடிந்தால் அவனை முதல் வகுப்பில் போடுங்கள். இல்லையென்றால் பரவாயில்லை"

நான் சொன்னது சரியா, இல்லையா?

பிறகு ஒரு சின்ன டெஸ்ட் வைத்து முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் நான் கிராமத்தில் படித்த பள்ளியும், நான் LKG எல்லாம் படிக்காமல் நேரடியாக முதல் வகுப்பில் சேர்ந்ததும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனது.

Jul 29, 2009

பாஸிட்டிவ் அப்ரோச்

என் கல்லூரி நண்பர் ஒருவர் இன்று அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில் அதனுடைய தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.

தந்தை: நான் தேர்வு செய்திருக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்

மகன்: எனக்கு வரும் மனைவியை நானாகத்தான் தேர்வு செய்வேன்.

தந்தை: ஆனா, அந்த பெண் பில் கேட்ஸின் மகள்

மகன்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.

அடுத்த நாள்:

தந்தை பில் கேட்ஸை அணுகி,

தந்தை: உங்கள் பெண்ணுக்கு தகுந்த கணவர் என்னிடம் உள்ளார்

பில் கேட்ஸ்: ஆனா, என் பெண் ரொம்ப சின்னவள். கல்யாணம் பண்ணுமளவிற்கு பெரியவள் இல்லை.

தந்தை: ஆனா அந்த இளைஞன் உலக வங்கியின் Vice President

பில் கேட்ஸ்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.

அடுத்த நாள் அந்த தந்தை உலக வங்கியின் President ஐ அணுகி:,

தந்தை: என்னிடம் ஒரு இளைஞன் உள்ளான். அவனை உங்கள் வங்கிக்கு Vice President பதவிக்காக பரிந்துரை செய்கிறேன்.

President: ஏற்கனவே தேவைக்கு அதிகமாக எங்களிடம் பல Vice President உள்ளார்கள்.

தந்தை: ஆனா, அந்த இளைஞன் பில் கேட்ஸின் மருமகன்

President: அப்படியென்றால் சரி. அவனை சேர்த்துக்கொள்கிறேன்.

Moral: Even if you have nothing, you can get anything. But your attitude & approach should be positive.

Jul 27, 2009

ஒரு அற்புதமான அனுபவம்!

எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவுகள். பதிவுலகில் ஒரே சூடு பரக்கும் விவாதங்கள், வெளி உலகிலும் எங்கும் பிரச்சனைகள். இதன் நடுவில் மலேசியாவில் எங்கள் ஊரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 16ம் தேதி தொடங்கி, ஜூலை 26 ஆம் தேதி வரை நடந்தது. தினமும் காலையில் அபிசேகம், பூஜைகள். மதியம் யாகம், அபிசேகம், பூஜைகள். இரவு பூஜைகள், பிறகு சாமி வீதி உலா (இங்கே ஆலய ஊர்வலம்). பிறகு அனைவருக்கும் சாப்பாடு என்று பதினொரு நாட்கள் நடை பெற்றது.

இதை இங்கே நான் சொல்லக் காரணம், எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள். நான் இருக்கும் பகுதியில் மிக சில இந்திய குடும்பங்களே இருப்பதால், அனைவரும் அவர்கள் வீட்டு திருவிழா போல தினமும் கோயிலுக்கு வந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு செல்வது மிகவும் ஆச்சர்யமடைய வைத்தது. நம் ஊரில் சாமி தூக்குவது என்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனால், இங்கே யார் வேண்டுமானாலும் சாமியை தூக்கி செல்லலாம், பிறகு சாமியை வைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தினமும் நிகழ்ச்சிகள் முடிய இரவு 11 மணி ஆகிறது. அனைவரும் அங்கேயே சாப்பிட்டு செல்ல உபயதாரர்கள் தினமும் உணவு வழங்குகிறார்கள். சில சமயம் ஆலய நிர்வாகமே உணவு வழங்குகிறது.

அனைவரும் கட்டுகோப்பாக இருந்து பதினோரு நாள் நிகழ்ச்சியை நடத்தியது என்னை ஆச்சர்ய படுத்திய விசயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பூஜை. ஒரு நாள் சகஸ்ர நாம அர்ச்சனை, ஒரு நாள் பஞ்ச முக அர்ச்சனை, ஒரு நாள் பெண்களுக்கான குத்து விளக்கு பூஜை. இப்படி நிறைய. கடைசி நாளைக்கு முதல் நாள் ஆடிப்பூர திருவிழா. அனைவரும் பொங்கல் வைத்து, பால் குடம் எடுத்து, மஞ்சள் நீராடி, அம்மனை சிறப்பித்தார்கள். நான் இங்கே பன்னிரெண்டு வருடங்கள் இருந்தாலும், நான்கு வருடங்களாக அனைத்து நாட்களும் சென்றிருந்தாலும், இந்த வருடம் அனைத்து நாட்களும் சென்று, தினமும் பூஜையில் கலந்து கொண்டு, தினமும் சாமியை தூக்கி, நடனம் ஆட வைத்து, நிகழ்ச்சி முடியும் வரை குடும்பத்துடன் இருந்து, அம்பாளை தரிசித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த்து.

நான் ஒரு இந்து, அதனால் மதப்பிரச்சாரம் செய்கிறேன் என்று யாரும் எண்ண வேணடாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடம் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இந்த பதினோரு நாளும் நான் ஏதோ ஒரு உலகத்தில் இருந்ததாகவே உணர்ந்தேன். உலகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. யார் மேலும் கோபம் வரவில்லை. மனம் மிக லேசாக இருந்தது. நன்றாக துக்கம் வந்தது. பேச்சில் ஒரு தெளிவு இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் சந்தோசமாக இருந்தது. காதில் விழுந்த செய்திகள் எல்லாம் நல்லவையாகவே விழுந்தன. மனதில் எந்த ஒரு போட்டி பொறாமை எண்ணங்கள் தோன்றவில்லை. யார் மீதும் எதற்காகவும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. இதற்கெல்லாம் காரணம் மனம் மிக அமைதியாக இருந்ததுதான். மனம் ஏன் அமைதியானது? கடவுள் பக்தியாலா? இருக்கலாம். கடவுள் இல்லை என்பவர்களுக்கு நான் சொல்லும் பதில், மனம் ஒரே விசயத்தில் லயித்து இருந்ததால், மனம் அமைதியாய் இருந்திருக்கலாம்.

நான் நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் கோயிலுக்கோ, சர்சுக்கோ, மசூதிக்கோ சென்று முழு மனதுடன், உங்கள் பிரியமான தெய்வங்களை, மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். நீங்களும் அந்த அற்புதமான சுக அனுபவத்தை பெறுவீர்கள்.

நான் அடிக்கடி சொல்வது போல், தனி மனித அமைதியே உலக அமைதி.

வாழ்க வளமுடன்!.

Jul 24, 2009

கவிதைகள் (?)

கீழே உள்ள என் கவிதைகள் வெளியானது எங்கே?

விடை கடைசியில்.

*****************

பெரிய வீடு வாங்க
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்
என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?

*************************'

எல்லோருக்கும்
நாளையிலிருந்து
வேலையில்லை
என்றுச் சொன்னார்
அந்த ஐடி கம்பனி
மேலாளர் தன்
வேலையும் சேர்ந்து
போனது
தெரியாமல்.

***************************

கெட்டி மேளச்சத்தம்
பட்டு சேலைகளின்
சரசரப்பு
மணவரையில் மகள்
மாங்கல்யம் தந்துனா...
அப்பாடா ஒரு பிரச்சனை
முடிந்து போனது என
நினைத்தார் அப்பா
கூடவே அவள் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.

*****************************

அதிக பின்னூட்டம்
வரவில்லையென்று
கணணியை திறந்து
பார்த்துக்கொண்டே
இருந்தான் அவன்.
கணணி மொளன
மொழியில் அவனைப்
பார்த்து சொன்னது
'என்னை திறந்து
திறந்து பார்க்கும்
நேரத்தில் உன்னை,
உன் பதிவுகளை
திரும்பிப் பார்
நீயே இட மாட்டாய்
பின்னூட்டம்'

*******************************

விடை: மேலே உள்ள கவிதைகள் வெளியானது 'இனியவன்' ப்ளாக்கில் - 24.07.09 அன்று. ஹிஹிஹி.

Jul 21, 2009

பெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10டிஸ்கி: இதுக்கு கார்க்கி காரணமில்லைப்பா. தயவு செய்து இதையும் ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..

1) பில்லால "I am Back" னு சொல்லி தியேட்டரையே திரும்பி பார்க்க வைச்சீங்களே, அது புடிச்சுது.

2) நடன காட்சிகளில் டான்ஸ் ஆடத்தெரியலைனா கூட அருமையா ஆடுவீங்களே, அதை ரசிப்போம்.

3) "அது" அப்படீன்னு சொல்லிட்டு தலைய அப்படியே ஆட்டுவீங்களே தல அது புடிக்கும்..

4) எந்த ஹீரோயினோட நடிச்சாலும், அந்த ஹீரோயினோட உண்மையான கணவன் போலவே நடிப்பீங்கள்ள. அத விரும்புவோம். அத வீட்டுல சொல்ல போயி திட்டு வாங்குனாலும் அதை ரசிப்போம்.

5) என்னதான் உங்க குரலை எல்லோரும் மிமிக்ரி பண்ணாலும், இன்னமும் அதே ஸ்டைல பேசுறத ரசிப்போம்.

6) சிட்டிசன் படத்துல அந்த வயசான கேரக்டர்ல, "யெய்ய்ய்ய் கலக்டரே" னு கத்துவீங்கள்ள அத யாராவது மறக்க முடியுமா?.

7) "கண்டு கொண்டேன் , கண்டு கொண்டேன்" படத்துல, அந்த பாட்டுல, என்னத்தான் ஐஸ்வர்யா ராய் ஆடுனாலும், தபுவ சைட் அடிப்பீங்களே அத மறக்க முடியுமா? ..

8) பில்லால அந்த கோட் ஷ்ட்ல கூலிங் கிளாஸ கழட்டாம அடம்புடிப்பிங்கள்ள தல அதை மறக்க முடியுமா?.

9) முகவரி படத்துல, உண்மையா பாடுனவர விட நீங்க அருமையா வாயசைப்பீங்கள்ள, அதை ரசிப்போம்ல.

10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் அஜீத்னா நாங்க ரசிப்போம்ப்பா..

Jul 16, 2009

ப்ளாக்கை பாதுகாப்பது எப்படி?

நேற்று நண்பர் கார்க்கியின் ப்ளாக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும், பிறகு திரும்ப கிடைத்து விட்டதாகவும் அவர் பதிவின் மூலம் அறிந்தேன். இதனால், எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றுகிறது. இதை பற்றி விசயம் தெரிந்தவர்கள் ஒரு பதிவினை எழுதுவார்களேயானால் என்னைப் போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

என்னுடைய சந்தேகங்கள்:

01. ஹேக்கின் செய்வது என்றால் என்ன? எப்படி அவர்கள் நம் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியும்? இது சாத்தியமானால், ஆனந்த விகடன் போன்ற தளங்களை கூட ஹேக் செய்ய முடியுமா?

02. அப்படி அவர்கள் நம் ப்ளாக்கை திருடும் பட்சத்தில் நாம் எழுதிய அனைத்து பதிவுகளும் அவர்கள் அழித்து விட்டால் என்ன செயவது?

03. அப்படி அவர்கள் நம் பதிவுகளை அழிக்கும் பட்சத்தில் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற தளங்களிலிருந்து நம் பதிவுகளை பெற முடியுமா?

04. எப்படி ஹேக் செய்யப்பட்ட ப்ளாக்கை திரும்ப பெறுவது?

05. அவ்வாறு நம் ப்ளாக் கடத்தப் படாமல் இருக்க நாம் என்ன மாதிரி பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும்?

06. நம் ப்ளாக்கை ஹேக் செய்வதால் அவர்களுக்கு என்ன நன்மை?

07. அவர்கள் நம் ப்ளாக்கை கடத்தி ஏதேனும் தவறான செய்தி வெளியிட்டால், அதை எப்படி நாம் எழுதவில்லை என அடுத்தவர்கள் நம்புவார்கள்?

08. மொத்தத்தில் இதை தடுக்க என்னதான் வழி?

தயவு செய்து விசயம் தெரிந்தவர்கள், ஒரு பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரிவியுங்கள். நான் வேண்டுமென்றால் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக எழுதுகிறேன்.

இதனை நண்பர் கார்க்கி படித்தால் அவர் எப்படி அவர் ப்ளாக்கை திருமப பெற்றார் என தெரிவிக்கவும்.

Jul 14, 2009

மிக்ஸர் - 14.07.09 - சிறுகதை போட்டி முடிவு!!!

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதை போட்டி முடிவு நாளை வெளிவரும் என நினைக்கிறேன். வெற்றிப் பெற போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

******************************************************************

நிறைய நண்பர்கள் மெயில் மூலம் அவர்களின் சிறுகதைகளையும், கவிதைகளையும் என்னை படிக்கச்சொல்லி கருத்துக்கள் கேட்கிறார்கள். வேலை பளுவினால் உடனே கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை. படித்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனைவருக்கும் நிச்சயம் பதில் அனுப்புகிறேன். முதலில் என்னை ஒரு ஆளாக நினைத்து கருத்துக்களை கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.

******************************************************************

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த சம்பவம். அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் இருப்பது வெளி நாட்டில். கணவன் மனைவி மட்டுமே அந்த வீட்டில். ஒரு நாள் ஏதோ ஒரு விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை முற்றிவிட்டது. கோபத்தில் கணவர், மனைவியை பிடித்து தள்ள, அவர் கீழே விழ, தலையில் பலத்த அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அதை பார்த்த அந்த கணவர், குற்ற உணர்ச்சியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நினைக்கவே வேதனையாக உள்ளது. இதை விதி என்பதா? என்ன சொல்வது? சாதாரண விசயத்தில் ஆரம்பித்த சண்டையில் அநாவசியமாக இரண்டு உயிர்கள் போய் விட்டது.

******************************************************************

நான் எழுதி ஆனந்த விகடனில் வெளியான முதல் சிறு கதை அதாவது ஒரு பக்க கதையில் குழந்தை தத்து எடுப்பதை பற்றி எழுதியிருந்தேன். அதற்கு ஏகப்பட்ட பாரட்டு கடிதங்கள் வந்தன. அந்த சந்தோசத்தில் நாமே ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க கூடாது? என நினைத்து, வீட்டில் ஆலோசித்தேன். என் மனைவி ஒத்துக்கொண்டாலும், என் பிள்ளைகள் ஒத்துக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு நல்ல விபரம் தெரியும். பையன் சின்ன பையன். இருந்தாலும் அவர்களை எதிர்த்து நான் அந்த செயலில் இறங்க முற்படவில்லை. ஆனால், இப்போது என்ன தோன்றுகிறது என்றால், நாம் எடுத்து வளர்ப்பதற்கு பதில், ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அந்த பணத்தை செலுத்தி ஒரு குழந்தைக்கான செலவை ஏற்கலாமா? என யோசித்து வருகிறேன். எனக்கு உதவும் கரங்கள் அமைப்பை பற்றி தெரியும். வேறு ஏதாவது நிறுவனங்கள் தெரிந்தால், மெயிலிலோ, பின்னூட்டத்திலோ நண்பர்கள் தெரிவிக்கவும்.

*********************************************************************

நான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை பழைய துணிகளை தூக்கி போடுவது வழக்கம். இந்தியாவில் என்றால், யாருக்காவது கொடுக்கலாம். இங்கே தூக்கித்தான் போட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், போன வருடம்தான் தெரிந்தது. இங்கே ஒவ்வொரு சாப்பிங் காம்ளக்ஸிலும் ஒரு பெரிய பெட்டி மாதிரி வைத்துள்ளார்கள். நமக்கு தேவையில்லாத துணிகளை அங்கே போட்டு விட்டால் அவர்கள் அதை உடை வாரியாக பிரித்து மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இந்த முறை இந்தியாவில் உள்ளதா எனத் தெரியவில்லை. ரொமப நல்ல விசயமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

********************************************************************

சமீபத்தில் என் நண்பரிடம் இருந்து வந்த மெயில். மிகவும் பயனுள்ள விசயமாக இருப்பதால் இங்கே வெளியிடுகிறேன்:

Dear Friends,

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.Please ask the students to contact the people mentioned below to get the form #580,shubhakar, 44th cross,1st main road,jayanagar

7th block Bangalore-

Mob no- 9900906338(saraswat i)
Mr.Shivkumar( 9986630301) - Hanumanthnagar office
Ms.Bindu(9964534667 )-Yeshwantpur office

Even if you dont know anyone, please pass on this info, some one might be in need of this help desperately.

*******************************************************************

Jul 10, 2009

சில சுவையான செய்திகள்

என் பிள்ளைகளுக்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் என்றால் உயிர். முன்பெல்லாம் எ.ஆர்.ரகுமான் பாடல்கள் பிடிக்கும். ஆனால், இப்போது என் பிள்ளைகள் 'வாரணம் ஆயிரம்', 'அயர்ன்' பாடல்களை கேட்காமல் இரவு தூங்குவதில்லை. நாங்களும்தான். நான் என் மனைவியிடம் கூறினேன், "யாரெல்லாம் குழந்தையை கவர்கிறார்களோ அவர்களெல்லாம் பெரிய ஸ்டார் ஆகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய். இவர்கள் இருவரையும் பிடிக்காத குழந்தைகள் உண்டோ?"

" நீங்கள் சொல்வது சரிதான். இன்னொரு மியூசிக் டைரக்டர் பாட்டுக்கூட பிள்ளைகளுக்கு பிடிக்குமே? யாரது?" எனக் கேட்டார்கள். சடாரென எனக்கும் என் மனைவிக்கும் அவரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. அவர் யாரென்பது இந்த செய்தியின் கடைசியில்.

இவ்வாறுதான் சில விசயங்கள் அடிக்கடி மறக்கின்றன. இது சம்பந்தமாக ஒரு செய்தி.

மிகப் பிரபலமான மோடிவேஷனல் பேச்சாளர் ஒரு செமினாரில் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் முடிவில் அவர் இப்படி கூறினார்:

" மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"

கூட்டத்தினர் அனைவரும் மிகவும் அதிர்ச்சி கலந்த அமைதியுடன் அவரி பார்த்தார்கள், "என்னடா, இவர் இப்படி சொல்லுகிறாரே" என்று.

சிறிது நேர அமைதிக்கு பின் அவர் கூறினார்:

" அந்த பெண் வேறு யாருமல்ல. என் அன்னை தான்"

கூட்டத்தினர் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு அந்த செமினாரில் கலந்து கொண்ட ஒரு பெரிய மேனஜர், அந்த அருமையான ஜோக்கை தன் வீட்டில் மனைவியிடம் சொல்ல நினைத்தார். அன்று அவர் குடித்திருந்ததால் சிறிது போதையுடன் இருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் இரவு சமையலில் ஈடுபட்டிருந்த மனைவியை சத்தமாக கூப்பிட்டு இப்படி கூறினார்:

" மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"

அருகில் சென்ற அவரின் மனைவி கோபத்துடனும், அதிர்ச்சியுடனும், " ஆஆஆஆ'' என அவரைப் பார்த்தார். அங்கே நின்று கொண்டிருந்த மேனஜர் ஒரு 20 வினாடி கழித்து, ஜோக்கின் இரண்டாவது பகுதியை சொல்ல முயன்றார், போதையால் அவருக்கு மறந்து விட்டது. நினைவுபடுத்த முயற்சித்தார், முடியவில்லை. முடிவில் அவர் இப்படி கூறினார்:

" அந்த பெண் யாரென்று எனக்கு நினைவில்லை"

அந்த மேனஜருக்கு நினைவு திரும்பியபோது அவர் இருந்தது ஒரு ஆஸ்பத்திரியில். தன் முகத்தில் சுடு தண்ணியினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்க பட்டிருந்தார்.

Moral of the story: Don't copy if you can't paste

உடனே நினைவுக்கு வராமல் போன அந்த மியூசிக் டைரக்டரின் பெயர்: விஜய் ஆண்டனி.

*****************************************************

அந்த அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம் வந்த போது அந்த அலுவலகத்தின் GM, அக்கவுண்ட் ஆபிஸரையும், அக்கவுண்ட் கிளார்க்கையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றார். போகும் வழியில் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதை ஒன்று அவர்களை அணுகி,

" உங்களுக்கு வரம் கொடுப்பதற்காக கடவுள் என்னை இங்கே அனுப்பியுள்ளார். உங்களுக்கு வேண்டியது எதுவானாலும் என்னிடம் கேளுங்கள்" என்றது.

உடனே எல்லோரையும் முந்திக்கொண்ட கிளார்க், " எனக்கு நிறைய பெண்களுடன் ஹவாய் தீவு செல்ல வேண்டும்" எனக் கேட்டார்.

தேவதை உடனே, " அப்படியே ஆகட்டும்" என்றது. உடனே ஐந்து அழகிகளுடன் கிளார்க் ஹவாய் தீவு சென்று விட்டார்.

'அடுத்து?', என தேவதை ஆரம்பிக்குமுன், அக்கவுண்ட் ஆபிஸர், " நான் என் மனைவி குழந்தைகளுடன் உடனே அமெரிக்கா சுற்றுலா செல்ல வேண்டும்" என்றார்.

தேவதை உடனே, " அப்படியே ஆகட்டும்" என்றது. உடனே ஆபிஸர் மனைவி குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று விட்டார்.

எஞ்சியிருப்பது GM மட்டுமே. தேவதை அவரைப் பார்த்து கேட்டது, " உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?"

மேனஜர் கேட்டார், " ஹவாய் தீவு போன கிளார்க்கும், அமெரிக்கா போன ஆபிஸரும் லன்ச் டைம் முடிவதற்குள் ஆபிஸ் வந்து சேரவேண்டும்"

தேவதை உடனே, " அப்படியே ஆகட்டும்" என்றது.

Moral of the story: தலை இருக்கும் போது வால் முதலில் ஆடக்கூடாது. மேனஜர் வரம் கேட்டவுடன் அவர்கள் கேட்டிருந்தால், அவர்கள் கேட்டது கிடைத்திருக்கும். பாஸ் அருகில் இருக்கும் போது அடக்கி வாசிக்க வேண்டும்.

*******************************************************

நேற்றைய என் பதிவில் நான் சிறிது தலை கனம் பிடித்தவன் என எழுதியிருந்தேன். அதற்கு என் மனைவியின் கமண்ட்:

" நீங்க தலை கனம் பிடிச்சவர், கர்வம் கொண்டவர் னு நான் உங்களை கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். இப்போ நீங்களே அந்த உண்மையை ஒத்துக்கிட்டா, நான் என்ன சொல்லி உங்களை கிண்டல் பண்ணரது?

******************************************************

Jul 8, 2009

பெண்களின் மனம் என்பது????

உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது என்றுதான் நான் சொல்லுவேன். அது மனைவியாக இருக்கட்டும், மகளாக இருக்கட்டும் அல்லது தோழியாக இருக்கட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆண்கள் போல எதையுமே பெண்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு உடனே செய்வதில்லை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால், கோபம்?? அதுவும் எப்போது வரும் எனக் கணிப்பது மிகவும் கஷ்டம்.

மனைவிக்கு நாம் என்ன வாங்கிக் கொடுத்தாலும் ஏற்படாத ஒரு சந்தோசம், அவர்கள் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் எனக்கூறும்போது, உடனே அனுப்பி வைத்தால் வருகிறது. அதே போல் மனைவி என்ன சமைத்தாலும், ரொம்ப ருசியாக இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அவர்கள் சந்தோசத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு, மனைவிக்கு என்றல்ல, பொதுவாக பெண்களுக்கு எப்போதெல்லாம் கோபம வரும் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. சில சமயம், ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது, கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் விலகிப்போவார்கள். அதே சமயம் சாதாரண விசயம் என்று நீங்கள் நினைக்கும் விசயத்திற்கு அவர்களுக்கு கோபம் அதிகமாகி விடும். ஆனால், ஒரு உண்மை எனக்கு நன்றாக புரிந்தது. எந்த பெண்ணும் தன் அம்மா வீட்டைப் பற்றி கணவன் மட்டமாக பேசுவதை அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்கள் அவ்வாறு பேசினால், நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுத்துப்போவது அடங்கிப்போவதாக அர்த்தம் ஆகி விடாது, ஆனால், சண்டையை வளர்க்காது. ஆனால், இந்த மாதிரி சிறு சிறு சண்டைகள் இருந்தால்தான், குடும்ப வாழ்க்கையே ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

எனக்கு பெண்கள் என்றாலே ரொம்ப புடிக்கும் (யாருக்குத்தான் பிடிக்காது என்கின்றீர்களா?). நீங்கள் வேறு ஏதாவது தப்பான அர்த்தம் கொள்ள வேண்டாம். நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஏகப்பட்ட அக்கா தங்கைகளுடன் வளர்ந்தவன் நான். காமத்தை தவிர்த்து பெண்களுடன் பழகிப்பாருங்கள், அதன் சுகமே தனி. உலகத்திலுள்ள பெண்கள் எல்லாருமே ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதைகள் என்பேன். இப்படிச்சொல்லும் நான்தான் எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த போது வருத்தப்பட்டேன். பெண் குழந்தை பிடிக்க வில்லை என்ற காரணத்தினால் அல்ல, ஆண் குழந்தை பிறக்க வில்லையே என்ற ஏக்கத்தில். அந்த செயலுக்காக 'இப்பொது வருந்துகிறேன்' என்று ஏற்கனவே ஒரு பதிவில் குறிபிட்டுள்ளேன்" .

என்னை நல்ல முறையில் செதுக்கியதே நிறைய பெண்கள்தான். அம்மாவில் ஆரம்பித்து, அத்தை, அக்கா, தங்கை, தோழிகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். இப்படி பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் எனக்குள்ளும் ஒரு முரண்பாடு இருக்கிறது. என் தங்கையின் மறைவிற்கு பின் யாராவது, என்னை "அண்ணா" என்று கூப்பிட்டால் எனக்கு பிடிப்பதில்லை. அதை நான் வெறுக்கிறேன். அப்படி கூப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? என்பது என் வீட்டினரின் வாதம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு பாதுகாப்புக்காக அப்படி கூப்பிடுகிறார்களோ? என்று.

சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. எனது அனைத்து கட்டுரைகளும் படித்து உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஒரு தோழி. முதலில் மெயிலில், பிறகு போனில். பிறகு அவர் ஏதோ போட்டோ அனுப்ப போக, நான் அதற்கு பதில் அனுப்ப போக, அவர் உடனே நீங்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா? அண்ணா? என்றார். பிறகு அண்ணாவிற்கான விளக்கத்தினை கொடுத்தேன். பிறகு வழக்கம் போல் மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை என்று கூறியதால், அதற்கு வேண்டிய உதவிகளை நண்பர்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன்.

அப்படிப்பட்ட நேரத்தில், நான் அலுவலக வேலையில் பிஸியாக இருந்த சமயத்தில், அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு, எனக்கு மெயில் அனுப்புதை, பேசுவதை நிறுத்தி விட்டார். ஏன், என்ன? ஆயிற்று என ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. ஆண்கள் எல்லாருமே ஒரே மாதிரிதான் என நினைத்து விட்டார் போலும். சடாரேன, தொடர்பை துண்டித்துக்கொண்டவர், இவ்வளவு நாள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கிறாரா? தெரியவில்லை.

இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,

" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"

இந்த பாடல் சரிதான் போல.

அதனால்தான் கூறுகிறேன், "உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது" என்று.

Jul 7, 2009

மிக்ஸர் - 07.07.09 - பாஸிட்டிவ் அப்ரோச்?

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியான முறைகளை செய்து கொண்டிருந்தவர், திடீரென வேறு ஒரு தியான வகுப்பில் சேர்ந்தார். நான் ஒன்னும் அவரை தவறாக நினைக்க வில்லை. காரணம், எல்லோரும் ஏதோ ஒரு தியானம் செய்து அமைதியாக சந்தோசமாக வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த தியான வகுப்பில் சேர்ந்தவுடன் அவரிடம் பல வித மாற்றங்கள். நிறைய நல்ல விசயங்கள் வாழ்வில் நடப்பதாக மிகுந்த சந்தோசப்பட்டார். எனக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே. அவர் 24 மணி நேரமும் அந்த தியானத்தைப் பற்றிய சிந்த்னையிலே இருந்தார். அந்த தியானம் செய்தால் எந்த கெடுதலும் நடைபெறாது, அப்படியே நடப்பதாக இருந்தாலும் அதனை என் மந்திரத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் கட்டுப் படுத்தி விடுவேன் எனக்கூறினார். அவர் நான் வெஜ் அயிட்டங்கள் சாப்பிடுவதைக்கூட உடனே நிறுத்தி விட்டார். அந்த அளவிற்கு அந்த தியானத்தில் உறுதியாக இருந்தார்.

அவர் ஒரு நாள் எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள அந்த தியான மையத்திற்கு மதியம் செல்வதற்காக காரில் கிளம்பிய சிறிது நேரத்தில், அவரின் கார் எதிரில் வந்த காரில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஆகிவிட்டது. இடுப்பு எலும்பும். தொடை எலும்பும் முறிந்து விட்டது. படுத்த படுக்கை ஆகி விட்டார். ஏறக்குறைய இரண்டு மாதம் ஆஸ்பத்திரி வாசம். இப்போது வீட்டில் படுக்கையில். இன்னும் ஒரு இரண்டு மாதம் ஆகலாம், அவர் பூரண குணமடைய. நான் அவரை ஆஸ்பத்திரியிலும் சந்தித்தேன், பிறகு வீட்டிலும் பல முறை சந்தித்தேன்.

கேட்கலாமா, வேண்டாமா என நினைத்து நான் அவரை பார்த்து கேட்டேவிட்டேன்,

" நீங்க அந்த தியானத்தின் மேலேயும், அந்த மந்திரத்தின் மூலமும் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தீர்கள். ஏன் அந்த மந்திரமும், தியானமும் உங்களை விபத்திலிருந்து காப்பாற்ற வில்லை? நீங்கள் அந்த தியான வகுப்பிற்கு சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது. நீங்கள் போகாமல் இருந்தால், விபத்து ஏற்பட்டு இருக்காது அல்லவா?"

அதற்கு அவர் கூறினார் இப்படி,

" சார், அந்த காரை பார்த்தீங்கள்ள. எப்படிப்பட்ட மோசமான விபத்து. நான் இந்த தியானம் செய்ததால்தான் என்னால் உயிர் பிழைக்க முசிந்தது. இல்லாவிட்டால், நடந்திருப்பதே வேறு"

என்ன ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் பாருங்க!. உண்மைதான். " ஐய்யோ, இந்த மாதிரி நடந்து விட்டதே, அந்த தியான வகுப்பிற்கு சென்றதால் தானே விபத்து நடந்தது என நினைக்காமல்" அதையே எப்படி பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டார் பாருங்கள்.

எதையுமே நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.

====================================================

சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு லேட்டஸ்ட் லேப்டாப் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். சாதரணமாக ஆர்டர் செய்த ஒரு வாரத்தில் லேப்டாப் வந்து விடும். எனக்கு வரவில்லை. ஆன்லைனில் சரிபார்த்தால், வருவத்ற்கு இன்னும் 15 நாட்கள் ஆகும் என வந்தது. நான் சரி ஏதோ பிரச்சனை போல் என விட்டு விட்டேன். பிறகு 15 நாட்களாகியும் லேப்டாப் வரவில்லை. பின்புதான் எனக்கு லேசாக கோபம் வர ஆரம்பித்தது. எனக்கு கோபம் வந்த காரணம், கம்ப்யூட்டர் தாமதமானது கூட இல்லை, அதைப்பற்றி அந்த நிறுவனம் எனக்கு எந்த ஒரு தகவலும் அனுப்பவில்லை என்பதுதான். உடனே அந்த நிறுவனத்துக்கு போன் செய்து விசாரித்தபோது, ஏதோதோ காரணம் சொன்னார்கள். "உங்களுக்கு நாங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், நீங்கள் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்துவிடுங்கள்" என்றார்கள்.

எனக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. நான் கூறினேன், " நான் கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்ய மாட்டேன். நான் உங்கள் நிறுவன மேல் அதிகாரியிடம் முறையிடுவேன். ஒரு வேலை அவர் சொல்லும் காரணம் எனக்கு சரியாகப்பட வில்லையென்றால், கன்சுயூமர் கோர்ட்டுக்கு செல்வேன்"

உடனே அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசினார். பல காரணங்களைச் சொன்னார். நான் அனைத்தையும் கேட்டுவிட்டு, " எல்லாம் சரி, நீங்கள் சரியாக திட்டமிடாததால் இந்த குழப்பம். எனக்கு ஒரு மாதம் ஆகியும் கம்ப்யூட்டர் வராதது ஒரு குறையாக உள்ளது" என்றேன்.

உடனே, " உங்களுக்கு கம்ப்யூட்டருடன் ஒரு பிரிண்டரும் (three in one - printer, copier & scanner) தருவதாக உள்ளோம். அதனால் தயவு செய்து கோபம கொள்ள வேண்டாம்" என்றார். சொன்ன தேதியில் லேப்டாப் வரவில்லை. நண்பர்களிடம் சொன்னதற்கு, " இதை இப்படியே விடாதீர்கள், மீண்டும் ஏதாவது காம்பன்சேசன் கேளுங்கள்" என்றார்கள்.

நான் மீண்டும் அவர்களிடம் பேசினேன். இந்த முறை நான் தாமதத்திற்காக காம்பென்சேசன் கேட்டேன்.

முடிவில் சென்ற ஞாயிறு லேப்டாப் வந்தது, 5000ரூபாய் மதிப்புள்ள பிரிண்டருடனும், 3000ரூபாய் மதிப்புள்ள கேரி பேக்குடனும். நான் அவர்களிடம் காரணம் கேட்டதால் மட்டுமே அவைகள் கிடைத்தன. Only Crying baby will get milk என்பதை உணர்ந்தேன்.

இன்னும் இரண்டு மாதம் தாமதமாக வந்திருந்தால், ஒரு வேளை இன்னொரு லேப்டாப் ஓசியில் கிடைத்திருக்குமோ?

====================================================

Jul 6, 2009

உடல் ஆரோக்கியமாக இருக்க.......


"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்"

என்னை இந்த வார நட்சத்திர பதிவராக்கிய திரட்டி.காமிற்கு என் நன்றி.

இது என்னுடைய 50வது பதிவு. 50 வது பதிவு திரட்டி.காமின் நட்சத்திர பதிவாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு காரணமான எனது அனைத்து தெய்வங்களையும், என் குரு வேதாத்திரி மகரிஷி அவர்களையும் இந்த நேரத்தில் வணங்கி என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் குருவை எப்போதிலிருந்து வணங்க ஆரம்பித்தேன்?. ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒரு நாள் எனக்கும் என் பாஸுக்கும் ஒரு விசயத்தில் ஒரு சின்ன விவாதம் நடந்தது. நான் சிறிது கோபமானேன். வேலை முடிந்து ரூமிற்கு சென்ற நான் அந்த விசயத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் இரவு ஒரு 8 மணிக்கு சாப்பிட கூப்பிட்டார்கள். சாப்பிட போன நான் ஒன்றுமே பேசாமல் வருவதை கவனித்த என் நண்பன், " ஏண்டா என்னாச்சு?" எனக்கேட்க, நான் நடந்த விவரங்களை சொல்ல ஆரம்பித்தேன். அப்படியே முழு டென்சனுடன், சொல்லிகொண்டே நடந்து போய்க்கொண்டிருந்த நான், திடீரென மயக்கமாக உணர்ந்தேன். நல்ல வேலை கீழே விழவில்லை. அவன் தோளை பிடித்துக்கொண்டு ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு தெரிந்தது, என் தலை சுற்றியதால் அப்படி ஆனது என்று. பிறகு சமாளித்து சாப்பிட்டுவிட்டு மெதுவாக நடந்து ரூமிற்கு வந்து விட்டேன். அடுத்த நாளும் அதே போல் இருக்க, உடனே அருகில் உள்ள ஒரு டாக்டரை பார்க்க சென்றேன்.

என்னை பரிசோத்தித்த அந்த டாக்டர், " உனக்கு BP அதிகம் உள்ளது, அதனால் BP மாத்திரை சாப்பிட வேண்டும்" என்று சில மாத்திரைகள் கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு படுத்து அடுத்த நாள் எழுந்தால் என்னால் நடக்க முடியவில்லை. கொண்டு தள்ளுகிறது. ஏதோ செய்வது போல் தெரிகிறது, ஆனால், என்னவென்று என்னால் உணரமுடியவில்லை. நண்பர்களிடம் கூறியதற்கு, எதற்கும் "நீ இன்னொரு டாக்டரை பார்த்துவிடு" எனக்கூறினார்கள். பிறகு வேறு ஒரு டாக்டரிடமும் சென்றேன். அவர் என்னை பரிசோதிக்கும் போதும் அதே போல் BP ஏறியது. பிறகு டாகடர் என்ன நடந்தது? என என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்தார். நடந்தது எல்லாம் கூறினேன். பிறகு ஒரு முப்பது நிமிடம் கழித்து BP செக் செய்தால் நார்மலாக உள்ளது. பின்புதான் அவர் கூறினார்,

" உங்களுக்கு வந்திருப்பது BP இல்லை. ஏதோ ஒரு விசயத்தினால் ஏற்பட்ட டென்சனே BP உடனே ஏறியதற்கு காரணம். அதே சமயம் இதே போல் BP ஏறுவதும் இறங்குவதும் நல்லதல்ல. பின் நாளில் ஒரு வேலை நீங்கள் அதிகம் கோபமுற்றால், BP அதிகமாக ஆகும் பட்சத்தில் கைகால் விளங்காமல் போக வாய்ப்பு உள்ளது. உடனே அந்த BP மாத்திரையை நிறுத்தி விடுங்கள். நான் சொல்லும் மருந்தை தினமும் பயன் படுத்துங்கள்" என்றார்.

" என்ன மருந்து சார்?" எனக் கேட்டேன்.

" வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை (SKY) என்ற ஒரு அமைப்பு உள்ளது. அங்கு சென்று தியானம் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து. வேறு எந்த டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டாம்" என்றார். அந்த நல்ல டாக்டரின் பெயர் டாக்டர் ரமணி என நினைக்கிறேன். ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் உள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த நாள் நானும் என் யோகா குரு நண்பர் பாலசுப்ரமணியனும் (தற்போது சவுதி அரேபியாவில் பணி புரிகின்றார்), மனவளக்கலை மையம் சென்றோம். அங்கே மூன்று விதமான பயிற்சி கொடுத்தார்கள்:

01. மனதிற்கு - தியானம் (ஆக்கினைத்தவம், சாந்தி யோகம், துரியம், துரியாதீதம்)
02. உயிருக்கு - காயகல்பம்
03. உடம்பிற்கு - எளிய முறை உடற்பயிற்சி

முழுமையாக கற்றுக்கொண்டேன். உடனே மலேசியா வரவேண்டி இருந்ததால் ஆசிரியர் பயிற்சி என்னால் முடிக்க முடியவில்லை. 15 வருடமாக தொடர்ந்து அனைத்தையும் செய்து வருகிறேன். எந்த குறையும் இல்லை. சந்தோசமாக உணர்கிறேன். உடல் எப்போதுமே ஆரோக்கியமாகவே உள்ளது. சுறு சுறுப்பாக உள்ளது. மற்ற அமைப்புகள் போல் அவர்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வெறும் 2 ரூபாய்தான் அப்போது நன்கொடையாக பெற்றார்கள். இப்போது எவ்வளவு எனத்தெரியவில்லை.

இதில் முக்கியமான செய்தி என்ன வென்றால் அதன் பிறகு எனக்கு தலை சுற்றவும் இல்லை, BP வரவும் இல்லை, நான் டாகடரிடம் செல்வதும் இல்லை. இதை நான் சொல்லும்போது சிலர் நம்பாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளது. சில விசயங்களை பிறர் சொல்லி தெரிவதை விட, தாங்களே அனுபவித்து பார்த்தால்தான் அதன் சுகம் தெரியும். நான் அனுபவித்ததால், அனுபவித்துக்கொண்டிருப்பதால் கூறுகிறேன்.

தயவு செய்து, இதை படிக்கும் நண்பர்கள், நம்பிக்கையுடன் அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்துக்கு சென்று முடிந்தால் பயிற்சி எடுத்து நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தனி மனிதனின் அமைதியும் சந்தோசமுமே, உலக அமைதிக்கும் முக்கியம் என்பதால், இதை இங்கே கூறுகிறேன்.

"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்"

Jul 5, 2009

பின்னூட்டங்கள் பற்றி.....

நான் பதிவுலகத்துக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. ஏறக்குறைய 48 பதிவுகள் முடித்துவிட்டேன். இது 49வது பதிவு. நிறைய நண்பர்கள் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள்........? அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன? ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிக்காமல் சாதரணமாகவே படுத்து யோசித்து பார்த்தேன்.

பிரபலமான பதிவர்களுக்கு எப்படியும் ஒரு 50 நபர்களாவது கமண்ட் எழுதுகிறார்கள். அவர்கள் எவ்வளவு நாள் கழித்து வந்து எழுதினாலும், காத்திருந்து நிறைய விமர்சனங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் எழுதாவிட்டால், சில பேர் நீங்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை? எனவும் கேட்கிறார்கள். என்னை அல்ல, அந்த பிரபல பதிவர்களை!!. அப்படியென்றால், அவர்களின் எழுத்து எந்த அளவிற்கு வாசகர்களை கவர்ந்து இருக்க வேண்டும்? அதன்பின்னே எத்தனை உழைப்பு இருக்க வேண்டும்? அவர்கள் போல் நிறைய எழுதி, நன்றாக எழுதி நிறைய நபர்களை படிக்க வைக்க வேண்டும் என்றும், நிறைய பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என்றும், இந்த கணத்தில் நான் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்.

அதே போல நமது மக்களும் ஏன் புதிதாக வருபவர்களை ஊக்குவித்து நிறைய கமண்ட் எழுதமாட்டேன் என்கிறார்கள்? எனத்தெரியவில்லை. பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை? இந்த சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. படித்து முடித்தவுடன் நண்பர்கள் ஒரு நான்கு பேர் ஒரு வேலைக்கான நேர்காணல் சென்று இருந்தோம். அப்போது என் நண்பனின் நேர்காணல் முடிந்தவுடன் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்,

" உங்களுக்கு எத்தனை வருடம் அனுபவம் உள்ளது?"

" நான் இப்போதுதான் படிப்பு முடித்தேன் சார். இன்னும் அனுபவம் எனக்கு இல்லை"

" நாங்கள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை தருவோம்"

உடனே என் நண்பனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் உடனே அந்த அதிகாரியிடம் சண்டைக்கு போய் விட்டான்.

" சார், முன் அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வேலை என்றால், நாங்கள் என்றைக்கு வேலைக்கு செல்வது? எங்களுக்கும் வேலை குடுத்தால் தானே நாங்களும் முன் அனுபவம் பெற முடியும்" என கேட்டு ஒரே சண்டையாகிவிட்டது.

இதை எதற்கு இங்கே கூறுகிறேன் என்றால், எல்லா பிரபல பதிவர்களுமே ஒரு காலத்தில் சாதாரண பதிவர்களாய் இருந்தவர்கள்தானே? மக்கள் குடுத்த பின்னூட்ட ஊக்கத்தினால்தானே அவர்களால் நல்ல நல்ல பதிவுகளை தர முடிந்தது.

நான் முன்பெல்லாம், என் பதிவுகளை மற்றவர்கள் படித்தால் மட்டும் போதும், பின்னூட்டம் பற்றியெல்லாம் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நண்பர்களின் பின்னூட்டம் வரும்போது ஏற்படும் சுகமே தனிதான். அது திட்டாக இருந்தாலும், பாராட்டாக இருந்தாலும்.

அதே சமயம் இன்னும் ஒரு உண்மையையும் நேற்றுதான் நான் உணர்ந்தேன். என்ன அது?

நான் எத்தனை பேருக்கு பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்?

நானும் மேலே சொன்னமாதிரியே நடந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். நான் பின்னூட்டம் எழுதியதே மிகவும் குறைவு. அதிலும் நான் பின்னூட்டம் எழுதியது பிரபல பதிவர்களுக்கு மட்டுமே? நானே இவ்வாறு இருந்துவிட்டு நான் எப்படி மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்க முடியும்? எதனால் அந்த தவறு ஏற்பட்டது? என்று தெளிவாக யோசித்தால், இரண்டு விசயம் தெரிந்தது:

01. நான் பின்னூட்டமிடும் நேரங்களிலும் அதிக பதிவுகளை படித்திருக்கிறேன்.

குறைந்த பட்சம் "மி த பர்ஸ்ட் அல்லது ரிப்பீட்டேய்" யாவது போட்டுருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.

02. பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால், நம்மீது அவர்கள் கவனம் விழும் எனவும் நான் நினைத்திருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட.

ஆனால், நான் இப்போது நினைப்பது போல் தானே, வளர்ந்து வரும் பதிவர்களும் நினைப்பார்கள். பின்னூட்டங்களை விரும்பாத மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டா என்ன? ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டும் காரணமல்ல, சரியான நேரத்தில் மற்றவர்களால் அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் ஒரு முக்கிய காரணம்.

அதனால் இந்த பதிவு உலகத்திற்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இன்றிலிருந்து நான் படிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய விமர்சனங்களை எழுதப்போகிறேன்.

என்னுடைய பதிவுகளுக்கு? அது உங்கள் இஷ்டம்!!!!

Jul 1, 2009

இனிய தோழிக்கு!

பிரியமானவளே!
திடீரென ஒரு நாள்
பிடித்திருக்கிறதென்றாய்,
எதை? என்றேன்
என் எழுத்துக்களை என்றாய்.

பார்க்கவேண்டுமென்றாய்
படத்தை அனுப்பினேன்
பிடித்திருக்கிறதா? என்றேன்,
பதில் சொல்லாமல்
நீ மொளனமானாய்.

கலக்க வேண்டுமென்றாய்
கலகம் வருமென்றேன்
உன் உடம்பில்லையென்றால்
உயிரைவிடுவேன் என்றாய்,
நான் மொளனமானேன்.

பிரியமனமில்லாமல்
பிரிந்து சென்றாய்
தொலைபேசியை
தொல்லை பேசியாக்கினாய்.

வீட்டிற்கு வந்தாய்
நல்ல வேலையிலிருக்கும்
என் தம்பியை பார்த்தவுடன்
நான் வேலையற்றவன்
என்றாய், தமையனை விட
கருப்பு என்றாய்.

சூரியன் சுட்டெரிக்கும்
நாட்டின் தேசிய நிறம்
நான் என்றேன்
தம்பி மட்டும் சிகப்பு
எப்படி என? குடும்ப
ஆராய்ச்சி செய்தாய்.

ஏண்டி கல்யாணத்திற்கு
தேவை சிகப்பு கலரா
இல்லை
வெள்ளை மனமா?

திடீரேன விவாகரத்து
கேட்கின்றாய்?
அடி, கூறுகெட்டவளே?
கல்யாணம் ஆனால் சரி!
உன் மேல உள்ள
காதலுக்கு எப்படிடி
விவாகரத்து தருவது?????

- இந்த கவிதை (புதுக்கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொண்டால்) யாருக்கு என கேட்பவர்களுக்கு, வடிவேலு ஸ்டைலில் "யாருக்கோ"