Jun 30, 2009

விவாகரத்து ஏன்?

எந்த சம்பவமுமே நம் வாழ்விலோ இல்லை, நமது உறவினர்கள் வாழ்விலோ நடைபெறாதவரை நமக்கு அதன் வலி தெரிவதில்லை. எனக்கும் அப்படித்தான், விவாகரத்தைப் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லாமல் இருந்தேன் ஒரு வருடத்துக்கு முன்பு வரை. ஆனால், நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு அந்த வார்த்தையை கேட்டாலே குடும்பத்தினர் அனைவருக்குமே ஒரு கிலி ஏற்படுகிறது.

உண்மையாகவே தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலையில் விவகாரத்து சட்டம் என்பது மிகவும் தேவையானதே. ஆனால் நடப்பது என்ன? கல்யாணம் ஆன ஆறு மாதத்திற்குள் எனக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அவளை பிடிக்கவில்லை என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். குடும்பமே முன்னின்று, ஊர் உலகத்தை எல்லாம் கூட்டி, நிறைய செலவு செய்து, எல்லார் முன்னாடியும் திருமணம் செய்து, ஒரு ஆறு மாதம் வாழ்ந்துவிட்டு பிடிக்கவில்லையென்றால், என்ன நியாயம் இது? கல்யாணம் என்பது என்ன, காய்கறி வியாபாரமா என்ன? வேண்டாம் என்றால் திருப்பி கொடுக்க?

அதுவும் இல்லாமல், இப்போ தமிழ் நாட்டில், ஒரு பெண் குடும்ப நல கோர்ட்டில் கேஸ் கொடுத்தால், அவ்வளவுதான். அதிலும் "வரதட்சணை" என்ற ஒரு வார்த்தையை சேர்த்து விட்டால் அவ்வளவுதான். மொத்த குடும்பத்தையும் அள்ளிக்கொண்டு போலிஸ் ஸ்டேசனில் வைத்துவிடுகிறார்கள். அதுவும் வெள்ளி இரவு கைது செய்தால் அவ்வளவுதான். சனி, ஞாயிறு போலிஸ் ஸ்டேசன் வாசம்தான். உண்மையாகவே வரதட்சணை கேட்டிருந்தால், அவர்களை கைது பண்ணுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், வரதட்சணை என்பதை ஒரு ஆயுதமாக அல்லவா பயன்படுத்துகிறார்கள்!

பையனோ, பெண்ணோ செய்யும் தவறுக்கு, எதற்காக மொத்த குடும்பமும் போலிஸ் ஸ்டேசன் செல்ல வேண்டும். வயசான பெற்றோர்கள் எல்லாம் செய்யாத தவறுக்கு ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? நல்ல சட்டத்தை ஏன் தவறாக பயன் படுத்துகிறார்கள்.ஒரு முறை போலிஸ் ஸ்டேசன் சென்று வந்தால் அவர்கள் கட்டிக்காத்து வந்த குடும்ப கவுரவம் என்ன ஆவது? அத்ற்கு அப்புறம் அவர்கள் எப்படி ரோட்டில் தலை காட்டுவது? எப்படி தன்மானத்துடன் வாழ முடியும்.

பிடித்துதானே கல்யாணம் செய்துகொள்கிறார்கள், பின் ஏன் பிரிகிறார்கள்? ஆண்கள் முறைப்படி பிரிந்தால் மறுமணம் செய்து கொள்ள முடிகிறது. ஆனால், விவாகரத்து ஆன பெண்ணை எந்த ஆண் மறுமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள்? அப்படியே கல்யாணம் செய்து கொண்டாலும் ஏன் அவர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் போகிறது?

எனக்கு தெரிந்த அந்த உறவினர் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விசயத்திற்காக விவாகரத்துக்கு போய், அந்த மொத்த குடும்பமும் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். ஒரு ஆறு மாத காலம் அந்த குடும்பம் அடைந்த வேதனையை வார்த்தைகளால் என்னால் விளக்க முடியவில்லை. ஒரு தனி மனிதன் பண்ணும் தவறுக்கு மொத்த குடும்பமும் ஏன் பாதிக்க பட வேண்டும்? விவாகரத்துக்கு இங்கே முக்கியமான காரணமாவது மூன்று விசயங்கள்தான் என நான் நினைக்கிறேன். ஒன்று வரதட்சணை, இரண்டு ஈகோ, மூன்றாவதுதான் செக்ஸ் சம்ந்தபட்ட பிரச்சனை.

முதல் பிரச்சனைக்கு கோர்ட்டுக்கு செல்லலாம், மூன்றாவது பிரச்சனைக்கு டாக்டரிடம் செல்லாம். ஆனால், இரண்டாவது பிரச்சனைக்கு எங்கு செல்வது?. ஒரே படிப்பு தகுதியோ அல்லது வேலை தகுதியோ உள்ள இருவர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனைதான்.

என்னை பொறுத்தவரை, திருமணத்திற்கு முன் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். பெண்ணையோ இல்லை ஆணையோ தேர்வு செய்யும்போது தகுதியானவரை செல்க்ட் செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. அப்போது அப்பா சொன்னார், இல்லா அம்மா சொன்னர்கள் என்பதற்காக நாம் பிடிக்காத பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், முடிவு செய்து விட்டால், மாறக்கூடாது. கடைசிவரையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.

கல்யாணம் ஆனவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துதான் போக வேண்டும். விட்டு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். அவ்வாறு சண்டைகள் இருந்தால்தான் வாழ்க்கையே. அதை அனுபவித்து வாழ பழகிகொள்ள வேண்டும். நிறைய பேர் இந்த பாழாய்போன சினிமாவை பார்த்து கெட்டு போகிறார்கள். சினிமா வாழ்க்கை வேறு, இயல்பு வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் இனி எங்களால் வாழ முடியாது என நினைத்தால் கோர்ட்டுக்கு போகலாம் தப்பே இல்லை. ஆனால், தயவு செய்து குடும்ப உறுப்பினர்களை கோர்ட்டுக்கு இழுக்காதீர்கள் அவர்கள் தப்பு செய்யாத பட்சத்தில்.

தயவு செய்து கோர்ட்டுக்கு போகும் முன் பல முறை யோசியுங்கள். ஒரு முறை விட்டு விட்டால் அதே வாழ்வு கிடைக்காதா என ஏங்கும் நிலை நிச்சயம் வரும். அப்போது நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு அது கிடைக்காமல் போகலாம்.

உறவினரின் நிலையை நினைத்து மிகவும் நொந்து போன நிலமையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

Jun 26, 2009

பெண் குழந்தைகள் என்றால் மட்டமா?.....
2000 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஒரு நாள். நான் விடுமுறையில் இந்தியாவில் இருந்தேன். மாமியார் வீட்டிலிருந்து போன். என் மனைவிக்கு வைத்து வலி ஏற்பட்டு விட்டதாகவும், ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள். உடனே நானும் என் அம்மாவும் காரில் வேக வேகமாக திருவாரூர் சென்றோம். நாங்கள் சென்றபோது ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். என்ன? என்று கேட்டபோது, சாதாரண வலிதான், குழந்தை பிறக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்றார்கள். எனக்கு ஒரே எரிச்சல். என்னுடைய விடுமுறையோ முடியப் போகிறது. அதனால், எரிச்சலில் "அடுத்த முறை வலி வந்தவுடன், குழந்தை பிறப்பதற்கான வலியா என டாக்டரிடம் கேட்டு விட்டு போன் செய்யுங்கள்" என கோபமாக சொல்லி விட்டு வந்து விட்டேன். ஒரே டென்சன். குழந்தை பிறந்த பாடில்லை. அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் எல்லாருமோ, இந்த டாக்டர் அதிகம் 'சிசேரியன்' தான் செய்வார் என்றார்கள். அதனால் வேறு அதிகம் டென்சன்.

ஜீன் 26ம் தேதி காலை மீண்டும் போன். ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்றும் கூறினார்கள். எனக்கு டென்சன் ஆகிவிட்டது. உடனே பூஜை அறைக்குள் நுழைந்தவன் வெளியே வரவே இல்லை. ஆண்டவனிடம் இரண்டு வேண்டுதல்களை வைத்தேன். ஒன்று, சுகப்பிரசவம் ஆக வேண்டும், இரண்டு, ஆண் குழந்தை பிறக்க வேண்டும். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மாமியார் போன் பண்ணினார்கள். சுகப் பிரசவம் ஆகி விட்டதாகவும், பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறினார்கள். நான் ஒன்றும் பேசாமல் போனை கட் செய்து விட்டேன். என் அப்பா ஓடி வந்து, " கண்ணு வாழ்த்துக்கள்டா" என்று சொல்லி சாக்லெட் கொடுத்தார்கள். நான் சாக்லேட்டை வாங்கி தூக்கி எரிந்து விட்டேன். கோபம். ஆண் குழந்தை பிறக்க வில்லையே என்று. எல்லோரும் சமாதான படுத்தினார்கள். அந்த மன நிலை சிறிது மாறியதும் குழந்தையை பார்க்க திருவாரூர் சென்றேன். என் மனைவிக்கு முகம் எல்லாம் சந்தோசம், ஆனால், எனக்கு??

பிறகு நான்கு நாட்களில் மலேசியா வந்துவிட்டேன். பிறகு 4 மாத குழந்தையாக ஆனவுடன் மனைவியையும், குழந்தையையும் கூட்டி வந்தேன். பிறகு குழந்தையின் அழுகை, சிரிப்பு, விளையாட்டு எல்லாம் பார்த்து பிடித்து போய், அவள் கூடவே விளையாண்டு, அவள் கூடவே சாப்பிட்டு... அதெல்லாம் சுகமான தருணங்கள். பிறகு நான் இவள் பெண் குழந்தை என்பதை மறந்து, என் குழந்தை என்று சந்தோசப்பட்டு குதித்தேன். பிறகு நான்கு வயதில் LKG சேர்ந்து, இன்று நான்காவது முடித்து ஐந்தாவது போகப்போகிறாள்.

படிப்பில், பாட்டில், நாட்டியத்தில் என அனைத்திலும் முதலாவதாக வந்து என்னை எப்போதும் சந்தோசத்தில் வைத்திருக்கிறாள். அவள் படிக்கும் இண்டர்நேஷனல் பள்ளியில் அவள் வகுப்பில் அவள் தான் என்றும் சிறந்த மாணவி ( Outstanding Student).

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் பெண் என்னை பார்த்து கேட்டாள்:

"ஏன் டாடி, நான் பிறந்தோன என்னை உங்களுக்கு பிடிக்கலையாமே? நான் பெண்ணா பொறந்துட்டேனு வருத்தமாமே? சாக்லேட்டை தூக்கி எரிஞ்சீங்களாமே?"

எனக்கு என்னை யாரோ ஓங்கி பளார் என்று அறைந்தார் போல் இருந்தது. என்ன பதில் சொல்வேன்? நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கிறேன். பெண் குழந்தை என்றால் மட்டமா? நான் அன்று நடந்து கொண்ட முறைக்காக வெட்கி தலை குனிகிறேன். நான் பெண்கள் மேல் நிறைய மதிப்பு வைத்திருப்பவன். எனக்கு பெண்கள் என்றால், ரொம்ப பிடிக்கும். ஆனால், குழந்தை என்று வரும்போது ஏன் அப்படி நடந்து கொண்டேன்? எத்தனை பேர் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இதில் ஆண் குழந்தை என்றால் எனன? பெண் குழந்தை என்றால் என்ன?

"மன்னிச்சுக்கடா செல்லம், தெரியாம அப்படி நடந்துகிட்ட்டேன்".

இன்று பிறந்த நாள் காணும் என் பெண் "தேவதர்ஷிணியும்", 01.07.2009 அன்று பிறந்த நாள் காணும் என் பையன் "வெங்கடேஷும்" பல சுகங்கள் பெற்று, நோய் நொடி இல்லாமல், எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ, எங்கள் குல தெய்வம் கொப்பாட்டி அம்மனையும், எல்லாம் வல்ல என் திருப்பதி ஏழுமலையானையும், சமயபுர மாரியம்மனையும், மலேசிய கெமாமன் மாரியம்மனையும் வணங்கி, 'வாழ்க', 'வாழ்க' என வாழ்த்துகிறேன்.

Jun 23, 2009

விகடனுக்கு நன்றி!!!

வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) நான் நடுவில் நின்றுகொண்டிருக்க சுற்றி பரிசல், வெண்பூ, கேபிள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.‘அவ்வ்.. பரிசல், உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ "26"‘.. வெண்பூ, உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ "32"‘.. கேபிள், உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ "94""ஆக, மொத்தமா சேத்து 152 பக்கமா... ச்ச்சீயேர்ஸ்..!"

ஹேப்பி விகடன் டே.! மேற்குறித்த நண்பர்கள் அனைவரும் குறித்த பக்கங்களை இந்த வார விகடனில் ஆக்ரமித்திருக்கிறார்கள். (யாரும் வாழ்த்துகள்னு பின்னூட்டம் போட்டீங்க.. பிச்சு..பிச்சு.! வாழ்த்து வாழ்த்துன்னு சொல்லி எழுதறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் ரொம்ப போரடிக்குது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாக்கலாம்.)

-இப்படி எழுதியிருந்தார் நண்பர் ஆதிமூலகிருஷ்ணன். அப்போது "91 ம் பக்கத்தையும் பாருங்க பாஸ்னு" கததனும் போல இருந்தது. ஆம் 91ம் பககத்தில் மெட்ராஸ் எடிசனில் என் கதை வெளியாகி இருந்தது. இந்த நிமிடம் வரை நான் புத்தகத்தை கையால் வாங்கி பார்க்கவில்லை. என் COO சென்ற வாரம் மலேசியா வந்தபோது ஆனந்த விகடனை வாங்கி வரச்சொன்னேன். ஆனால், அவர் வாங்கி வரவில்லை. காரணம் கேட்டதற்கு, அவர் கூறினார்,

" மொத்தம் ஐந்து கடைகளில் கேட்டேன். புத்தகம் விற்று விட்டதாக கூறினார்கள்"

எனக்கு ஒரே சந்தோசம். நம் கதை வந்ததால் அனைத்து விகடனும் விற்று விட்டது என்று. ஆனால் உண்மையான காரணம் வேறு. நயன்தாரா பிரபுதேவாவின் காதலை பற்றி செய்தி வந்ததால் அனைத்தும் விற்று விட்டது.

என் கதையினை வெளியிட்டதற்காக ஆனந்த விகடனுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நிறைய நண்பர்கள் படிக்காததால், நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் 17.06.09 ம் தேதி வெளிவந்த "மாமா ப்ளீஸ்" என்ற கதையை இங்கே பிரசுரிக்கிறேன்.

கார் அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் வாசலில் நின்றபோது ஒன்றும் புரியவில்லை கீதாவுக்கு. ஆச்சர்யத்துடனும் சந்தேகத்துடனும் அருணை பார்த்தாள்.

" என்னங்க இங்கே?"

" சும்மாதான்... உள்ள வா"

அங்கு இருக்கும் பெற்றோர்கள் இல்லாத ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எல்லாம் கீதாவிடம் காண்பித்தான் அருண். அமைதியாக வந்த கீதா கடைசிக் குழந்தையப் பார்த்து முடித்ததும், எதுவும் சொல்லாமல் வேகமாக வந்து காரில் ஏறிக்கொணடாள். பெருமூச்சு விட்டபடி தானும் காரில் ஏறிய அருண், " ஸாரிடா... உன்கிட்ட சொல்லியிருந்தா நீ இங்கே வந்திருக்க மாட்ட. அதான் சொல்லலை!"

கீதா ஒன்றும் பேசவில்லை. முகத்தில் சோக ரேகைகள். கண்கள் கலங்கி இருந்தன. கார் மெதுவாக நகர்ந்துகொண்டு இருந்தது.

" நமக்குக் கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. நான்தான் காரணம்னு எனக்குத் தெரியும். உங்ககிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றேன். முடியாதுங்கறீங்க.ஆனா, நான் மட்டும் யாருக்கோ பொறந்த குழந்தையைச் சொந்தக் குழந்தையா நினைச்சு வளர்க்கணும்னு நினைக்கறீங்க. யாரோ பெத்து, அவங்களே வேண்டாம்னு உதாசீனப்படுத்தின குழந்தையை எப்படிங்க என்னால் முழு மனசோடு வளர்க்க முடியும்?" மென்மையான குரலில் கேட்டாள் கீதா.

" கீதா... இதே மாதிரி உங்க அம்மா - அப்பா நினைச்சிருந்தா?"

" என்ன சொல்றீங்க?"

" உங்க அப்பா சாகறதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு சொன்னதுனால, இவ்வளவு நாள் சொல்ல வேணடாம்னு இருந்தேன். உங்க அப்பா அம்மாவுக்குக் கல்யாணமாகி பன்னிரண்டு வருசமாகியும் குழந்தை பொறக்க்லையாம். ரொம்ப யோசனைக்குப் பிறகு, உன்னை அநாதை இல்லத்துலேர்ந்து தத்து எடுத்துருக்காங்க. அவங்க உன்னைத் தத்து எடுத்து வளர்க்கலைன்னா... இப்படி அருமையான மனைவியா நீ கிடைச்சிருப்பியா?''

" அப்போ நான் அநாதையா"

" இல்லைடா, முதல்ல உனக்கு அப்பா - அம்மா இருந்தாங்க. இப்போ நான் இருக்கேன்!"

ன்று இரவு முழுக்க கீதாவின் கண்கள் அழுகையை நிறுத்தவே இல்லை.
மறுநாள் மீண்டும் அதே ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்றார்கள் கீதாவும் அருணும். அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாமே ஒரு கனவு போல அரங்கேறியது.

கோயிலில் 'புவ்வ்வ்' என்று உப்பிய கன்னத்துடன் கீதாவின் கைகளிலிருந்து சர்க்கரைப் பொங்கலை கவ்விக்கொண்டு இருந்தாள் நான்கு வயது ஹேமா. கீதா கண்கள் மூடி வேண்டிக்கொண்டு இருந்தாள்.

ருணும் கண்களை மூடி இருந்தான். ஆனால், அவனுடையது வேண்டுதல் அல்ல.

'ப்ளீஸ்... ஒரு நல்ல விஷயத்திக்காக உங்க மகள் கிட்ட நான் சொன்ன பொய்க்காக என்னை மன்னிச்சிடுங்க... மாமா!" என்ற மன்னிப்புக் கோரிக்கை அது!

Jun 21, 2009

"அப்பா" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்!

"அப்பா" என சொல்லும்போதே உடம்பு சிலிர்க்கிறது.

என் அப்பா 12 வயது வரை எனக்கு குரு, காலேஜ் முடிந்து வேலையில் சேரும் வரை வில்லன், ஆனால் இன்றோ ஹீரோவும் தெய்வமுமாய்.
எனக்கு ஒரு பத்து வயது இருக்கும். அடுத்த நாள் தீபாவளி. அப்பா ட்ரெஸ் வாங்கி வருவார் என வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறேன். இரவு வருகிறார். ட்ரெஸை காண்பிக்கிறார். என் மூஞ்சி போன போக்கை வைத்து என்னை புரிந்து கொள்கிறார். உடனே அந்த இரவிலும் கிளம்புகிறார், அடுத்த ட்ரெஸ் வாங்க.

பத்தாவதில் அதிக மார்க வாங்கியும், நான் காமர்ஸ் குரூப் எடுக்க ஆசைப்படுகிறேன். எல்லோரும் டிப்ளமோ சேர்கிறார்கள். என்னையும் வற்புறுத்துகிறார்கள். நான் மறுக்கிறேன். அப்பா கூப்பிடுகிறார்,

"ஏம்பா, உனக்கு டிப்ளமா பிடிக்கலையா"

"இல்லைப்பா"

"ஏன்?"

"எனக்கு ஒயிட் காலர் ஜாப் பார்க்கணும்னு ஆசை. பிகாம், எம்காம், ICWA, ACS, CA அப்படி ஏதாவது படிக்கலாமுனு"

"சரிப்பா, உனக்கு எது புடிக்குதோ, அதைப்படி. ஆனா, எது படிச்சாலும் அதுல பெரியா ஆளா வரப்பாரு"

வயது 20. கிரிக்கட், பத்திரிக்கை, படிப்புனு இருந்த காலம். கிரிக்கட் விளையாட அதிக நேரம் செலவானபோது, ஒரு நாள் அப்பா கூப்பிட்டார்,

" தம்பி, கிரிக்கட் விளையாடு. வேணாம்னு சொல்ல. ஆனா, படிப்பா, பத்திரிக்கையா, கிரிக்கட்டானு என்னை கேட்டினா, படிப்புதான் சொல்லுவேன். எனக்கு எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கல. நானும் உங்களுக்கு ஒன்னும் சேர்க்கல. உனக்கு இருக்கும், இருக்க போகும் ஒரே சொத்து உன் படிப்புதான். பார்த்து நடந்துக்கோ"

என்ன ஒரு அற்புதமான அறிவுரை பாருங்க. அவர் மட்டும் அப்படி அன்னைக்கு சொல்லைனா, இன்னைக்கு நான் இப்படி இருக்க முடியுமா?

ஒரு முறை கல்லூரி படிக்கும்போது ட்ரெஸ் வாங்க பணம் கேட்டேன். அவர் குடுத்த பணம் எனக்கு பத்தவில்லை. சண்டை போட்டேன். என் கிட்ட அவ்வளவு பணம் இல்லைப்பா? என்றவர், வெளியில் போய்ட்டு வந்து விட்டு கேட்ட பணத்தை கொடுத்தார்.

அம்மாவிடம் கேட்டேன், " ஏதும்மா, அப்பாவுக்கு பணம்?"

"எங்காவது கடன் வாங்கி வந்திருப்பார்" என்றார்கள்.

அடுத்து வந்த ஒரு நாளில், நான் புது ட்ரெஸ்ஸை போடலாம் என நினைத்து, ரூமிற்கு சென்று எடுக்க போகையில், அப்பாவை பார்க்கிறேன். அவர் பனியன் முழுவதும் ஓட்டை. அதை போட்டு வெள்ளை சைட்டை போட்டு ஆபிஸ் செல்கிறார். அம்மாவிடம் கேட்கிறேன்,

"ஏம்மா, அப்பா ஒரு நல்ல பனியன் வாங்க கூடாதா?''

"இதை, நீ பணம் பத்துலனு அப்பாட்ட சண்ட போட்ட பாரு, அப்ப கேட்டுருக்கணும்"

அதற்கப்புறம் அந்த சட்டை போடும்போதெல்லாம் அதே நினைவு. இன்று எத்தனை உடைகள், எத்தனை பனியன்????

எனக்கு நன்றாக நினைவுள்ளது. 2001 நவம்பர் 10 ம்தேதி சனிக்கிழமை மதியம் ஊரிலிருந்து போன். மாமாதான் போன் பண்ணினார்.

"என்ன மாமா?"

"உடனே கிளம்ப முடியுமா?"

"ஏன்?"

"கிளம்பு, ரவி?"

"அதான், ஏன் மாமா?"

"அப்பா, நம்ம விட்டு போய்ட்டாரு"

எனக்கு முன்பே இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் நான் அடைந்த வேதனை வார்த்தைகளால் விளக்க முடியாதது. உடனே கிளம்ப வேண்டும். சனிக்கிழமை வேறு. இந்தியாவிற்கு டிக்கட் கிடைக்குமா? தெரியாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல், எங்கள் ஊரிலிருந்து பஸ்ஸில் கோலாலம்பூர் சென்றேன். இரவு 12 மணிக்கு டிக்கட் ஏஜண்ட் வீடு சென்றேன். டிக்கட்டை கொடுத்தவர் சொன்னார்,

"சார், எந்த பிளைட்லயும் டிக்கட் இல்லை. இந்தியன் ஏர்லைன்ஸ்ல டிக்கட் போட்டுருக்கேன். அந்த மேனஜர் கிட்ட சொல்லிருக்கேன். காலைல அலுவலகம் திறந்தோன அவர போய் பாருங்க"

"நன்றி" சொல்லிட்டு ஒரு வாடகை கார்ல ஏற்போர்ட் போறேன். இரவு 1 மணிக்கு ஏற்போட் அடைந்தேன். காலைல 8.30க்கு பிளைட். எங்க தங்கறது, எங்க தூங்கறது? தூக்கமா வரும். மனம் எல்லாம் சோகம். அழுகை. எப்போ விடியும் என்று காத்திருக்கிறேன். வீட்டிற்கு போன் செய்ய முடியவில்லை. அன்று என் கை தொலைபேசியில் இந்தியாவிற்கு நேரடியாக பேசும் வசதி இல்லை. அன்றுதான், முதல் முறை வெளி நாட்டில் வேலை செய்வதற்காக கதறி அழுதேன். சுதந்திரமாக என்னால் அழக்கூட முடியவில்லை. பாத்ரூம் சென்று அழுது அழுது வந்தேன். காலை 5 மணிக்கு ஏர்லைன்ஸ் ஆபிஸ் வாசலுக்கு சென்றேன்.
அவர் கூறினார், "சார், வெயிட் பண்ணுங்க 8 மணிக்குத்தான் சொல்ல முடியும், சீட் இருக்கா இல்லையா என்று"

அந்த நல்ல மனிதர் 8 மணிக்கு என்னை கூப்பிட்டார், " தம்பி, ஒரு வழியா உங்களுக்கு டிக்கட் போட்டுட்டேன். இன்னைக்கு பிளைட் இரண்டு மணி நேரம் லேட். எப்பவும் போற ரூட்டுல பிளைட் இன்னைக்கு போகாது, வேற ரூட்ல போறதால கூட ஒரு மணி நேரம் ஆகும். அதுவரை பாடிய வைச்சிருப்பாங்களா?"

விதிய நினைச்சு அப்படியே சரிந்து உட்கார்ந்தேன். இரண்டு மணி நேர தாமதத்துக்கு பிறகு பிளைட் கிளம்பி ஒரு வழியாய் மெட்ராஸ் போனது. கம்பனி மூலம் டாக்ஸி ரெடியாக இருந்தது.
டாக்ஸி டிரைவரிடம் சொன்னேன், " சார், அப்பா இறந்து ஒரு நாளைக்கு மேலே ஆகுது. நோய் தின்ற உடம்பு. நான் போறதுக்குள்ள எடுத்துட கூடாது. எங்க அப்பாவ நான் பார்க்கணும். நீங்க எனக்கு தெய்வம் மாதிரி, சீக்கரம் கூட்டிடு போங்க"

தெய்வம் என்னை சரியான நேரத்துக்கு கூட்டிச்சென்றார்.

போய் சேர்ந்தபோது இரவு மணி 8. எல்லா சம்பிரதாயமும் முடிந்து சுடு காட்டுக்கு சென்றோம். அன்றுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. என்ன சம்பாத்திது என்ன பயன். கடைசியில் ஆறு அடி இல்லை, இல்லை , அதுவும் எங்களுக்கு வெறும் 3 அடி சமாதிதான். அதற்கு தான் இவ்வளவு போட்டி, பொறாமை, அடிதடி. அத்தனையும்.

எல்லோருக்கும் நல்ல குருவாய், தெய்வமாய், தோழனாய், கண்டிக்கும்போது வில்லனாய், அப்பா அமைவது மிகவும் அறிது.

எனக்கு அந்த பாக்யத்தை ஆண்டவன் அருளினான்.

இன்று காலை என் பிள்ளைகள் எனக்கு "தந்தையர் தின வாழ்த்துக்கள்" சொல்லி, வாழ்த்து அட்டை கொடுத்தார்கள். அப்போது ஏற்பட்ட உணர்வுகளினால் எழுதப்பட்ட பதிவு இது.

Jun 19, 2009

நானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)

கீ போர்டின் இப்போதைய நிலமை


கீ போர்ட் வாங்கியபோது
====================
சிறு வயதிலிருந்து எனக்கு ஏதாவது ஒரு இசைக் கருவி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அப்போது அவ்வளவு வசதியும் இல்லை, நேரமும் இல்லை. எப்பவும் படி படி எனக்கூறியதால், என் ஆசை அப்படியே மனதிலேயே ஒரு ஓரத்திலே இருந்து கொண்டிருந்தது. நான் கல்லூரி படிக்கும்போது என் நண்பன் அனந்த நாரயணன் திருச்சி டவுண்ட் ஸ்டேசன் அருகே ஒரு ஆசிரியரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டான். எனக்கும் ஆசை ஆனால், என்னால் பல காரணங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 அக்டோபர் மாதம் ஒரு நாள் என் பெண் கோயிலில் பரத நாட்டியம் ஆடியபோது, நாம் கீ போர்ட் வாசித்து அவள் ஆடினால், எப்படி இருக்கும் என நினைத்து, இப்போது கீ போர்ட் கற்றுக்கொண்டால் என்ன எனத்தோன்ற, மலேசியாவில் என் ஊர் முழுவதும் தேடினேன், நல்ல ஆசிரியரை.

பத்து நாள் தேடலுக்கு பிறகு ஒரு இடத்தை கண்டுபிடித்து போய் பேசினேன். வாரத்திற்கு ஒரு நாள் தான் வகுப்பு, மாதம் 100 வெள்ளி பீஸ் என்றார்கள். நானும் ஒத்துகொண்டு அடுத்த நாளிலிருந்து வருவதாக கூறிவிட்டு சந்தோசமாக வீட்டிற்கு வந்தேன். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்றேன். ஆசிரியர் வெளியே சென்றிருந்தார். அந்த ஆசிரியையின் கணவர்தான் அந்த நிறுவனத்தின் முதலாளி. நான் வாயை மூடிக்கொண்டிருந்திருக்கலாம்.

நான் அவரிடம், " எத்தனை நாளில் நான் கீபோர்ட் நன்றாக வாசிக்க முடியும்" என்றேன்.
" ஹலோ, முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. நீங்க இங்க கத்துக்க போறது கீபோர்ட் இல்ல, பியானோ. பியானோ கத்துக்கிட்டாலே வீட்ல கீபோர்ட் நீங்களா வாசிக்கலாம்"
என்னோட மூளைக்கு அன்னைக்குத்தான் இந்த விசயம் தெரிய வந்தது. அடுத்த கேள்வி, " சார், ஒரு வாரத்துக்கு ஒரு நாள் கிளாஸ் போதுமா?" என்றேன்.

" முதல்ல ஒரு கிளாஸ்ல சொல்லித்தரத நல்ல படியா வாசிங்க. அப்புறம் கேளுங்க ஒரு நாள் போதுமா, போதாதனு"

இப்படியே எங்கள் பேச்சு நீண்டது. ஒரு மணி நேரத்துக்கு அப்புறமும் அவர் மனைவி வராததால், அடுத்த நாள் வரச்சொன்னார்.

அடுத்த நாள் சென்றேன், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, " உங்களுக்கு சொல்லித்தர எங்களுக்கு விருப்பம் இல்லை"

நான் " ஏன்?" என்றேன்.

காரணம் எல்லாம் சொல்ல முடியாது என்றார். எனக்கு மிகுந்த அவமானமும், எரிச்சலும் வந்தது. வந்த கோபத்தில் எப்படியும் நாம் கற்றுக்கொண்டு அந்த ஆள் முன்னாடி வாசித்துக்காட்ட வேண்டுமென முடிவெடுத்து அடுத்த நிறுவனத்தை தேடி ஓடினேன். அங்கும் வாரம் ஒரு நாள் தான் கிளாஸ். மாதம் 120 வெள்ளி. ஒவ்வொரு பியானோ புத்தகமும் 50 வெள்ளி.
ஆனால், ஒரு கண்டிசன் போட்டார் அந்த ஓனர். என்னவென்றால் அவரிடமே கீ போர்ட் வாங்க வேண்டும் என்று. உடனே 1200 வெள்ளி விலையுள்ள யமாகா கீபோர்ட், அதுக்கு ஸ்டாண்ட், முன் பணம், புத்தகத்துக்கு பணமுனு கிட்டத்தட்ட ஒரு 20000 ரூபாய் செலவு செய்தேன். நவம்பர் 2007ல் சேர்ந்தேன். ஒரு நான்கு மாதம் கழித்து பீஸை 150 வெள்ளி மாதத்துக்கு என்றார்கள். பிறகு 200 வெள்ளி என்றார்கள். ஒரு வெள்ளி 13.50 ரூபாய். அப்போ கணக்கு போட்டுக்கங்க. எவ்வளவு செலவாயிருக்கும் என்று.

எல்லா நோட்ஸும் ஆங்கில நோட்ஸ் வேறு. நான்கு மாதம் கழித்து ஒரு நாள் ஆசிரியரிடம் கேட்டேன்,

" எத்தனை நாளில் நான் கீபோர்ட் நன்றாக வாசிக்க முடியும்"

அவர் சொன்ன பதில்தான் என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது.

" அனேகமா, இன்னும் 8 வருசம் ஆகலாம்"

" என்ன மேடம் இப்படி சொல்லறீங்க?"

" ஆமா, சார் சின்ன பிள்ளைங்கன்னா, உடனே கற்றுக்கலாம். உங்க வயசுக்கு கொஞ்ச நாள் ஆகும்"

அன்னைக்கு விட்டவன்தான், இன்று வரை கீ போர்டை தொட முடியவில்லை. தினமும் அந்த கீ போர்டை பார்க்கும்போதெல்லாம், வேதனையாக உள்ளது.
இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட பாடம்:

01. சின்ன வயசில் ஏற்படும் ஆசையை கூடுமான வரை அந்த வயசிலேயே நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

02. எந்த விசயத்தை ஆரம்பித்தாலும், முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும்.

03. தினமும் பயிற்சி செய்ய வேண்டும் முழு கவனத்துடன்.

என்னை அந்த பியானோ வகுப்பில் சேர்த்துவிட்ட நண்பர் கேட்டார்,

" என்ன சார் பியானோ நல்லா வாசிப்பீங்களா இப்ப?"

" ம்ம்ம் வாசிப்பேனே, பியானோனு பேப்பர்ல எழுதி"

என்ன பண்ணறது.

ஆனால் எப்படியும் இந்த பிறவி முடிவதற்குள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பரிசல், கீபோர்ட் கத்துக்க போறாராம், அவருக்காக இந்த பதிவு.

Jun 18, 2009

மிக்ஸர் - 18.06.09

எதிலுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடாதுங்கற உண்மையை என்னோட கடந்த வார ஒரு அனுபவத்தின் மூலம் தெரிஞ்சுகிட்டேன். ஒரு விசயத்தில ரொம்ப எதிர்பார்த்து, அது சரியா நடக்கவில்லை என்றதும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். என்னால் எந்த விசயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. என்னால் எந்த பதிவும் எழுத முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். சரியாக ஐந்து நாட்கள். நரக வேதனை. என்ன காரணம் என்று யோசித்துப்பார்த்தேன். ஒரு உண்மை தெரிந்தது. சோகம், சந்தோசம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய மன நிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பழகிவிட்டால், எந்த ஒரு விசயமும் நம்மை பாதிக்காது. நான் அவ்வாறு நினைக்காமல், சந்தோசத்தை கொடுக்க போகும் அந்த நிகழ்வை மட்டுமே நினைத்ததால், என்னால் 'அந்த' சிறு சறுக்கலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த மனித வாழ்க்கை மிக அற்புதமானது. ஒவ்வொரு நிமிடமும் நாம் அதை அனுபவிக்க வேண்டும். இன்னொரு முறை இந்த வாழ்வு கிடைக்குமா என்று தெரியாது. அதனால், முடிவு செய்துவிட்டேன், ஒவ்வொரு நொடியையும் அதன் போக்கிலேயே விட்டு, சோகத்தை, சந்தோசத்தை ரசித்து அனுபவிக்க போவதென்று. இதுதான் சந்தோசம் என, ஏன் நாம் நமக்குள் ஒரு வரையரையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையுமே ஒரு சந்தோசத்துடனேயே பார்க்க பழகிக்கொள்ள போகிறேன். சோகம் ஏற்பட்டால் அந்த உணர்ச்சியையும் அனுபவிக்க போகிறேன்.
===============================================
நண்பர்களிடமிருந்து வரும் ஒரு சில மெயில்கள் எனக்கு பிடிப்பதில்லை. ஒரு நண்பர் எனக்கு ஒரு மெயில் இப்படி அனுப்பியிருந்தார். அது ஒரு கடவுளை பற்றிய பிரார்த்தனை மெயில்.

" படித்து முடித்தவுடன் உடனே குறைந்தது ஒரு பத்து பேருக்காவது பார்வேட் செய்து விடுங்கள். உங்களுக்கு மூன்று நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். அப்படி அனுப்பாமல் வைத்திருந்தாலோ அல்லது அழித்து விட்டாலோ, உங்களுக்கு மூன்று நாட்களில் ஏதேனும் கெட்ட நிகழ்வுகள் நடக்கும்"

இது மாதிரி வந்தால் உடனே அழித்துவிட்டு தான் மறுவேலை. சாமிக்கெல்லாம் வேறு வேலையில்லையா என்ன? எல்லோரும் சரியாக மெயில் அனுப்புகிறார்களா? என பார்ப்பதுதான் கடவுளின் வேலையா?

பல வருடங்களாக நான் இந்த மாதிரி வந்த எந்த மெயிலையும் பார்வேட் செய்ததில்லை. எனக்கு இது வரை ஒன்றும் ஆகவுமில்லை.

================================================

நாய்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஆவதில்லை. ஒரு முறை கோலாலம்பூரில் அதிகாலையில் வாக்கிங் செல்வதற்காக சாலையில் இறங்கி நடந்தேன். ஒரு இரண்டு நிமிட வாக்கிங் கூட ஆகி இருக்காது. நம்ப மாட்டீர்கள், ஒரு நான்கு நாய், கன்று குட்டிபோல என்னை சுற்று நின்று குறைக்கிறது. கடிக்கவும் இல்லை, என்னை விட்டு நகரவும் இல்லை. அந்த நிமிடத்தில் கூட எனக்கு கவுண்டமணி ஒரு படத்தில் இரவு முழுவதும் ஒரு நாய்க்கு பயந்து வீட்டிற்கு முன் மண்டியிட்டு சென்ற காட்சிதான் நினைவுக்கு வந்தது. உடனே சிரிக்க கூட முடியவில்லை. பயம், சிரித்தால் கடித்து விடுமோ என்று. சரியாக ஒரு பத்து நிமிடம் கழித்து ஒரு நண்பர் வந்து என்னை அப்படியே நிற்க சொல்லி மெதுவாக நாய்களின் உள்ளே ஊடுருவி என்னை காப்பாற்றினார். அப்பறம் அவரிடம் கேட்டேன், ஏன் இத்தனை நாய்கள் இங்கு?

அவர் கூறினார், " சார், இது பழைய கார் விற்கும் இடம் அதான். அவர்கள் பாதுகாப்பு கருதி அங்கே நாய்களை நிறுத்தி உள்ளார்கள். கடிக்காது கவலைப்படாதீங்க" என்றார். "கடிக்குதோ இல்லையோ, கன்னுக்குட்டி போல உள்ள நான்கு நாய்களுக்கு முன்னாடி இருந்து பாருங்க உங்களுக்கு தெரியும்" என்றேன். அவர் இவனை ஏண்டா காப்பாத்துனோம் என்பது போல பார்த்து விட்டு சென்றார்.

இது நடந்த மூன்றே மாதத்தில், எங்கள் தெருவில் இதே போல வாக்கிங் போனபோது, அதே மாதிரி நாய்கள், அதே நாய்கள் அல்ல, வேறு நாய்கள். நடுவில் மாட்டி, தப்பித்து........ அது ஒரு பெரிய கதை.

இப்போது நான் காரில்தான் வாக்கிங் போகிறேன், வீட்டிலிருந்து பார்க் வரை, பிறகு காலில் வாக்கிங் போகிறேன் பார்க்கில்.

==================================================

வாக்கிங் செல்பவர்களுக்கு ஒரு அறிவுரை. எப்போதும் பர்சில் பணம் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொதுதான் திருடர்களிடம் தப்பிக்கலாம். தனியாக செல்கிறீர்கள். வழிப்பறித் திருடனிடம் மாட்டிக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், பர்சில் பணம் இருந்தால் தப்பித்தீர்கள், இல்லையென்றால், அவ்வளவுதான்.

இது என் போலீஸ் நண்பர் எனக்கு கூறிய அட்வைஸ்.

===========================================================
மலேசிய ரோடுகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மலேசிய ரோடுகளில் கார் ஓட்டுவதென்பது ஒரு தனி சுகம். அவ்வளவு அருமையாக இருக்கும். சுற்றிலும் பச்சை பசேலென்று இயற்கை காட்சி. மலைகள். ஆகா, அற்புதமான அனுபவம். நான் அடிக்கடி எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் காரில்தான் செல்வேன். ஒரு முறை குடும்பத்துடன் எங்கள் ஊரிலிருந்து பினாங்கிற்கு காரிலே பயணம் செய்தோம். மொத்தம் ஒன்பது மணி நேர பயணம். நடுவில் இரண்டு இடத்தில் நிறுத்தினோம். அலுப்பே தெரியவில்லை. அதிக வேகமில்லை 120 கிமீ வேகம் தான். ஆனால், வழியில் ஏதேனும் விபத்தை பார்த்தால், வேகம் 90 கிமீ ஆக ஆட்ட மெட்டிக்காகாக ஆகி விடும்.

ஆனால், திருச்சியிலிருந்து திருவாரூர் செல்வதற்குள் நான்கு மணி நேரத்தில் நான் சோர்வடைந்துவிடுவேன். ஆனால் ஏதேனும் ஆக்ஸிடெண்ட் நடந்தால், உயிருக்கு ஒன்றும் ஆகாது, காயங்களுடன் தப்பித்து விடலாம்.

ஆனால், மலேசியாவில்.......?

அதனால கார் ஓட்டும்போது எல்லாரும் ஜாக்கிரதையா ஓட்டுங்க.

====================================================

Jun 14, 2009

அப்படியே மனசு இதமாயிடும்!!!

நேற்று எதிர்பார்த்த ஒரு விசயம் சரியா நடக்காததால கொஞ்சம் மன வருத்ததுல இருந்தேன். அந்த மாதிரி சமயங்களில் நான் அதிகம் விரும்பி செய்வது தனிமையில், பிடித்த பாடல்களை கேட்பதுதான். அப்படி நான் கேட்ட பாடல்தான் கீழே உள்ள பாடல்.

இந்த பாடலை பாடியவர்கள், டி.எம்.சொளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி. படம் தரிசனம். நான் அந்த படத்தை பார்த்ததில்லை. ஆனால், இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன். நான் கல்லூரியில் படித்த போது கோவா டூர் சென்றபோது, அந்த இனிமையான பீச் ரோடுகளில் பஸ்ஸில் சென்றபோது, என் நண்பன் ஜேசுதாஸ் பாட, நான் கேட்டு இன்புற்ற அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியவில்லை. மீண்டும் அந்த அனுபவம் நேற்று என் வாழ்வில்.

தலைவி, தலைவன அழைக்கிறா, எதுக்குனு நீங்களே பாருங்க:

இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ்மேலே இதழ் மோதும் அந்த
இன்பம் தேடுது எனக்கும்
இது மாலை நேரத்து மயக்கம்

தலைவனோட பதில் இப்படி:

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்
இது கால தேவனின் கலக்கம்

மீண்டும் தலைவியின் அழைப்பு:

பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன?
பசும்பாலைப்போலே மேனியெங்கும்
பழகிப்பார்த்தால் என்ன?

நம்ம தலைவர் ஞானி மாதிரி பதில் சொல்லுறார் பாருங்க:

உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தால் என்ன?
தினமும் ஓடி ஆடி ஓயும் முன்பே
உண்மை அறிந்தால் என்ன?

தலைவி:

உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவே தயக்கம் என்ன?

தலைவன்:

இது ஓட்டை வீடு ஒன்பது
வாசல் இதற்குள்ளே ஆசை என்ன?

தலைவி: யோவ் இன்னும் எப்படித்தான்யா உன்னை கூப்புடுறது?

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே?
மனம் மூடி மூடி பார்க்கும் போதும்
தேடும் பாதை தானே?

இவுரு திருந்தராப்போல தெரியல:

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே

இல்லறம் கேட்டால் துறவரம் பேசும்
இதயமே மாறிவிடு

நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்
அவங்க எப்படீயோ போறாங்க, நாம விட்டுடுவோம்.

அந்த அற்புத ஆனந்தத்தை பெற நீங்களும் கேட்டுப் பாருங்க:
இதோ லிங்க்:

Jun 11, 2009

என் பாடல் அனுபவம்

கடந்த சில தினங்களாக கொஞ்சம் சீரியசான பதிவுகளா போட்டுட்டீங்க, அதனால கொஞ்சம் ஜாலியான பதிவா போடுங்கன்னு எல்லோரும் வேண்டி விரும்பி கேட்டதனால, இந்த பதிவ உங்க முன் சமர்ப்பிக்கிறேன். ( யேய் யாரு கேட்டா? உன்னோட பதிவ படிக்கறதே பெரிய விசயம்னு நீங்க கேட்கறது காதுல விழுது)

எனக்கு சிறுவயதிலிருந்தே பாட்டுன்னா ரொம்ப புடிக்கும். பாட்டுக்கு என்ன புடிக்குமான்னு எனக்கு தெரியாது. ஆனா, ஏதாவது பாடிக்கிட்டே இருப்பேன். லால்குடியிலிருந்து திருச்சிக்கு ட்ரெயின்ல தான் ஸ்கூலுக்கு போவோம். மொத்தம் ஒரு மணிநேரப் பயணம். சும்மா போக முடியுமா? போரடிக்கும்ல. அதுவுமில்லாம ட்ரெயின்ல எல்லாம் ஒரே பொண்ணுங்கதான். அப்புறம் கேக்கணுமா என்ன? சும்மா இல்லாம பசங்க தட்டிட்டுட்டு என்ன பாட சொல்லுவாங்க. நானும் " கூடையில கருவாடுனு" பாட ஆரம்பிப்பேன் ( ஐயைய்யோ, பாட்ட சொன்னதும் என் வயசு தெரிஞ்சு போச்சா?). என் பெட்டியில இருக்க எல்லாரும் அப்படியே உட்கார்ந்த இடத்துலேந்து ரசிப்பாங்க. நான் ரசிச்சாங்க அப்படீனுதான் நினைச்சேன் அப்போ. ஆனா இப்போ தெரியுது. அவங்க ஓடுர ட்ரெயின்லேந்து எங்க பாஸ் போவாங்க. குதிக்கவா முடியும். அவங்க வேற வழியில்லாம கேட்டுருப்பாங்களோனு இப்ப யோசிக்கறேன் பாஸ்.

அந்த பழக்கம் என்ன விடாம தொரத்தி அனைத்து பள்ளி பாட்டுபோட்டில கலந்துக்குற அளவுக்கு போச்சு. பரிசு குடுக்குறாங்களோ இல்லையோ, நம்ம பேரு முதல்ல இருக்கும். நானும் எனக்கு தெரிஞ்சத பாடிட்டு வருவேன். நம்ம பாடப்போற ஸ்கூல்ல ஏதாவது பொண்ணுங்க பாட வந்தா அவ்வள்வுதான். ரொம்ப ஸ்டைலாம் பண்ணி பேண்ட நல்லா இன் பண்ணி, சூரியன் சுட்டெரிக்கிற வெயில பொறந்த நம்மோட கலர கொஞ்சம் மூணு லேயர் பவுடரால நிரப்பி, அப்படீயே நடிகர் மோகன் மாதிரி பாடினா, ஆகா, அந்த சந்தோசம் இருக்கே, அப்பா சூப்பர். மோகன்னு சொன்னோன மைக்லனு நினைச்சுக்காதீங்க. அந்த காலத்துல எங்க மைக்க குடுத்தாங்க. நம்ம கையையே மைக் மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான்.

அப்படியே அந்த பழக்கம் காலேஜ் வரை வந்து அங்க இருக்கவங்களையும் கஷ்டப்படுத்தி, என்னோட பாட்டை எல்லாத்தையும் கேட்க வைச்சு.... அப்போதான் என் நண்பன் சொன்னான்,

"டேய் உலக்ஸ், நம்ம காலேஜ் ஆர்கஸ்ட்ராவுக்கு பாட ஆள் செலக்ட் பண்ணராங்க. நாளைக்கு மாலை காலேஜ் விட்டதும் போட்டி இருக்கு வந்துடு"
நம்மதான் பெரிய பாடகரா ஆச்சே. விட்டுடுவோமா? உடனே பேர கொடுத்து சேர்ந்தேன்.
நானும் அவனும் சேர்ந்து என்ன பாட்டு பாடுவதுனு உக்காந்து யோசிச்சு, அவன், " சங்கீத ஜாதி முல்லை பாடுவெதென்றும், நான், ராக தீபம் ஏர்றும் நேரம்,, என்ற பாடலையும் பாடுவதென்று முடிவெடுத்தோம். காலேஜ் முடிந்தவுடன், ஜோசப் காலேஜ் மைதானத்துல ப்ராக்டிஸ் பண்ணோம். ஏன்னா, அங்க தானே யாரும் வர மாட்டாங்க.

அடுத்த நாள் என்ன பண்ணேன், நான் போய் அந்த ஆர்கஸ்ட்ரா குழு கோ ஆர்டினேட்டர பார்த்து, "மாப்பிள என்ன முதல்ல பாட கூப்புட்டு" ன்னு சொன்னேன். அவன் என் நண்பந்தான்.

" ஏண்டா, முதல்ல"

" இல்லைடா நான் செகண்ட் ட்ரெயின புடிக்கணும். அத மிஸ் பண்ணா, அப்பறம் வீட்டுக்கு போக லேட்டாகும்" என்றேன்.

அவனும் சரின்னான். அவனுக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது, நான் ஏன் முதல்ல பாடுறேனு சொன்னேனு. ஏன்னா, அப்போதானே பாஸ் எல்லாரும் என் பாட்ட கேப்பாங்க.

நான் ஒரு கேள்வி கேட்க போய் என்னோட பாட வந்த நண்பன் என்ன பார்த்த பார்வை இன்னும் என் கண்ணுலயே இருக்கு. என்ன கேட்டேன்னா,

" ஏண்டா, ஆர்கெஸ்ட்ரால சேர்ந்தோன்ன, நிறைய காலேஜ் போக வேண்டியிருக்குமேடா, எப்படிடா படிப்பையும், பாட்டையும் சமாளிக்க போறோம்?"

அதுக்கப்புறம் காலேஜ்ல பாடுனேன். ரிசல்ட் வழக்கம் போலத்தான். அன்னைலேந்து என் கனவுல நான் மேடையில் மைக் முன்னாடி பாடுவது போலவும், எல்லோரும் கேட்பது போலவும், வந்துட்டே இருந்துச்சுங்க.

ஆனா என்ன ஒரு உலக ஆச்சர்யம் பாருங்க, அந்த கனவு உண்மையிலேயே நடந்துச்சுங்க.

போன வருசம் டிசம்பர் மாதம் கம்பெனி ஆண்டு விழா நிகழ்ச்சி ஒரு போர் ஸ்டார் ஹோட்டல நடந்துச்சு. எல்லோரும் கரோக்கில பாடுனாங்க. மலேசிய. ஹிந்தி, ஆங்கிலப்பாடல்கள்.

திடீரென என பெயரை கூப்பிட்டு பாடச்சொன்னார்கள். என்னிடம் கரோக்கி கேசட்டும் இல்லை, நான் பாடிப்பழகவும் இல்லை. ஆனால், மேடை ஏறினேன். பாடத்தொடங்கினேன், " இதயம் ஒரு கோவில்" என்று, என் மனைவியை பார்த்து பார்த்து கொஞ்சம் ஜொல்லு விட்ட மாதிரி பாடினேன். கூட்டத்திலிருந்து வந்து ஒரு மலர் கொத்தை என்னிடம் கொடுத்தாள் ஒரு மலேயப் பெண்மணி. அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.

அதோடு நிறுத்தியிருக்கலாம், அதற்கப்புறம் ஹிந்தி பாடல் பாடுகிறேன் என்று " தேரே மேரே பீச்சுமே" பாடி சொதப்பி எடுத்து....

சொதப்புனதையும் சொல்லனும்ல பாஸ்???
இதுல சொல்ல வர மெசேஜ் என்னன்னா, நல்லா கனவு காணுங்க பாஸ்.
நான் இப்படித்தான் ஏதாச்சும் பேசிட்டே இருப்பேன், நீங்க உங்க வேலைய பாருங்க ( பரிசல், உங்கள் வாக்கியத்தை யூஸ் பண்ணியதற்கு மன்னிக்கவும்)

Jun 4, 2009

சமீபத்தில் என்னை பாதித்த மூன்று சம்பவங்கள்


சம்பவம் 1:

ஞாயிறு இரவு Rio de Janeiro’s லிருந்து ஏர் பிரான்ஸ் AF 447 விமானம் 216 பயணிகளுடனும், 12 சிப்பந்திகளுடனும் சரியாக இரவு ஏழு மணிக்கு பாரிஸை நோக்கிப் புறப்பட்டு சென்றது. ரியோவிலிருந்து பாரிஸ் செல்ல 9145 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பயண நேரம் மொத்தம் 10 மணி நேரம் 20 நிமிடங்கள். ஆறு மணி நேர பயணம் முடிந்த நிலையில், திடீரென அந்த விமானத்துடனான தொடர்பு நின்றுவிட்டதாக கண்ட்ரோல் ரூம் அதிகாரிகள் கூறினார்கள். முதலில், யாராவது ஹைஜாக் செய்திருக்கலாம் என்றார்கள். பிறகு காணவேயில்லை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள். பிறகு அருகில் பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தில் உள்ள பயணி அட்லாண்டிக் கடலில் மேல் பயணம் செய்திக் கொண்டிருந்த விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் விழுந்த்தாகவும், அதை பார்த்ததாகவும், அது ஏர் பிரான்ஸ் விமானமாக இருக்கலாம் எனக் கூறியதாக கூறினார்கள். இப்போது சொல்கிறார்கள், விமானத்தை மின்னல் தாக்கி இருக்கலாம் அதனால், எலெக்ட்ரிகல் பெயிலியர் ஆகி, எரிந்து கீழே விழுந்து இருக்கலாம் என்கிறார்கள். கேப்டன் கடைசியாக அனுப்பிய செய்தியில், டர்புளன்ஸ் அதிகமாக இருந்ததாக கூறியிருக்கிறார், என்கிறார்கள். விமானம் மேகங்களுக்கு மேல், மின்னல் தாக்காத இடத்தில்தான் பறக்கும் என இவ்வளவு நாள் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

எது எப்படியோ கடந்த ஞாயிறு வரை இந்த உலகத்தில் இருந்த 228 நபர்கள் இப்போது நம்மிடம் இல்லை. இதுதான் விதியா?. இது விதி என்றால், வாழ்வு முடிய போகும் அனைவரையும் ஒரே விமானத்தில் இறைவன் பறக்க வைத்தாரா? அந்த கடைசி தருணங்களில் அதில் பிரயாணித்த அனைவரும் எத்தனை வேதனை பட்டிருப்பார்கள். என்னவெல்லாம் கனவுகளோடு பறந்திருப்பார்கள். நினைக்கவே மனம் மிக வேதனையாக உள்ளது. அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வதாலும், டர்புளன்ஸ் அனுபவம் நிறைய இருப்பதாலும், என்னால் அந்த வேத்னையை முழுமையாக உணர முடிகிறது. என் விமான டர்புளன்ஸ் அனுபவத்தை "விமான அனுபவம்" இங்கே படிங்கள்.

என்னால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

சம்பவம் 2:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவன் கடந்த 25 வருடமாக தன் சொந்த மகள்களையே ஒரு பாதாள அறையில் பூட்டி வைத்து, அடைத்து பாலியல் கொடுமைகள் செய்து வந்திருக்கிறான். அந்த மகள்களுக்கும் குழந்தைகள் பிறந்து, அவனே பிரசவமும் பார்த்து, அவர்களையும் வெளி உலகம் தெரியாமல் வளர்த்து வந்திருக்கிறான். அதில் ஒரு மகள், அவளுக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் எப்படியோ அவன் அசந்த நேரம் பார்த்து, வெளியில் தப்பித்து ஓடி வந்து, மற்றவர்களிடமும், போலிஸிடமும் சொன்னதால்தான், அவனைப்பற்றிய உண்மைகள் வெளி உலகத்துக்கே தெரிய வந்துள்ளது.

அவனை கோர்ட்டில் நிறுத்தி கேள்விகள் கேட்டபோது, அவன் செய்த தவறுகளுக்காக கொஞ்சம் கூட வருந்தாதது என்னை ரொம்பவே கோபம் கொள்ள செய்தது. அவன் இப்போது இருப்பது ஜெயிலில்.

என்னுடைய கேள்வி இதுதான். தனக்கு பிறந்த மகளை வேறு கோணத்தில் பார்க்க எப்படி ஒரு தகப்பனால் முடியும் என என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. மனித ஜாதியில் பிறந்த எவருமே அவ்வாறு இருக்க வாய்ப்பே இல்லை. மிருகம் மட்டுமே தகாத உறவுகளிலும், முறையற்ற முறைகளிலும் உறவுகள் கொள்வதாக படித்திருக்கிறேன்.

"அவன் அவ்வாறு மிருகமாக மாற என்ன காரணம் இருக்க முடியும்?" என யோசித்து பார்த்து மனம் சோர்வடைந்ததுதான் மிச்சம்.

இந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது.

சம்பவம் 3:

திருச்சியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் ஒரு பையன் டேபிள் துடைத்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்தால் நல்ல புத்திசாலிபோல் தோன்றியது. அவனிடம் பேச்சுக்கொடுத்தபோது அவன் நன்றாக படிக்க கூடியவன் என்றும், வீட்டில் வசதியில்லாததால் இந்த வேலைக்கு வந்ததாகவும் கூறினான். நல்ல சிரித்த முகத்துடன் வேலையை கவனமாக செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் பக்கத்து டேபிளில் ஒருவர் அவனை துடைக்க கூப்பிட்டார். அவன் சென்றான்.
அவன் துடைத்துக்கொண்டிருந்த போது அவனையறியாமல் ஒரு துளி தண்ணீர் அந்த நபரின் மேல் பட்டு விட்டது. உடனே அவன் 'சாரி' கேட்டான். அந்த நபர் அவன் சொன்ன 'சாரியை' பொருட்படுத்தாமல், அவன் கன்னத்தில் ஒங்கி அடித்து விட்டார். அவன் சின்ன பையன். அவன் கண்களிலிருந்து ஒரே கண்ணீர். அழுது கொண்டே அவன் துடைத்த காட்சி இன்னும் என் கண்முன்னே அப்படியே இருக்கிறது.

எனக்கு அந்த நபர் மீது வந்த கோபம் கொஞ்சநஞ்ச மல்ல. ஆனால், என்னாலும் ஏதும் செய்ய முடியாத நிலை.

நான் கேட்கும் கேள்வி இதுதான், " அவன் ஏழையாக பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தான்?". அவனும் மனிதன் தானே? என்ன காரணத்திலாலோ, அவன் டேபிள் துடைக்க நாம் சாப்பிடும் நிலை. அதுவே நிரந்தரம் அல்ல. நிலை மாறலாம் அல்லவா?

இது ஏன் மக்களுக்கு புரிவதில்லை. 30 வருடம் வாழ்ந்தவர்களும் இல்லை. 30 வருடம் தாழ்ந்தே இருந்தவர்களும் இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை.

நண்பர்களே, நாம் ஹோட்டல்களுக்கு போகும்போது, டேபிள் துடைப்பவர்களை பார்த்தால், நாம் ஒன்றும் பணம் கொடுக்க வேண்டாம், அட்லீஸ்ட் அவர்களை நம் சக மனிதர்களாய் நினைத்து, மரியாதையாய் நடத்தலாமே?

Jun 3, 2009

பரிசலுடன் ஒரு அனுபவம்

இரண்டு வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்தினருடன் எங்கள் ஊரிலிருந்து பினாங்கு மற்றும் லங்காவி சுற்றுலா சென்றேன். மொத்தம் ஆறு நாள் பயணம். மறக்க முடியாத அனுபவம். மொத்தம் 9 மணி நேர கார் பயணம். நான் தான் காரை ஓட்டிச்சென்றேன். மலேசியாவின் அழகான ரோட்டில் கார் ஓட்டுவது ஒரு சுவையான அனுபவம். மூன்று நாள் பினாங்கை சுற்றி பார்த்துவிட்டு காரை ஹோட்டலிலேயே விட்டுவிட்டு, நாங்கள் லங்காவி கிளம்பினோம். 3 மணி நேர பெரி(சிறு கப்பல்) பயணம்.

ரொம்ப ஜாலியாக ஆரம்பித்த பயணம், கொஞ்ச நேரத்தில் மிக மோசமான கட்டத்தை நெருங்கியது. நாங்கள் பெரியின் உள்ளே நுழைந்ததுமே எல்லோருக்கும் ஒரு பிளாஸ்டிக் பை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் எங்களுக்கு காரணம் தெரியவில்லை. பிறகுதான் காரணம் தெரிந்தது. என்னவென்றால், சில பேருக்கு சீ (sea) சிக்னெஸ் வந்தால் வாந்தி வருமாம். அப்போது உதவியாக இருக்கட்டுமே என கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாமே நல்லாதான் போயிகிட்டு இருந்தது. திடீரென பெரி தூக்கி போட்டது பாருங்கள், ஒரு 5 அடி மேலே தூக்கி, திடீரென பொட்டுனு கடலில் விழும். எங்களைத்தவிர எல்லோரும் வாந்தி. கொஞ்ச நேரத்தில் ஒரே சத்தம். அன்று அமாவாசைக்கு அடுத்த நாள் வேறு. ஊழியர்களிடம் கேட்டால்,

"இன்னைக்கு கடல் கொஞ்சம் கடுமையா (rough) இருக்குங்க. ஆனா, இன்னைக்குனு பார்த்து ரொம்ப அதிகமா இருக்கு, ஏன்னு தெரியலனு" பீதிய கிளப்பி விட்டுட்டாங்க.

எல்லோர் சத்தமும் அதிகமாகவே, நான் வேண்டாத தெய்வமில்லை. அன்றைக்கு "எல்லா மதமும் எங்களுக்கு சம்மதமே" என்று, இந்து கடவுள், யேசு, அல்லா னு எல்லா கடவுளையும் துணைக்கு அழைத்தோம்.

பயங்கரமான த்திரில்லிங் அனுபவம். இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு. ஒரு மணி நேரம் அந்த கொடுமையை அனுபவித்தோம். 5 நிமிசத்துக்கு ஒரு முறை தூக்கி போடும். கத்தியே ஆகணும். கத்தல ஏதாவது உடம்புக்கு ஆகலாம். மொத்த பயணிகளுமே கத்தினா எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க. எல்லா கடவுளும் எங்களை அன்னைக்கு காப்பாத்துனதால இன்னைக்கு இதை உங்களிடம் சொல்லக்கூடிய நிலையில் இருக்கேன்.

இதனால உங்களுக்கு நான் சொல்ல விரும்புறது என்னன்னா, "அமாவாசை, பொளர்ணமி அன்று கடல் பயணம் செய்வதை தவிறுங்கள். அன்று கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்".

அந்த நேரத்தில் என் நண்பர் ஒருத்தர் செல் போனில் கூப்பிட்டார்.

" எப்படி இருக்கு கடல் பயணம்?"

" பயமா இருக்கு" என விசயத்தை விளக்கினேன்.

" அப்படியே, சுனாமி வந்தா எப்படி உணர்வீங்க?" என என் பயத்தை பொருட்படுத்தாமல், ஆறுதல் சொல்லாமல் கேட்டார்.

" நீங்க ரோட் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டா மாதிரி உணர்வேன்" என்றேன்.

போனை கட் செய்தவர் இன்று வரை என்னிடம் பேசுவதில்லை.

தலைப்ப வேற மாதிரி வச்சிட்டு, என்னமோ சொல்லுறேன் அப்படீங்கறீங்களா? இதோ விசயத்துக்கு வரேன்.

அப்போ, எனக்கு ஆறு வயசு இருக்கும். எங்க அத்தை ஒருத்தங்க கல்லணை தாண்டி திருக்காட்டு பள்ளியிலே இருந்தாங்க. ஏதோ ஒரு விஷேசத்துக்கு அப்பா எங்களை அத்தை வீட்டுக்கு கூட்டி போனார். அப்போ எல்லாம் பஸ் வசதி கிடையாது. எங்க ஊர்ல இருந்து கிளம்பி அவங்க ஊருக்கு போக காலைலே கிளம்பினோம்.

"எப்படிப்பா போகப்போகிறொம்?" என்றேன்.

"இரு, சொல்கிறேன்" என்றவர் ஒரு இடம் கூட்டிச்சென்றார். அன்றுதான் நான் முதலில் பரிசலை பார்த்தேன்.

நாங்கள் அனைவரும் ஒரு பரிசலில் ஏறினோம். ஒரு அரை மணி நேரப்பயணம். சுத்தி, சுத்தி சென்றது. அது ஒரு இனிமையான பயணம். என்னால் அந்த பயணத்தை மறக்கவே முடியாது.

பரிசலுடன் ஏற்பட்ட இனிய அனுபவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை.

" நீங்கள் பரிசலுடன் ஒரு அனுபவம் என்றவுடன், பரிசல்காரன் கிருஷ்ணாவுடன் என் அனுபவம் என நினைத்து படிக்க வந்திருந்தால், சாரி, பாஸ்! என்ன மன்னிச்சிடுங்க. இப்போதான் நான் பழக ஆரம்பிச்சிருக்கேன். கொஞ்ச நாள் ஆகும் அவருடன் ஏற்படும் அனுபவத்தை எழுத"

சரி, அப்பறம் பார்க்கலாமா??

Jun 2, 2009

மிக்ஸர் - 02.06.09 - காலதாமதம் வேண்டாமே

என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம்,சில சமயம் நண்பர்களின் இமெயில்களுக்கு உடனே பதில் எழுதாமல் இருப்பது. வேண்டுமென்றே செய்வதில்லை. சரி, அப்பறம் எழுதலாம் என நினைத்து அப்படியே மறந்துவிடுவதுண்டு. அதனால், மெயில் அனுப்பிய நண்பர்கள் என் மேல் கோபப்படுவதுண்டு. ஆனால், என்னைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே, கோபப்படுவதில்லை.

ஆனால், சென்ற வாரம் ஒரு ஆச்சர்யம். ஒரு தகவலுக்காக, நண்பர் நர்சிமுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதுதான், நான் எழுதும் முதல் மெயில் நர்சிமுக்கு. சொன்னால், நம்ப மாட்டீர்கள், அனுப்பிய ஒரு நிமிடத்தில் பதில் அனுப்பினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் உடனே, என் ஆச்சர்யத்தை ஒரு மெயிலாக அனுப்பினேன். அடுத்த ஒரு நிமிடத்தில் பதில் வந்தது இப்படி,

"Dear Mr Narsim,
Thank You Very Much for your immediate reply - இது நான்.

"இது என் அடிப்படை குணம்.மெயில் பார்த்தால் உடனே பதில் அனுப்புவது" - இது நர்சிம்.

அடுத்த உதாரணம். தொடர் கேள்வி பதில் எழுத நண்பர் பரிசலை அழைத்தேன் என் பதிவின் மூலமாக. ஒரு மெயிலும் அனுப்பினேன். நான் நினைத்தேன், நமக்கெல்லாம் பதில் அனுப்ப மாட்டார், ஏனென்றால் நாம் ஒன்றும் பிரபலமில்லையே என்று. ஆனால், என்ன ஆச்சர்யம் உடனே மெயிலும் அனுப்பி, பதிவும் எழுதி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார். அவர் என்னதான், அவரிடம் சோம்பேறித்த்னம் அதிகம் இருக்கிறது என்று கூறினாலும், மனிதன் இரவு 2 மணிக்கு எழுதியிருக்கிறார் என்றால், அவர் எப்படி சோம்பேறியாக இருக்க முடியும்?

இதிலிருந்து நான் இரண்டு விசயங்கள் உணர்ந்துகொண்டேன்:

01. தம்மை சோம்பேறி என்க்கூறிகொள்பவர்கள் சோம்பேறி இல்லை. சுறுசுறுப்பு என நினைத்துக்கொண்டு வேலையத் தள்ளிப்போடுபவனே சோம்பேறி.

02. இனிமேல் எல்லா மெயில்களுக்கும் உடனே பதில் எழுதவேண்டும் என்ற நற்பண்பிணை கற்றுக்கொண்டேன்.

நன்றி, நர்சிம், பரிசல்.

-------------------------------------------------------------------------------------------------

யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்? என்ற கேள்விக்கு "இளையராஜா" என எழுதியிருந்தார் நண்பர் பரிசல்.

உடனே எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பர், நடிகர், எங்கள் ஊர்க்காரர், தற்போதைய MP, தற்போதைய மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் அனைவரும் சென்னை சென்றிருந்தோம். அவர் மிக பிரபலமாக இருந்த சமயம். அப்போது அவர் , தலைவர் ரஜினியுடன் எஜமான் நடித்துக்கொண்டிருந்த நேரம்.
எல்லா திரையுலக பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.

அப்போது இளையராஜாவும் வந்தார். அவரைப்பற்றி பலர் பல விதமாக கூறிய நேரம். நான் அருகில் சென்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு இரண்டு வார்த்தைகள் பேசினேன், அவரை தொட்டுப் பார்த்தேன். அவரின் தீர்க்கமான பார்வையையும், அந்த தொடலில் ஏற்பட்ட அதிர்வலைகளையும் இன்று வரை என்னால் உணரமுடிகிறது. அதுதான் இளையராஜா.

நான் இப்படி அனுபவித்துக்கொண்டிருந்தபோது மொத்த கூட்டமும், "ஹோ" என கூச்சலிட்டு, என்னை தள்ளிவிட்டு, இன்னொறுவரை தொட்டு பார்க்க ஓடியது.

அவர் வேறு யாருமில்லை. அப்போதைய நடிகை, "சுகன்யா".

என்ன உலகமடா சாமி இது?

-------------------------------------------------------------------------------------------------

நேற்று கோலாலம்பூரில் அலுவலக வேலை. நடுவில் ஒரு மீட்டிங்கிற்கும், அடுத்த மீட்டிங்கிற்கும் 2 மணி நேர இடைவெளி. என்ன செய்வதென யோசித்தேன். பிறகு எங்கேயும் போக வேண்டாம் என நினைத்து, லேப்டாப்பை ஆன் செய்து " தமிழ் மணம்" சென்றேன்.

செல்வேந்திரன் பங்கு பெற்ற" நீயா, நானா" பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்காததால், "சக்கரை சுரேஷ்" உதவியுடன், நண்பர் செல்வாவின் பதட்டத்துடன் கூடிய கலந்துரையாடலை இணையத்தில் சக்கரை சுரேஷின் வலைப்பக்கத்தில் பார்த்தேன். அருமையாக பேசினார். ஆனால், அவர் இணைய நண்பர்களின் நட்பை பற்றிய பேசிய பேச்சை என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

அருகிலுள்ளவர்களின் நட்பு ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு. இணைய நட்பு, எதையும் எதிர்பார்க்காத நட்பு. ஒருவித புரிதலுடன் கூடிய ஒரே சூழலில் உள்ள நட்பு, இணைய நட்பு.

எனிவே, அது செல்வாவின் கருத்து.

-----------------------------------------------------------------------------------------------

சென்ற வாரம் 5 ஸ்டார் ஹோட்டலில் காலை உணவுக்காக நான் உட்கார்ந்திருந்த போது நான் பார்த்தது இன்னும் என்னை எரிச்சலுடன் வைத்திருக்கிறது. எல்லோரும் கோட் சூட்டில், அல்லது நார்மல் ட்ரெஸ்ஸில். அந்த நேரத்தில் ஒரு இந்திய தம்பதியினர் சாப்பிட்ட வந்தார்கள். கணவன் பெர்முடா, டி சர்ட், மனைவி ஒரு மெல்லிய நைட்டியுடன். அங்கு இருந்த அனைத்து வெளி நாட்டவர்களும் முகச்சுழிப்புடன் அவர்களை பார்த்தார்கள். எனக்கு ஒரே அவமானமாக இருந்தது.

நைட்டி என்பதே நைட்டில் அணிவதற்குத்தான். அது ஒரு காரணப்பெயர். என்னதான் வெளி நாட்டில் சுற்றுலா வந்தாலும், ஒரு அடிப்படை நாகரிகம் கூடவா தெரியாது?

சே!
---------------------------------------------------------------------------------------------

காலேஜ் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். என் நண்பன் ஒருவன் மிலிட்டரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். போகும்போது அவன் அம்மாவை போட்டோ எடுத்தான். பிறகு மீண்டும் ஒரு முறை அதே மாதிரி போட்டோ எடுத்தான்.

நான் கேட்டேன்,

" ஏண்டா, ஒரே மாதிரி, இரண்டு தடவை எடுக்குற?"

" எனக்கு ஒரு காப்பி, எங்க அம்மாவுக்கு ஒரு காப்பி"

" ஏன் ஒண்னு எடுத்தா போதாதா? அதுலேயே இன்னொரு பிரிண்ட் போட்டுக்கறது"

" லூசு மாதிரி பேசாதடா, எனக்கு ஒண்ணு, எங்க அம்மாவுக்கு ஒண்ணு"

கடைசி வரை அவன் என் பதிலை ஒத்துக்கொள்ளவே இல்லை.

------------------------------------------------------------------------------------------

காலைல என் மகள் கேட்டாள்,

" ஏம்பா, பன்றிக்காய்ச்சல் அதனால, எல்லாரையும் ஜாக்கிறதையா இருக்க சொல்றாங்க?"

" ஆமாண்டா, ஜாக்கிறதையா இருக்கணும்"

" ஏம்பா, நமக்கு காய்ச்சல் வந்தா, நாம்தானே ஜாக்கிரதையா இருக்கோம், அதுபோல பன்றிக்கு வந்தா, பன்றிங்கதானே ஜாக்க்கிரதையா இருக்கணும்?"

===============================================================