Jan 12, 2016

ஜிம்!


நடந்த சோகத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனையோ முயற்சிகள் செய்கிறேன். ஆனால் முடியவில்லை. போன புத்தக கண்காட்சிக்கு வாங்கிய புத்தகங்களையே இன்னும் படிக்க வில்லை. எழுதலாம் என்று உட்கார்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லாததால், எழுத முடியவில்லை. தினமும் எழுதிக்கொண்டு, படித்துக்கொண்டு இருந்த நாட்களை நினைத்தே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒரு விசயத்தை மட்டும் என்னால் கடைபிடிக்க முடிகிறது.

14 வருடங்களாக தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வந்தேன். கடந்த ஒரு வருட காலமாக செல்ல வில்லை. மீண்டும் அக்டோபர் மாதம் முதல் திருச்சியில் உள்ள நல்ல ஒரு ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். தனியாக ஒரு டிரையினர் வைத்துள்ளேன். அற்புதமான ஜிம். காரணம், நிறைய கல்லூரி பெண்களும், ஆண்டிகளும் உடற்பயிற்சி செய்ய வருகிறார்கள். ஒரு நாள் செல்லவில்லை என்றால் மனம் படாத பாடு படுகிறது. முதல் மூன்று நாட்களுக்கு பிறகு physical assessment எடுத்தார்கள். பின் டையட்டீசன் என்னிடம் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு டயட் லிஸ்ட் கொடுத்தார்கள். அந்த பெண்ணிற்கு ஒரு 25 வயதிற்குள் இருக்கலாம். நான் ஏற்கனவே குறைந்த வெயிட். இருந்தாலும், என்னுடைய குறிக்கோள் General Fitness & Belly reduce என்று கொடுத்திருந்தேன்.

தினமும் மிக கஷ்டமான அந்த டயட்டை பின் பற்றினேன். திடீரென எல்லோரும் என்னை பார்த்து,

“என்ன ஆச்சு உலக்ஸ்? ஏதும் உடம்பு சரியில்லையா” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வெயிட் பார்த்தால் பட பட வென்று 4 கிலோ குறந்துவிட்டது. மீண்டும் அந்த டயட்டீசன் பெண்ணிடம் கேட்டேன். உடனே அவள், “நீங்கள் பாலோ செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.

சென்ற மாத கடைசியில் மீண்டும் ஒரு physical assessment எடுத்து பார்த்தபோது முதல் மாதத்தில் செய்ததைவிட என்னால் மூன்று மடங்கு அதிகமாக எல்லா டெஸ்ட்டையும் செய்ய முடிந்தது. ஆனால் whole body fat குறைந்து விட்டது.

“என்னங்க இப்படி ஆயிடுச்சு?’’ என்று டிரையினரை கேட்டால்,

‘சார், இங்கு வரும் அனைவரும் weight loss வருகிறார்கள். நிறைய செலவு செய்கிறார்கள். குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். உங்களால் இவ்வளவு குறைக்க முடிந்ததை நினைத்து சந்தோசப்படுங்கள் சார்” என்றார்.

நான் சொன்னேன், “அது சரி. ஆனால் இழந்த வெயிட்டை எப்படி திரும்ப பெறுவது?”

நீண்ட ஆலோசனைக்கு பிறகு, Muscle gain & belly fat reduce க்கு புது விதமான Workout Schedule மற்றும் புது diet plan கொடுத்துள்ளார்கள். இப்போது எந்நேரமும் புரோட்டின் உணவு சாப்பிட்டுக்கொண்டும், Workout செய்து கொண்டும் இருக்கிறேன்.

சில சமயம் தோணும், “இது தேவையா?”

ஆனால் தேவை என்று மனம் சொல்கிறது.

01. எப்பொழுதும் என்னால் உற்சாகமாக இருக்க முடிகிறது.

02. உடம்பு வலியிடனும், அசதியுடனும் இருப்பதால் இரவு நல்ல தூக்கம் வருகிறது.

03. செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா? என்று ஒரு காலத்தில் நினைத்தேன். இப்பொழுது அந்த நினைவே வருவதில்லை.

என்ன செய்வது? சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதுதானே வாழ்க்கை!

Dec 22, 2015

ரேகா!


ரேகாவை என் வாழ்க்கையில் மறுபடியும் சந்திப்பேன் என்றோ அந்த சந்திப்பு இப்படி அமையும் என்றோ கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதானே வாழ்க்கையின் நியதி. நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு எதிர்மறையாகத்தானே எல்லாம் நடக்கும். அப்படி நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் பின் கோயில் எதற்கு? பிரார்த்தனைகள் எதற்கு? நான் ஏன் இப்படி குழம்பி தவிக்கிறேன்?

 நேற்று எப்பவும் போல்தான். கடுமையான வேலை. எல்லாம் முடிந்து அலுவலகம் விட்டு வீட்டிற்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டது. திருச்சி சத்திரம் பஸ்டாண்டு வந்து லால்குடிக்கு பஸ்ஸை பிடிக்கையில்தான் நினைவுக்கே வந்தது. என் பிரிய சகி நெய் வாங்கி வரச்சொன்னது! இனி நான் நந்தி கோயில் தெரு முனைக்கு சென்று வாங்கி வர நேரம் ஆகிவிடும். சரி நாளை வாங்கலாம். இன்று மனைவியிடம் திட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து பஸ்ஸில் ஏறிவிட்டேன். நல்ல கும்பல். வழக்கம் போல உட்கார இடம் கிடைக்கவில்லை. விதியை நினைத்துக்கொண்டு ஏறக்குறைய கம்பியில் தொங்கிக்கொண்டே சென்றேன்.

வீட்டை நெருங்குகையில் ஒருவித பதட்டத்துடன் தான் சென்றேன். மனதையும் திடப்படுத்திக்கொண்டேன். சகி என்ன சொன்னாலும் கோப படக்கூடாது. ஆனால் நடந்ததோ வேறு. உள்ளே நுழைந்தவுடன்,

“ஏங்க ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்?”

“இல்லம்மா கொஞ்சம் வேலை அதிகம் இன்னைக்கு?”

“இதையே தானே வருச கணக்கா சொல்றீங்க”

“ம்ம்ம். என்ன பண்ணறது சொல்லு?”

“இவ்வளவு நேரம் காத்திருந்துட்டு இப்பத்தான் அவங்க போறாங்க”

“யாரு?”

“யாரோ ரேகாவாம்”

அவள் சொல்லி முடித்தவுடன் என் உணர்ச்சிகளை எப்படி நான் அடக்கிக்கொண்டேன் என்றுதான் தெரியவில்லை. அது சந்தோசமா? துக்கமா? அழுகையா? தெரியலை. ஆனா மனைவியின் முன் வெளிப்படுத்துகிற உணர்ச்சி அல்ல அது. எப்படியோ என்னை கட்டுப்படுத்திக்கொண்டு,

“அப்படியா? என்னவாம்? என்ன சொன்னாங்க?” என்றேன்.

“உங்கள பாக்கணுமாம். நீங்க ஏதோ நிறைய உதவி எல்லாம் அந்த காலத்துல செஞ்சிருக்கிங்களாமா. முடிஞ்சா நாளைக்கு உங்களை அவங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க” என்றவள் கையில் வைத்திருந்த துண்டு சீட்டை கொடுத்துவிட்டு சமயலறை பக்கம் சென்றாள்.

“அப்படியா?” என்றவன் பதில் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தேன்.

சாப்பிட்டு முடித்து படிக்கையில் சாய்ந்தவுடன், என்னைக்கும் இல்லாத திருநாளாக மனைவியின் கை மேலே பட, ஒரு எரிச்சலுடன் தள்ளிவிட்டேன். “போங்களேன் எனக்கென்ன?” என்பது போல் அவள் தள்ளிப்படுத்தாள்.

தூக்கம் வரவில்லை. மனம் பின்னோக்கி சென்றது.

அப்பொழுது நான் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். லால்குடியில் இருந்து தினமும் ரயிலில் தான் கல்லூரி செல்வோம். ஒரே குதுகூலம்தான். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் பட்ட சந்தோசங்களுக்கு அளவே இல்லை. சோகம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. பெண்களுக்கு என்று தனி கூபே இருந்தாலும், எல்லோரும் ஆண்களும் பெண்களூமாக சேர்ந்தே செல்வோம்.

அன்று திங்கட் கிழமை. என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஏன் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அன்றுதான் முதன் முதலில் ரேகாவை சந்தித்தேன். சென்னையில் பத்தாம் வகுப்பை முடித்த அவள் பதினொன்றாம் வகுப்புக்கு பாட்டி வீட்டில் தங்கி படிக்க வந்திருக்கிறாள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். அவளுடைய அழகை எப்படி வர்ணிப்பது என்று இப்பொழுது தெரியவில்லை. தினமும் பாவாடை சட்டையில் தான் வருவாள். நல்ல சிகப்பு. நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். முதல் பார்வையிலேயே என் இதயத்தில் சம்மனமிட்டு உட்கார்ந்து கொண்டாள். அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது? என்று தெரியவில்லை. தினமும் தவித்தேன். அவளே வெறுக்கும் அளவிற்கு அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவளைப் பார்க்காத நாட்கள் எனக்கு நரகம்தான். ஏறக்குறைய அவளை ஒரு தெய்வம் போல கருதி மனதில் வைத்து பூஜித்தேன். நண்பர்கள் என்னை பைத்தியம் என்றார்கள். அவளிடம் பேச்சு கொடுப்பதற்காக ஒரு காரியம் செய்தேன். அவளுக்குத் தெரியாமல், அவள் பையிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்து என் பையில் வைத்துவிட்டு, என் டிபன் பாக்ஸை அவள் பையில் வைத்தேன்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டேன். நேராக எங்கள் தெருவில் இருக்கும் சித்தி விநாயகரிடம் சென்று “இன்று எப்படியும் அவள் என்னிடம் பேசி விட வேண்டும்” என்று வேண்டினேன். பின் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அவசர அவசரமாக சாப்பிட்டேன். நேராக சலுனுக்கு சென்றேன். தலை முடிக்கு ஹேர் ட்ரையர் போட்டுக்கொண்டேன். பவுடர் அடித்தேன். முகத்தை கண்ணாடியில் பார்த்து திருப்தியாகி ரெயில்வே ஸ்டேஷன் சென்றேன். தேடிக்கண்டு பிடித்து அவள் உட்கார்ந்து இருந்த பெட்டியில் ஏறினேன்.

மெதுவாக அவளிடம் சென்றேன். எல்லாருக்கும் முன் எப்படி பேசுவது என்று தயங்கி தயங்கி,

“உங்க டிபன் பாக்ஸ மாத்தி எடுத்துட்டு போய்ட்டேன். சாரி” என்று திருப்பிக்கொடுத்தேன்.

“பரவாயில்லை” என்றவள் வாங்கிக்கொண்டு, என் டிபன் பாக்ஸை கொடுத்தாள். வாங்கிக்கொண்டேன். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதற்குள் சீரங்கம் ஸ்டேஷன் வரவே என்னால் பார்க்க கூட முடியவில்லை. அவ்வளவு கும்பல். குழப்பத்துடன் கல்லூரி சென்றேன்.

மதிய உணவு இடைவேளையில் திடீரென ஏதோ தோன்றவே அவள் கொடுத்த என் டிபன் பாக்ஸை எடுத்தேன். கனமாக இருக்கவே திறந்தேன். அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர அடைந்தேன். உள்ளே அருமையான எலும்பிச்சை பழ சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் இருந்தது. அப்பொழுதுதான் என் மரமண்டைக்கு உரைத்தது. ஆஹா, நமக்காக அவள் சாதம் கொண்டு வந்திருக்கிறாள் ஆனால் நாமோ? சே? என்ன இது? அவள் சாப்பிட கொண்டு வந்து நமக்கு கொடுத்து விட்டாளோ என்று பல வாறு குழம்பிக்கொண்டிருக்கையில்தான் கவனித்தேன். ஏதோ ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. என்னவென்று திறந்தேன். உள்ளே ஒரு கடிதம்.

“ரவி,

என்னிடம் பேச நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. நேராக பேச வேண்டியதுதானே? நீங்கள் நினைக்கலாம், நான் பேசலாமே என்று? எப்படி முடியும் நான் ஒரு பெண் அல்லவா? உங்களுக்கே இல்லாத தைரியம் எனக்கு எப்படி வரும்”

சந்தோசத்தில் துள்ளிய நான் எப்போது சாப்பிட்டேன். எப்போது ஸ்டேசன் வந்தேன். எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்டேன். அவளும் என்னைப் போலவே நினைத்திருப்பாள் போல, அவளும் வந்துவிட்டாள். பின் என்ன? சுகம் மட்டும்தான்.

உலகத்தை மறந்தோம். திகட்ட திகட்ட காதலித்தோம். பார்க்காத சினிமா இல்லை. போகாத கோயில் இல்லை. வாரம் தவறாமல் மலைக்கோட்டை உச்சிக்கு செல்வோம். மணிக்கணக்காக பேசுவோம்.

அந்த வருட பிறந்த நாளுக்கு “என்ன வேண்டும்” என்று கேட்டேன்.

“தஞ்சாவூர் கோவிலுக்கு கூட்டி செல்லுங்கள்” என்றாள்.

காலையிலே திருச்சி வந்தோம். மாரிஸ் தியேட்டரில் காலைக்காட்சி ‘புன்னகை மன்னன்’ படம் பார்த்தோம். பனானா லீபில் பிரியாணி சாப்பிட்டோம். மதியம் கிளம்பி தஞ்சாவூர் சென்றோம். கோவிலுக்கு உள்ளே சென்றவுடன் என் கைகளை இருக்கப் பிடித்தவள் விடவே இல்லை. அப்படி ஒரு அந்நியோன்யமாக இருந்தாள். கோவிலில் இருந்து வெளியே வந்து டின்னர் சாப்பிட்டோம். நேரம் பத்தை நெருங்கி கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்டு கிளம்பலாம் என்றேன்.

“வேண்டாம்” என்றவள் “ரூம் எடுத்து தங்கிச் செல்லலாம்” என்றாள். நான் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை. “வீட்டிலே தேட மாட்டார்களா” என்றதற்கு “நான் மெட்ராஸ் செல்வதாக பாட்டியிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன்” என்றாள். அவள் அவ்வாறு அடிக்கடி போவது வழக்கம் என்பதால் நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில சமயம் தான் அவர் அப்பா வந்து கூட்டிச் செல்வார். மற்றபடி இவளே தனியாக ராக்போர்டில் சென்று வருவாள்.

லாட்ஜிற்கு சென்றொம். நான் சொன்ன எதையும் அவள் கேட்கவில்லை. எனக்கு பிடிக்காமலேயே எல்லாம் நடந்தது. காலையில் கிளம்பும்போது ஒரு கேள்வி கேட்டாள்,

“ஒரு வேளை நம் கல்யாணம் நடக்காவிட்டால், நான் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே காலத்தை ஓட்டி விடுவேன். உங்களை மறந்து என்னால் இருக்க முடியாது. நீங்கள் எப்படி?” என்றாள்.

“முதலில் இது போல பேசுவதை நிறுத்து?” என்று கோபமாக சொன்னேன்.

“சொல்லுங்கள்” என்று நச்சரிக்கவே, “அது எப்படி நீ இல்லாமல் நான். கடைசி வரை? பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுவேன்” என்றவுடன், என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.

காலையில் அவளை சென்னைக்கு பஸ்ஸில் ஏற்றிவிட்டேன்.

அதுதான் நான் அவளை கடைசியாக பார்த்தது. அதன்பிறகு அவள் லால்குடிக்கு வரவே இல்லை. தேடாத இடம் கிடையாது. கொஞ்ச நாளில் அவளது பாட்டியும் கிளம்பி சென்னைக்கே போய்விட்டாள். ஏன் சென்றாள்? இடையில் என்ன நடந்தது? ஏன் அன்று இரவு என்னிடம் அப்படி நடந்து கொண்டாள்? எதற்காக பின் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. எதுவுமே தெரியாமல் தவியாய் தவித்தேன்.

எல்லோரையும் போல நானும் தாடியை வைத்துக்கொண்டு கொஞ்ச நாள் அலைந்தேன். பல வருட காத்திருப்புக்கு பிறகு அம்மாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டேன். பிள்ளைகள் பிறந்தன. காலம் வேகமாக ஓடிவிட்டது.

நினைவுகளிலிருந்து வெளிப்பட்டவன் மணியை பார்த்தேன். மனைவியை பார்த்தேன். குற்ற உணர்ச்சியில் தவித்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

அலுவலகம் விட்டதும். நேராக மனைவி கொடுத்த முகவரியை வைத்துக்கொண்டு, கே கே நகர் சென்றேன். மனம் முழுக்க வேதனையுடன் சென்றேன். அவளுக்கு கொடுத்த வாக்கினை நான் மீறிவிட்டேன். அவள் என்னைப் பார்த்து கேள்வி கேட்டால் என்ன செய்வது? குற்ற உணர்ச்சி என்னைத்தாக்கவே ஒருவித குழப்பத்துடன் வீட்டைத் தேடி சென்றேன்.

நகரின் முக்கிய இடத்தில் இருந்தது அவள் வீடு. அது வீடு அல்ல. மிகப் பெரிய பங்களா. போர்டிகோவில் விலை உயர்ந்த இரண்டு கார்கள். வாசலில் செக்யூரிட்டி. வெளியே செக்யூரிட்டியிடனம் சொல்வதற்காக அருகில் சென்றேன். அருகே ஒரு நேம் பிளேட் இருந்தது. அதில், சிவசங்கரன் MBBS MD என்று இருந்தது. அருகில் யாரோ வருவது போல் இருக்கவே, கூர்ந்து கவனித்தேன். யாரோ ஒருவருடன் … யார் அது நடந்து வருவது…?

 பார்க்காமல் திரும்பி விறுவிறுவென பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
“காதலில் தோற்ற காதலன்கள் நினைப்பது போல் எல்லா முன்னால் காதலிகளும் இருப்பதில்லை”

(Published in kalki 27.04.14)

Feb 11, 2014

எதையாவது?

எழுதாமல் இருக்க முடியாது போல! முதலில் ஃபேஸ் புக் ஸ்டேட்டஸை இங்கே போஸ்ட் செய்கிறேன். இனி தொடர்ந்து எழுத முடியுமா? என்று பார்ப்போம்!

************************************************************************
திஜாவின் “மோகமுள்” ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஒரு வாரம் முழுவதும் யமுனா மனதில் நிறைந்து இருந்தாள். சென்ற வாரம் கும்பகோணம் சென்றிருந்தேன். முன்பு பார்த்ததைவிட அதிக ஆர்வத்துடன், கும்பகோணம், பாபநாசம் பார்த்தேன். நாவலை படிக்கும் போது எத்தனையோ முறை கண்கள் கலங்கினாலும், தங்கம் என்ற அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதை படித்த போது என்னால் தாங்க முடியாமல் அழுதுவிட்டேன்.
 
சென்ற வாரம் ஊரில் இந்த நாவலைப் பற்றி அக்காக்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருமே ஏற்கனவே படித்திருந்தார்கள். நான் நாவலைப் பற்றி ஒரு மணி நேரம் சிலாகித்து பேசியதைப் பார்த்து, மூன்றாவது அக்கா கேட்டாள்:
 
‘இப்போது ஒப்புக்கொள்கிறாயா?”
 
“என்ன?”
 
“நாவல் என்ன? கதைகள் என்றால் என்ன? எப்படி எழுத வேண்டும் என்று?”
 
“ம்ம்ம்ம்”
 
“நீயும் எழுதி இருக்கிறாயே? நீ எழுத ஆரம்பிக்கும் முன் இதை எல்லாம் படித்திருக்க வேண்டாமா?”
 
ஒரு பதில் சொல்ல நினைத்து வேண்டாம் என்று அமைதியாகிவிட்டேன்! அது என்ன பதில் என்று உங்களிடமும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.
 
‘மோகமுள்’ முடித்து ‘57 ஸ்நேகிதிகள்’ படித்தேன். இன்று ‘அம்மா வந்தாள்’ முடித்து ‘பிலோமி டீச்சர்’ கையில் எடுக்கிறேன். நான் வேண்டுமென்றேதான் இதை செய்கிறேன். பார்ப்போம்!!! ஆனால் அம்மா வந்தாளைப் பற்றி சொல்ல வேண்டும்.
 
“அம்மா வந்தாள்” மூன்று நாட்களில் படித்து முடித்தேன். படிக்கும் போது கோபம், எரிச்சல், சந்தோசம், அழுகை என உணர்ச்சிகள் மாறி மாறி வந்தன. இந்த நாவலை நான் இப்பொழுதுதான் படிக்கிறேன். ஆனால் இதே போல ஒரு சிறுகதையை நான் எழுதி இருக்கிறேன். அந்த கதை கூட நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் எழுதினேன். ஆனால் அதற்காக நான் வாங்கிய வசவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த காலத்திலேயே இப்படி என்றால் 1966ல்? எப்படி அதை திஜா எதிர்கொண்டார்? தெரியவில்லை.
 
இதை விடுங்கள். இந்த நாவலுக்கு திரு சுகுமாரன் 2011 டிசம்பரில் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் பாருங்கள்! ஆண்டவா! ஒரு நாவலை இப்படிக்கூட அணுக முடியாமா? அற்புதமான முன்னுரை.
 
திஜாவின் ஒவ்வொரு நாவலும் படித்து முடித்தவுடன் மனதை என்னவோ செய்கிறது. மனம் சரியாக ஒரு வாரம் ஆகிறது! எழுதினால் இப்படி அல்லவா எழுத வேண்டும்!
 
************************************************************************
கடந்த 17 வருடங்களாக விமானத்தில் பல முறை பயணித்து இருந்தாலும், பல அனுபவங்கள் பெற்று இருந்தாலும், சென்ற வார சிங்கப்பூர் பயணம் எனக்கு பயங்கரமான அனுபவமாக அமைந்துவிட்டது. சீட் பெட் அணியும் முக்கியத்துவத்தையும் எல்லோருக்கும் நன்றாக உணர்த்திவிட்டது. ஏற்கனவே விமானம் 30 நிமிடம் தாமதமாக கோலாலம்பூரில் இருந்து கிளம்பியது. ஒரு மணி நேரப்பயணம் என்று கூறினாலும், 45 நிமிடங்களில் சிங்கப்பூரை அடைந்து விடலாம். 40 நிமிட பயணம் முடிந்து இன்னும் சில நிமிடங்களில் தரை இறங்க வேண்டும். ஏறக்குறைய இறங்கிவிட்டது. Laguna National Golf Groundக்கு அருகில் விமானம் வந்துவிட்டது. நான் வழக்கம் போல அன்றைய நாளின் முதல் சந்திப்பைப் பற்றியும் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தேன்.
 
கீழே தரை மிக அருகில். இன்னும் இரண்டு நிமிடம்தான். தரை இறங்கிவிடும். திடீரென ஒரு சத்தம். ரத்த அழுத்தம் மாறுகிறது. என்னவென்று உணர்வதற்குள் விமான மிக வேகமாக மேலே பறக்க ஆரம்பிக்கிறது. மிக அதி வேகமாக. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மரண பயத்தில். எந்த அறிவிப்பும் இல்லை. மிக் உயரத்தில் பறந்து சிங்கப்பூரை தாண்டி சென்று விட்டது. ஏதோ தவறு நிகழ்ந்து இருக்கிறது. என்ன வென்று தெரியவில்லை. எனக்கு மனதில் பயம் இருந்தாலும், ‘இன்று சாக மாட்டேன்’ என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. யாரும் யாருடனும் பேசவில்லை. ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு விமானம் வட்டமாக சுற்றி வந்தது. அப்பொழுது பைலட் ஏதோ கூறினார். சரியாக காதில் விழவில்லை. இறங்கும் போது ஒரு இறக்கை சரியாக திறக்கவில்லை என்று சொன்னது போல் காதில் லேசாக கேட்டது. பின் இன்னும் 8 நிமிடங்களில் தரை இறங்கிவிடுவோம் என்றார். எங்கெங்கோ சுற்றி சிங்கப்பூர் வந்து மீண்டும் Laguna National Golf Groundக்கு அருகில் விமானம் வந்துவிட்டது. இந்த முறை ஒழுங்காக இறங்குமா என்ற அச்சம் இருந்து கொண்டே இருந்தது. முதலில் பயம் இல்லாவிட்டாலும் இந்த முறை என்னையறியாமல் எங்கள் குல தெய்வத்தையும், ஏழுமலையானையும் என்னை அறியாமல் வேண்ட ஆரம்பித்தேன். நல்ல வேளை ஒழுங்காக தரை இறங்கியதால் என்னால் இதை எழுத முடிகிறது இப்போது!!!
 
************************************************************************
வலைப்பூ மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தாலும், குறிப்பிடத்தக்க நண்பர்களுடன் நான் எப்பொழுதுமே தொடர்பில் இருக்கிறேன். அதில் நிறைய பெண் தோழிகளும் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒரு தோழியைப் பற்றி குறிப்பிட வேண்டும்.
 
அவர் அறிமுகமாகி ஒரே வாரத்தில் தன்னுடைய செல் நம்பரை கொடுத்தார். பின் அடிக்கடி பேச ஆரம்பித்தார். அவர் இருந்தது சென்னையில் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில். அவர் ஒரு கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். சில நாட்களுக்கு பிறகுதான் அவர் வயதில் சிறிய பெண் என்று தெரிய வந்தது. அவருடைய கஷ்டங்கள், சந்தோசங்கள், சோகங்கள் எல்லாமே சொல்ல ஆரம்பித்தார். முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் பின் அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் மெயிலிலும், போனிலும் நட்பு தொடர்ந்தது. ஒரு எல்லைக்குள் இருந்ததாலும், ஒரு நல்ல நட்பு என்ற அடிப்படையிலும் பேசிக்கொண்டு இருந்தேன்.
 
ஒரு முறை விளையாட்டாக, “சே, மிஸ் செய்துவிட்டேன். என் வயது மட்டும் குறைவாக இருந்தால் உன் அம்மா அப்பாவிடம் வந்து பெண் கேட்டு இருப்பேன்” என்றேன்.
 
உடனே அவள், “அப்படியா? அவர்கள் ஒப்புக்கொண்டாலும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றாள்.
 
‘‘ஏன்?”
 
“எனக்கு வரப்போகும் மாப்பிள்ளை அஜித் போல இருக்க வேண்டும். உங்களைப்போல கருப்பாக அல்ல” என்று வரப்போகும் மாப்பிள்ளையைப் பற்றி அவள் வைத்திருக்கும் கனவுகளை விளக்க ஆரம்பித்தாள்.
 
நான் ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏன் என்றால் அவள் உண்மையைத் தானே சொல்கிறாள் என்று விட்டுவிட்டேன்.
 
ஒரு நாள் “என் கல்யாணத்திற்கு வருவீர்களா?” என்றாள்.
 
‘அவசியம் குடும்பத்துடன் வருவேன்’ என்றேன்.
 
பின் மூன்று மாதமாக பேசவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் கல்யாண நிச்சயம் ஆகப்போகிறது என்றாள்.
 
திடீரென இரண்டு நாட்களுக்கு முன் கல்யாணம் ஆகிவிட்டதாக கூறி மெயில் அனுப்பியிருந்தாள். ஏன் எனக்கு பத்திரிக்கை அனுப்பவில்லை? என்று குழம்பி போயிருந்தேன்.
 
தோழி மிக அழகானவள்.
 
நேற்று கணவனும் அவளும் இருக்கும்புகைப்படத்தை அனுப்பியிருந்தாள்.
 
அவள் ஏன் என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை? என எனக்கு உடனே புரிந்துவிட்டது.
 
************************************************************************